
இன்னா நாற்பது -37.
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.
விளக்கம்:
- நம் மனதைக் கவர்ந்த மலர் நறுமணம் இல்லாமல் இருப்பது துன்பமாகும்.
- மறு பக்கத்து கரை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை அறியாமல் நீரில் இறங்குவது துன்பமாகும்.
- எதற்கும் பொருள் அறியாதவர்கள், அறிஞர்கள் கேட்கும் கேள்விகளை எதிர் கொள்வது துன்பமாகும்.
- சிறியவர்கள் மீது சினம் கொள்ளுதல் துன்பமாகும்.
இன்னா நாற்பது -38
பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.
விளக்கம்:
- அடுத்தவன் மனைவியை, விரும்பும் அறியாமை துன்பமாகும்.
- வீரம் இல்லாத மன்னன் போர்க்களம் செல்வது துன்பமாகும்.
- வேகமெடுத்து ஓடுகிற, கடிவாளம் இல்லாத ஒரு குதிரையில் ஏறுவது துன்பமாகும்.
- திறமையில்லாதவன் செய்யும் செயல் துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments