Ticker

6/recent/ticker-posts

நாட்டில் முதலாவது ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்


அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த ட்ரோனின் முதலாவது வௌ்ளோட்டப் பயணம் இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ட்ரோன், சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறனைக் கொண்டுள்ளது.

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான EHang அறிமுகப்படுத்தியுள்ள இந்த ட்ரோனை ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக இலங்கை திகழ்கிறது. விமானி இல்லாமல் மின்சாரத்தின் மூலம் செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கக்கூடிய விமானங்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்ட செயற்பாட்டுப் பகுதியாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளும் பாதுகாப்பு ஒப்புதல்களும் கிடைத்த பின்னர், இவ்விமானங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், சிகிரியா மற்றும் பிதுரங்கல பகுதிகளுக்கு மேலாகச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள ஹோட்டல்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது.

மேலும், சுற்றுலாத்துறை மற்றும் கடல்சார் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளன.

thinakaran


 


Post a Comment

0 Comments