
11.செய்நன்றி அறிதல்
பிறர் செய்த நன்மையை மறவாதிருத்தல்
1.செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
4.தினைத்துணை நன்றி செயினும்
பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
5.உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
6.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
9.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
11.செய்நன்றி அறிதல்
பிறர் செய்த நன்மையை மறவாதிருத்தல்
1.நாம் ஓருதவியும் செய்யாதிருந்தும் நமக்குப் பிறர் செய்த உதவிக்கு இவ்வுலகையும் வானையும் கொடுத்தாலும் ஈடாகாது.
2.உரிய நேரத்தில் ஒருவர் செய்த உதவி சிறிதானாலும் அந்த உதவியின் பயன் உலகைவிடப் பெரிது.
3.பயன் கருதாமல் ஒருவர் செய்த உதவியின் பயனை எண்ணிப் பார்த்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிது.
4.தமக்குஒருவர் சிறுஉதவி செய்யினும் அதன்பயன் அறிந்தவர் அவ்வுதவியைப் பெரிய உதவியாகக் கருதுவார்கள்.
5.உதவி என்பது உதவிய பொருளைப் பொறுத்தது அன்று; அந்த உதவியைப் பெற்றவரின் தகுதியைப் பொறுத்ததாகும்.
6.குற்றமற்றவரின் உறவை மறக்கக்கூடாது. துன்பநிலையில் உதவியவரின் நட்பை விட்டுவிடவும் கூடாது.
7.தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பை ஒருவர் வழிவழியாக என்றும் நினைத்துப் பார்ப்பார்கள்.
8.ஒருவர் செய்த உதவியை மறப்பது நன்மை தராது. அதுபோல் ஒருவர் செய்த தீமையை அப்போதே மறப்பது நன்மை தரும்.
9.ஒரு நன்மை செய்தவர் பின்பு கொடியத் துன்பம் செய்தாலும், அத்துன்பத்தை அவர்செய்த நன்மையை முன்னிட்டு மறந்துவிட வேண்டும்.
எந்த நற்செயலைச் செய்யாது தவறினாலும், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே கிடையாது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments