
10.இனியவை கூறல்
இனிய சொற்களைப் பேசுதல்
1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
2.அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்.
3.முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
10.இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
10.இனியவை கூறல்
இனிய சொற்களைப் பேசுதல்
1.குற்றமற்ற, அன்பு கலந்த இனிய சொற்களே உண்மையை உணர்ந்தோரின் வாய்ச்சொற்களாகும்.
2.மனமகிழ்வுடன் ஒரு பொருளைக் கொடுப்பதைவிட முகம் மலர்ந்து இனிய சொற்கள் பேசுவதே நன்மையானதாகும்.
3.முகமலர்ச்சியும், கனிந்தப் பார்வையும், இன்சொல் கூறுவதுமே வாழ்க்கை அறமாகும்.
4.அனைவரிடத்தும் இனிய சொற்களைப் பேசுபவனிடம் துன்பம் தரும் வறுமை வராது.
5.பணிவும், இனியசொற்களுமே ஒருவனுக்கு அழகாகும். பிறவற்றால் ஏற்படும் அழகு அழகல்ல.
6.நன்மைதரும் இன்சொற்களையே விருப்பத்துடன் கூறுபவர்க்குத் தீயவைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.
7.பண்பட்ட இனியசொற்கள் பேசுபவர்க்கும், கேட்பவர்க்கும் மகிழ்வைத் தந்து, நன்மையையும் தரும்.
8.சிறுமைத்தனம் நீங்கிய இனியசொற்கள் ஒருவனுக்கு வாழும்போதும், மறைந்த பின்னரும் இன்பம் தரும்.
9.இனியசொற்கள் இன்பம் தருவதைக் காண்பவன், பிறர் மனத்தைக் காயப்படுத்தும் கடுங்சொற்களைக் கூறக்கூடாது.
இனியசொற்களைவிடுத்து, கடுஞ்சொற்களைப் பேசுவது, பழமிருக்கக் காய்களைத் திருடித் தின்பது போன்றது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments