Ticker

6/recent/ticker-posts

இணைந்த கைகள்...!


கிராமத்தின் ஓரத்தில் 
அழகான ஒரு பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியில் படித்த இரண்டு நல்ல நண்பர்கள் — அருள் மற்றும் காவியா. இருவரும் தினமும் ஒன்றாக பள்ளிக்குச் செல்வார்கள். 

பாடம் படிப்பதிலும், விளையாடுவதிலும், மற்ற நண்பர்களுக்கு உதவுவதிலும் எப்போதும் முன்பிலேயே இருப்பார்கள்.

அருளுக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். காவியாவுக்கு பாடல் பாடுவது பிடிக்கும். 

மதிய நேரம் வந்தாலே, பள்ளி மரத்தடியில் அமர்ந்து அருள் ஓவியம் வரைவான்.

அருகில் காவியா இனிமையாகப் பாடுவாள். 

அதைக் கேட்ட நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகச் 
சுற்றி வந்து அமர்வார்கள்.ஒருநாள் பள்ளியில் “சிறுவர் விழா” நடக்கப் போவதாக ஆசிரியர் அறிவித்தார்.

 ஒவ்வொரு வகுப்பும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்றார்.

அதை கேட்டவுடன் குழந்தைகள் உற்சாகமாக பேசத் தொடங்கினர். சிலர் நடனம் ஆட வேண்டும் என்றார்கள். சிலர் நாடகம் நடத்தலாம் என்றார்கள்.

ஆனால் அருள் மட்டும் அமைதியாக இருந்தான்.

“என்ன அருள்? நீ ஏன் பேசவே இல்லை?” என்று காவியா கேட்டாள்.

அருள் மெதுவாகச் சிரித்தான்.
“நம்ம எல்லாரும் சேர்ந்து ஏதாவது புதுசா செய்யணும்,” என்றான்.

அந்த மாலை இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் யோசித்துக் கொண்டே நடந்தார்கள். 

அப்போது வழியோரத்தில் ஒரு சிறுவன் கீழே விழுந்த புத்தகங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

 உடனே அருளும் காவியாவும் ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார்கள்.

அந்த சிறுவன் மகிழ்ச்சியாக, “நன்றி அண்ணா… நன்றி அக்கா…” என்று சொல்லி ஓடிவிட்டான்.

அந்த நொடியே காவியாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“அருள்! நம்ம நிகழ்ச்சிக்குப் பெயர் கிடைச்சிடுச்சு!”

“என்ன பெயர்?” என்று அவன் ஆவலுடன் கேட்டான்.

“இணைந்த கைகள்!” 

என்றாள் காவியா.

அருளின் முகம் மலர்ந்தது.

அடுத்த நாள் இருவரும் ஆசிரியரிடம் சென்று தங்கள் யோசனையைச் சொன்னார்கள்.
“நாங்கள் எல்லா நண்பர்களையும் சேர்த்து, ஒருவர் மற்றவருக்கு உதவினால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்று ஒரு நிகழ்ச்சி செய்யப் போகிறோம்,” என்றார்கள்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார்.
“அது மிக அருமையான யோசனை!” என்று பாராட்டினார்.

அதன் பிறகு தினமும் பள்ளி முடிந்த பின் குழந்தைகள் ஒன்றாகப் பயிற்சி செய்யத் தொடங்கினார்ள்.

ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிக் கொடுக்கும் காட்சி… நண்பனுக்கு புத்தகம் பகிர்ந்து கொடுக்கும் காட்சி… மரம் நடும் காட்சி… வயதான பாட்டிக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சி…

ஒவ்வொரு காட்சியும் அன்பையும் உதவியையும் சொல்லிக் கொண்டே இருந்தது.

விழா நாள் வந்தது.

பள்ளி முழுவதும் வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களும் கிராம மக்களும் ஆர்வமாக வந்து அமர்ந்திருந்தார்கள்.

அருளும் காவியாவும் மேடையில் நின்றனர்.
“இணைந்த கைகள் உலகத்தை அழகாக்கும்,” என்று குழந்தைகள் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

அதைப் பார்த்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது. சிலர் கைத்தட்டினர். சிலர் சிரித்தார்கள். ஆசிரியர்களின் கண்களில் பெருமை தெரிந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர் மேடைக்கு வந்தார்.
“இன்று நீங்கள் நடித்தது ஒரு நிகழ்ச்சி மட்டும் அல்ல… நல்ல மனசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடம்,” என்றார்.

அருளும் காவியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்.

அன்று மாலை பள்ளி வளாகத்தில் குழந்தைகள் எல்லோரும் கைகளை இணைத்து வட்டமாக நின்றனார்கள்.

அந்தச் சிறிய இணைந்த கைகள்…

அங்கே ஒரு பெரிய மகிழ்ச்சியைக் உருவாக்கியிருந்தனர்.

தளவாய் இ. சாந்தா

 


Post a Comment

0 Comments