
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய தலைமைத்துவக் கட்டமைப்பு வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மூன்று பிரதான தரப்புகளைச் சுற்றியே சுழல்கிறது: அரசியல்வாதிகள், மௌலவிகள் (மார்க்க அறிஞர்கள்) மற்றும் ஹாஜியார்கள் (சமூக மேல்தட்டுச் செல்வந்தர்கள்).
நவீனகாலச் சவால்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக, அரசியல் உரிமைகள் சார்ந்த கேள்விகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த முத்தரப்புத் தலைமையின் மீது மட்டுமே சமூகம் முழுமையாகத் தங்கியிருப்பது பொருத்தமானதா என்ற கேள்வி மேலெழுந்துள்ளது.
அரசியல் பிரதிநிதித்துவம் என்பது நாட்டின் அதிகார மையங்களில் சமூகத்தின் குரலைப் பதிவு செய்ய அவசியமானது. இருப்பினும், இலங்கை முஸ்லிம் அரசியலில், பெரும்பாலான அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல், கட்சி நலன் மற்றும் தனிப்பட்ட அதிகாரத் தக்கவைப்பு ஆகியவற்றையே முதன்மைப்படுத்துகின்றனர். கல்வி, பொருளாதாரம், சர்வதேச உறவுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த நீண்டகால வேலைத்திட்டங்கள் இவர்களிடம் குறைவாகவே உள்ளன. தேர்தல் காலங்களில் மக்களைப் பிரதேச ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பிளவுபடுத்தும் போக்கு காணப்படுகிறது.
மார்க்க அறிஞர்கள் சமூகத்தின் ஆன்மீக, ஒழுக்கவியல் மற்றும் குடும்பச் சட்ட வழிகாட்டலுக்கு அத்தியாவசியமானவர்கள். ஆனால், நவீன அரசியல் சாசனம், சர்வதேச மனித உரிமைகள், பொருளாதாரக் கொள்கைகள், தொழினுட்பம் மற்றும் சமூகவியல் போன்ற உலகியல் துறைகளில் நிபுணத்துவம் இல்லாத சூழலிலும், அனைத்துச் சமூக முடிவுகளையும் மார்க்க நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலை உள்ளது. ஒரு பிரச்சினை எழுந்த பின்னரே குரல் கொடுப்பது அல்லது உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுப்பது போன்ற போக்குகள், வியூக ரீதியான திட்டமிடலுக்கு தடையாக அமைகின்றன.

'ஹாஜி' என்ற பட்டம் சமூக மரியாதைக்குரியதாகப் பார்க்கப்பட்டாலும், தர்மங்கள் செய்வதும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதும் மாத்திரம் ஒருவரைத் தானாகவே சிறந்த நிர்வாகியாகவோ அல்லது சமூக வழிகாட்டியாகவோ மாற்றிவிடாது. நிதிப் பங்களிப்பை மட்டுமே தகுதியாகக் கொண்டு பள்ளிவாசல் தலைமைகளிலும் சமூக நிறுவனங்களிலும் பதவிகளை வகிப்பது, தகுதியும் திறமையும் கொண்ட புத்திஜீவிகள் புறந்தள்ளப்பட வழிவகுக்கிறது.
இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் மிகவும் சிக்கலானவை. சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு, இளைஞர் வேலையின்மை, கல்வி மறுசீரமைப்பு, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேசிய அளவில் பிற சமூகங்களுடனான நல்உறவைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கு உணர்ச்சிப்பூர்வமான அல்லது பாரம்பரிய தலைமைத்துவம் போதுமானதல்ல.
அரசியல்வாதி, மௌலவி அல்லது ஹாஜியார் என்ற தனிப்பட்ட நபர்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை பின்வரும் தீமைகளை ஏற்படுத்துகிறது. கல்வித் தகுதியும் திறமையும் கொண்ட இளைஞர்களும் தொழில்சார் வல்லுநர்களும் தலைமுறை தலைமுறையாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாரம்பரியத் தலைமைகளிடம் வெளிப்படைத்தன்மையோ அல்லது அவர்களின் முடிவுகளுக்குச் சமூகத்திற்குப் பொறுப்புக்கூறும் முறையோ இல்லை. தரவுகள், ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை சார்ந்த முடிவுகளுக்குப் பதிலாக தனிநபர் விருப்பங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
சமூகத் தலைமை என்பது ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது பட்டமோ சார்ந்ததாக இல்லாமல், நிறுவனமயப்பட்ட கூட்டுத் தலைமையாக (Institutional Collective Leadership) மாற்றப்பட வேண்டும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவச் சீர்திருத்தமானது பல முக்கிய களங்களில் உடனடியாக நிகழ வேண்டியுள்ளது. முதலாவதாக, பட்டம், பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய தலைமைத்துவத் தகுதியை மாற்றி, அறிவு, துறைசார் நிபுணத்துவம், நேர்மை (Merit & Integrity) ஆகியவற்றை முதன்மைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, தனிநபர்கள் அல்லது தனி அமைப்புகளின் தன்னிச்சையான முடிவெடுக்கும் முறையைக் கைவிட்டு, புத்திஜீவிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டுப் பேரவையின் மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, தற்போதைய முதியோர் மற்றும் ஆண் மைய ஆதிக்க பிரதிநிதித்துவத்தை சீரமைத்து, சமூகத்தின் முக்கியமான அங்கங்களான இளைஞர்கள், பெண்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் தெளிவான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.
இறுதியாக, பிரச்சினைகள் எழுந்த பின் மட்டுமே குரல் கொடுக்கும் எதிர்வினை (Reactive) முறையிலிருந்து விலகி, தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்யோசனை மற்றும் தரவு சார்ந்த திட்டமிடலை (Proactive & Data-Driven) உள்ளடக்கிய ஒரு நவீன செயற்பாட்டு முறைக்குச் சமூகம் நகர வேண்டும்.
மாற்றத்திற்கான நடைமுறை சாத்திமான வழிகள்:
1.சட்டத்துறை, பொருளாதாரம், சமூகவியல், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் உள்ள முஸ்லிம் புத்திஜீவிகளைக் கொண்ட சுயாதீனக் கொள்கை ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளும் மார்க்கத் தலைவர்களும் இத்தகைய நிபுணத்துவக் குழுக்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
2. மகல்லா/பள்ளிவாசல் நிருவாகக் குழுக்களில் வெறும் 'ஹாஜியார்கள்' அல்லது பணக்காரர்களை மட்டும் தலைவர்களாக நியமிக்கும் முறையை மாற்றி, கணக்காய்வாளர்கள், ஆசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களை உள்வாங்கும் விதத்தில் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
3. சமூகத்தின் பெரும்பான்மை தொகையினரான இளைஞர்களுக்கும், கல்வி கற்ற பெண் வல்லுநர்களுக்கும் முடிவெடுக்கும் மேல்மட்டக் குழுக்களில் முறையான இடம் வழங்கப்பட வேண்டும்.
4. சிவில் சமூக அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஒருங்கிணைந்த தேசிய ஆலோசனைக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இது எந்தவொரு தனிநபர் அல்லது கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் என்பது உணர்ச்சிவசப்படும் பேச்சுகளிலோ அல்லது பணபலத்திலோ தங்கியிருக்கவில்லை. அது துறைசார் அறிவு, நிறுவனமயப்பட்ட ஜனநாயகம், நேர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவுச் சமூகத் தலைமையிலேயே (Intellectual & Professional Leadership) தங்கியுள்ளது என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments