Ticker

6/recent/ticker-posts

நாம் வாழ்ந்த காலத்தைவிட, நாம் வாழ்ந்த விதமே வரலாற்றில் நிலைத்திருக்கும்.!


“வாழ்வின் மாண்பு நாம் எங்கே வாழ்கிறோம் என்பதில் இல்லை; எவ்வாறு வாழ்கிறோம் என்பதில்தான் உள்ளது.” குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் வாழ்ந்தாலும், மனிதனின் உண்மையான உயர்வைத் தீர்மானிப்பது அவனது செல்வச் செழிப்போ, பதவியோ, சமூக அந்தஸ்தோ அன்று; அவனது நற்பண்புகளும், உயரிய நடத்தையும், மனிதநேயமும், ஒழுக்க நெறிகளுமே ஆகும். உலகம் ஒருவரின் வெளிப்புற தோற்றத்தையோ, பொருளாதார நிலையையோ கண்டு நீண்ட காலம் மதிப்பதில்லை; மாறாக அவரது உன்னதமான அடையாளத்தைத் தீர்மானிப்பது அவரது நடத்தையும் நற்பண்புகளுமே ஆகும்.

நற்பண்புகள் என்பவை காலத்தின் சுழற்சியில் கரைந்துபோகும் ஆடம்பர அணிகலன்கள் அல்ல; அவை மனித குலத்தை நாகரிகத்தின் நெடும்பாதையில் தளராது வழிநடத்தும் துருவ நட்சத்திரங்கள். மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தி, அவனது வாழ்க்கைக்கு ஒளியூட்டி, சமுதாயத்திற்கு அமைதியையும் ஒற்றுமையையும் வழங்கும் விலைமதிப்பற்ற செல்வங்களாக அவை திகழ்கின்றன. கல்வி அறிவை வழங்கலாம்; செல்வம் வசதிகளை அளிக்கலாம்; ஆனால் நற்பண்புகளே மனிதனை முழுமையான மனிதனாக மாற்றுகின்றன.

மனித வாழ்வின் உயர்ந்த இலட்சியம், உள்ளத்தில் உதிக்கும் நற்பண்புகளுக்கும் புறத்தில் வெளிப்படும் நடத்தைக்கும் இடையிலான இடைவெளியை முற்றிலுமாக நீக்குவதில்தான் இருக்கிறது. உள்ளத்தில் ஒன்று, செயல்களில் ஒன்று என்ற இரட்டை நிலை மனிதனின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. மாறாக, எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்கும் மனிதனே உண்மையான பண்பாளன். அறத்தை நெஞ்சார நேசித்து, விழுமியங்களை வாழ்வின் வழிகாட்டிகளாகக் கொண்டு, கறையற்ற ஒழுக்கத்தோடு வாழ்வதே மனிதன் தனக்கும், தன்னைச் சார்ந்த சமூகத்திற்கும் செய்யும் காலத்தால் அழியாத பெருந்தொண்டாகும்.

நற்பண்புகள் என்பவை வெறும் ஒழுக்க விதிகள் அல்ல; அவை மனித குலத்தின் நெடும்பயணத்தில் தவறின்றி வழிநடத்தும் வாழ்வியல் தத்துவங்களாகும். அன்பு, இரக்கம், பணிவு, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, பொறுப்புணர்வு, நன்றியுணர்வு, பிறரை மதிக்கும் மனப்பான்மை போன்ற உயரிய பண்புகள் மனித வாழ்விற்கு அழகையும் அர்த்தத்தையும் அளிக்கின்றன. இப்பண்புகளைப் பேணும் சமுதாயமே அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த முன்னேற்றச் சமுதாயமாக விளங்கும்.

இத்தகைய செம்மையான நன்னடத்தையே உலகச் சான்றோர்கள் மனிதனின் உண்மையான அடையாளமாகப் போற்றியுள்ளனர். மனிதநேயம் இல்லாத அறிவு முழுமையடையாது; நற்பண்புகள் இல்லாத செல்வம் நிலைத்திருக்காது; ஒழுக்கம் இல்லாத அதிகாரம் மதிப்பைப் பெறாது. மனிதனை உயர்த்துவது அவனுடைய சாதனைகள் மட்டுமல்ல; அவற்றை அடைவதற்காக அவன் கடைப்பிடித்த அறநெறிகளும் உயரிய பண்புகளுமே ஆகும்.
“சங்கு சுட்டாலும் வெண்மை நிறம் மாறாது” என்ற பழமொழி கூறுவதுபோல், உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமது மேன்மையை இழப்பதில்லை. காலம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளால் நிறைந்திருக்கலாம். ஆனால் உண்மையான நற்பண்புகளும் நேர்மையும் கொண்ட மனிதன் தனது கண்ணியத்தையும் மதிப்பையும் என்றும் காத்துக்கொள்வான். உண்மையான பெருமை செல்வத்திலும் பதவியிலும் இல்லை; அது பண்பிலும் பணிவிலும், நேர்மையிலும் மனிதநேயத்திலும் நிலைத்திருக்கிறது.

வாழ்க்கை நமக்குக் கிடைத்துள்ள மிகக் குறுகியதாயினும் அர்த்தமிக்க ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தில் நாம் விட்டுச் செல்லும் மிகப் பெரிய சொத்து பொருள் அல்ல; நமது நற்குணங்களும் நற்செயல்களுமே. நாம் விதைக்கும் அன்பு, அறம், மனிதநேயம், நற்பண்புகள் ஆகியவை நாளைய தலைமுறைக்கு நம்பிக்கையையும் நல்வழியையும் அளிக்கும் விதைகளாக முளைக்கும்.

எனவே, வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நற்பண்புகளை நம் வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டு, அறத்தை நிலைநிறுத்தி, மனிதநேயத்தைப் பேணி, பிறருக்கு நன்மை செய்யும் வாழ்வை வாழ்வோம். நாம் வாழ்ந்த காலத்தைவிட, நாம் வாழ்ந்த விதமே வரலாற்றில் நிலைத்திருக்கும். நன்மையை விதைத்து, நன்மையை அருவடை செய்வோம்.

காமிலா பாரிஸ்

 


Post a Comment

0 Comments