
7.மக்கட்பேறு
நல்ல மக்களைப் பெறுதல்
61.பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
62.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
63.தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
64.அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
65.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
66.குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
68.தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
69.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
70.மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.
7.மக்கட்பேறு
நல்ல மக்களைப் பெறுதல்
61.அடைய வேண்டிய பேறுகளில் அறிவு மிகுந்த மக்களைப் பெறுவதைப் போன்ற சிறப்புடையது வேறில்லை.
62.நற்பண்புமிக்க மக்களைப் பெற்ற குடும்பத்திற்கு எக்காலத் திற்கும் பழியும், தீமையும் வராது.
63.நம் சொத்து என்பது நமக்குப் பிறந்த நற்குணமுடைய குழந்தைகளே. அச்சொத்து அவரவர் செயலுக்கு ஏற்றவாறே வரும்.
64.தம் குழந்தைகளின் சிறு கைகளால் பிசையப்பட்ட உணவு அமிழ்தத்தைவிடச் சுவை மிகுந்தது.
65.குழந்தைகள் நம் உடலைத் தழுவுதல் உடலுக்கு இன்பம் தரும். அம்மழலையர் சொற்கள் நம் காதுகளுக்கு இன்பம் தரும்.
66.தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேட்காதவர்களே, குழலிசை, யாழிசையை இனிது என்று கூறுவர்.
67.தந்தையின் கடமை தன் மகனைக் கல்வியறிவுடையவன் ஆக்குதலே ஆகும்.
68.நம்மைவிட அறிவு மிக்க குழந்தைகளால், நமக்கு மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் பயன்பெறும்.
69.தன் மகனை நல்லவன் அறிஞன் எனப் பிறர் புகழக் கேட்கும் தாய், அனைப் பெற்ற பொழுதைவிட மிகமகிழ்வாள்.
70.இவன் தவப்புதல்வனோ என்று புகழும்படி வாழ்தலே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.
உரையாசிரியர்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்
தமிழ்ச்செம்மல் பல்திறன்வளர்
இலக்கியமாமணி
முனைவர்
மு.க.அன்வர்பாட்சா
தமிழாசிரியர் (பணி நிறைவு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments