
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு புதிய மற்றும் விசித்திரமான செயலி குறித்த யோசனை உலகளவில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு போன்ற நிதிச்சுமைகளைத் தங்களின் சொந்தப் பணத்தில் கோடீஸ்வரர்கள் ஏற்றுக்கொண்டு செலுத்தும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்படவுள்ளது.
டெஸ்டினி ன்ட்லோவு (Destiny Ndlovu) என்ற பயனர் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் இந்தச் சிந்தனையைப் பதிவிட்டார். அதில், நிதி நெருக்கடியில் தவிக்கும் மக்கள் தங்களது நிலுவைக் கட்டண விவரங்களை ஒரு குறிப்பிட்ட செயலியில் பதிவேற்ற வேண்டும் என்றும், மறுபுறம் கோடீஸ்வரர்கள் மற்றும் பெருந்தொழிலதிபர்கள் அந்தப் பட்டியலைப் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமானவர்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எளிய கருத்து இணையத்தில் தீயாய் பரவி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
இந்த யோசனையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக, பிரபல டேட்டிங் செயலிகளில் பயன்படுத்தப்படும் 'ஸ்வைப்' (Swipe) முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கோடீஸ்வரர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, உதவி கோரியவர்களின் விவரங்கள் திரையில் தோன்றும். அவர்களுக்கு உதவ விரும்பினால் வலதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் அந்த நபரின் நிலுவைக் கட்டணத்தை உடனடியாகத் தங்கள் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்த முடியும்.
இடைத்தரகர்கள் இன்றி, ஏழைகளின் தேவைகள் நேரடியாக கோடீஸ்வரர்களால் நிறைவேற்றப்படுவதால் தொண்டு நிறுவனங்கள் மீதான தயக்கம் இதில் இருக்காது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இருப்பினும், போலிப் பதிவுகளைத் தவிர்ப்பது எப்படி, பயனர்களின் தனிப்பட்ட நிதித் தரவுகளின் ரகசியத்தன்மையை எவ்வாறு பாதுகாப்பது போன்ற நடைமுறைச் சவால்கள் குறித்தும் தொழில்நுட்ப நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இணையத்தில் இந்த யோசனைக்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பைத் தொடர்ந்து, இதை வெறும் சமூக வலைதளப் பதிவாக மட்டும் விட்டுவிடாமல், நிஜமான ஒரு மொபைல் செயலியாக (Mobile App) மாற்றும் முயற்சிகளில் சில இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இறங்கியுள்ளனர். வங்கிகள் மற்றும் பல்வேறு சேவை நிறுவனங்களின் கட்டண முறைகளுடன் இந்தச் செயலியை இணைத்து, பாதுகாப்பான முறையில் இதைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments