Ticker

6/recent/ticker-posts

அதிகாலை வெயில் இல்லையாம்... வைட்டமின் D கிடைக்க ‘பெஸ்ட்’ டைம் இதுதானாம்!


அதிகாலை வெயிலில் கிடைக்கும் சூரிய ஒளி, மிகக் குறைந்த அளவே வைட்டமின் டி-யை கொண்டிருப்பதாக சொல்கின்றனர் மருத்துவர்கள். இதன் பின்னணி என்ன? எந்த நேர வெயிலில் வைட்டமின் டி கிடைக்கும்? இங்கே தெரிஞ்சுக்கோங்க!

பொதுவாக அதிகாலைச் சூரிய ஒளியில்தான் வைட்டமின் டி கிடைக்கும் என்று நம்மில் பலரும் நினைப்போம். ஆனால் அறிவியல் பூர்வமாக பார்த்தால், இது உண்மை இல்லையாம். பின் வேறு எந்த நேரத்தில் வைட்டமின் டி போதுமானவளவு கிடைக்கும்? ஏன் அதிகாலையில் கிடைப்பதில்லை? எவ்வளவு நேரம், எந்த நேரத்தில் சூரிய ஒளியை பெறுவது நல்லது? இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்!

இந்தியாவில் போதிய சூரிய ஒளி ஆண்டு முழுவதும் கிடைக்கும் போதிலும், வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆம், இந்தியாவில் சுமார் 70% மக்கள் வரை வைட்டமின் டி குறைபாட்டுடன்தான் இருக்கின்றனர். பல்வேறு மருத்துவ மற்றும் தேசிய ஆய்வுகளின்படி, தோராயமாக 50% முதல் 80% இந்தியர்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அளவைக் கொண்டிருக்கவில்லை. அதிலும் ஆண்களை விட பெண்களே வைட்டமின் டி குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றன சில தரவுகள்.

இதற்கு முக்கியக் காரணங்களாக அதிவேக நகரமயமாக்கல், உடலை முழுமையாக மூடும் ஆடைகள் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற நவீன வாழ்வியல் மாற்றங்களால் இயற்கையான சூரிய ஒளி உடலில் படாமல் போவதும், அன்றாட உணவுகளில் வைட்டமின் டி மற்றும் பால் பொருட்கள் சார்ந்த ஊட்டச்சத்துக்கள் போதிய அளவு இல்லாதது ஆகியவை உள்ளன.

இவற்றை சொன்னால், ‘அதிகாலை வேளையில் வெயில் உடலில் படும்படி நடக்க வேண்டும்’ என்று நம் வீட்டு பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்வார்கள். ஆனால் அதிகாலை வெயிலில் கிடைக்கும் சூரிய ஒளி, மிகக் குறைந்த அளவே வைட்டமின் டி-யை கொண்டிருப்பதாக சொல்கின்றனர் மருத்துவர்கள். அது ஏன், வைட்டமின் டி எந்த நேரத்தில் அதிகம் கிடைக்கும்? நம் உடலுக்கு வைட்டமின் டி கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி?  என்பதுபற்றி தன் சமூகவலைதளப்பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார் மருத்துவர் அருண்குமார்.

மருத்துவர் கூற்றுப்படி, வைட்டமின் டி உற்பத்திக்குக் காரணமான யுவிபி (UVB) கதிர்கள் சூரியன் நம் தலைக்கு மேல் செங்குத்தாக இருக்கும் மதிய நேரத்தில்தான் பூமியை அதிகளவில் வந்தடைகின்றன. அதிலும் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை வரும் வெயில்தான் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சூரியனின் கோணம் மிகச் சரியாக இருப்பதால், UVB கதிர்கள் தீவிரமாக இருக்கும். இது தோலில் உள்ள கொழுப்பை மிக வேகமாக வைட்டமின் டி-யாக மாற்றுகிறது. என்கிறார் மருத்துவர்.

இதுவே அதிகாலை 6 – 10 மணிக்குட்பட்ட நேரம் மற்றும் மாலை 3 - 6 மணிக்கு உட்பட்ட நேரம் ஆகிய சமயத்தில் வரும் சூரிய ஒளியில் பெரும்பாலும் யுவிஏ (UVA) கதிர்களே இருக்கும். இவை உடலின் சுறுசுறுப்பிற்கும், நல்ல தூக்கத்திற்கும் (மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்திக்கு) உதவுமே தவிர, வைட்டமின் டி உற்பத்திக்கு பெரிய அளவில் உதவாது என்கின்றனர் நிபுணர்கள்.

மதிய வேளையில் சுமார் 30  - 40 நிமிடங்களாவது இந்த வெயிலில் இருப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய உதவும் என்கிறார் மருத்துவர். அதிலும் முகம், கைகள் மற்றும் கால்களில் நேரடியாக வெயில் படும்படி இருப்பது அவசியம்.

வேலை நேரத்தில் எப்படி போவது என்பவர்களுக்கு, மருத்துவர் ஒரு ஆலோசனையும் கூறியிருக்கிறார். பணி நேரத்தில் மதிய உணவுக்குப் பின்னர், அலுவலக வளாகத்திலேயே 10 – 15 நிமிடங்களுக்கு கைகள் மற்றும் முகத்தில் வெயில் படும்படி நடப்பதுதான் அந்த ஆலோசனை. இவையன்றி காலை தேநீர் இடைவேளை செல்கையில் மற்றொரு 15 நிமிடங்களை சமன் செய்து கொள்ளுங்கள்!

இப்படி நடக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக, சன்ஸ்கிரீனை தவிர்க்க வேண்டும். ஏனெனில், சன்ஸ்கிரீன் வைட்டமின் டி உற்பத்தியை 99% வரை தடுத்துவிடும். வைட்டமின் டி எடுத்த பிறகு சன்ஸ்கிரீன் தடவிக் கொள்ளலாம்.

இவை அனைத்துக்கும் பிறகும் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பது பரிசோதனையில் உறுதியானால், சூரிய ஒளியை மட்டுமே நம்பியிருக்காமல், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் தகுந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

news18


 


Post a Comment

0 Comments