
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?. முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" என்று விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக இன்னொரு பதிவில், "நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோيுள்ளன. ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!" என்று சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி விமர்சித்திருக்கிறார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments