Ticker

6/recent/ticker-posts

ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்த நாடுகளால் மற்றுமொரு அமைதி திட்டம்: வார இறுதிக்குள் முன்னேற்றம் குறித்து நம்பிக்கை!


ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு இடையே, மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தானும் கட்டாரும் புதிய அமைதித் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளனர். மோதல் மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, இரு தரப்பின் முக்கிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடுநிலையான அடிப்படையில் அமைந்துள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (20) முறைப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இரு தரப்பிடமிருந்தும் ஆரம்பத்தில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர், டெஹ்ரானில் ஈரானிய முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து முன்மொழிவை சமர்ப்பித்தார்; பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தகவல் வட்டாரங்கள் டீ.என்.ஏ. செய்தி நிறுவனத்திற்கு இதை உறுதிப்படுத்தின.

இருப்பினும் இரு தரப்பும் முழுமையான சமரச மனநிலையை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அமெரிக்கா ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது; அதற்கு மாறாக, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள தனது சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஈரான் கோருகிறது.

கடந்த ஜூன் மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது விரிவான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருந்தன, ஆனால் அடுத்த மாதம் அந்த ஒப்பந்தம் முறிந்ததால் முன்னேற்றம் தடைப்பட்டது. அதன்பின் பதற்றம் மேலும் அதிகரித்தது: ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன, நவம்பர் தேர்தல்களுக்குப் பின்னர் மீண்டும் போர் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்தார்.

புதிய திட்டத்தின் முக்கிய அம்சம் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச அணுசக்தி நிறுவன அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி ஈரானிய அணு நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் இணங்கும்; அதற்குப் பதிலாக, கட்டாரில் முடக்கப்பட்டுள்ள 6 பில்லியன் டொலர் சொத்தின் வருவாயை ஈரான் பெற அமெரிக்கா அனுமதிக்கும். இந்த ஒப்பந்தம் குறித்து இந்த வார இறுதியில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரக்கூடும் என்று ‘தி நியூ அரப்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏழு மாதங்களாக நீடிக்கும் பிராந்திய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இரு மத்தியஸ்த நாடுகளும் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றன. ஈரான் வெளிவிவகார அமைச்சு அசிம் முனீருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்; ஈரான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறினார். ஈரானும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது என்று பதிலளித்துள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் சமீபத்திய டெஹ்ரான் விஜயத்துடன் பிராந்திய இராஜதந்திரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த முயற்சிகள் வெற்றி பெறுமா என்று முழு உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

மீஹன் 


 


Post a Comment

0 Comments