Ticker

6/recent/ticker-posts

ஈகோவை விட்டொழித்து மனம் மாறிய இளைஞர்... தேடிவந்த மரியாதை!

வேலைகளை சிறப்பாக செய்தால் "படித்தவர், படித்தவர்தான்" என்று சொல்வார்கள். இல்லை என்றால் "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்" என்றுதான் சொல்வார்கள்.

ஒரு ஊரில், படித்த இளைஞர் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் அவர் அளவிற்கு உயர்கல்வி வரையில் படித்தவர்கள் வேறு யாரும் இல்லை. அந்த இளைஞருக்கு, 'படித்தவன் என்ற தலைக்கணம்' இருந்தது. பெற்றோரை கூட மதிக்க மாட்டார். அவருக்கு எந்த வேலை சொன்னாலும், "படித்த நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன் என் கௌரவம் என்னாகறது" என்பார். ஆனால், அவரின் சொந்த வேலைகளைக் கூட ஒழுங்காகச் செய்ய மாட்டார்.

அந்த இளைஞருக்கு வாழ்க்கையை புரிய வைத்து, வரட்டு கௌரவத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என பெற்றோர் விரும்பினர். ஆனால் அந்த இளைஞரின் மனநிலையை அவர்களால் மாற்ற முடியவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகினர்.

ஒருநாள் அந்த இளைஞர், ஆற்றங்கரை மர நிழலில் அமர்ந்திருந்தார். அப்போது மருள் நீக்கியார், அந்த வழியாக சென்றார். அப்போது அந்த இளைஞரைக் கவனித்த அவர், இளைஞரின் முகத்தில் வெறுப்பும் சோகமும் குடிகொண்டிருப்பதை உணர்ந்தார்.

"என்ன தம்பி தனியா உட்கார்ந்து பலமா யோசிச்சிட்டு இருக்கீங்க" என்று கேட்டார். மருள் நீக்கியாரை தலை நிமிர்ந்து பார்த்த. இளைஞர், "வாழ்க்கையே சலிப்பா போகுதுங்க, நம்மள பெத்தவங்களும் புரிஞ்சிக்கல மத்தவங்களும் புரிஞ்சிக்கல" என்றார் சலிப்பாக. இதைக்கேட்டுக் கொண்டே அந்த இளைஞருக்கு அருகில் சென்று அமர்ந்தார் மருள் நீக்கியார்.

என்ன தம்பி ஊரிலேயே அதிகம் படிச்சவரு நீங்க. நீங்கபோயி இப்படி சலிப்படையலாமா? என்றார். உங்க படிப்பால கிடைத்த நல்ல விஷயங்களை இந்த ஊருக்குக் கிடைக்க வேண்டாமா என்று கேட்டார்?. படிப்பும் திறமைகளும் நம்மிடம் அடைபட்டுக் கிடக்காமல், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் செயலாக மாறினால், மதிப்பும் மரியாதையும் தானாகத் தேடிவரும் என்று கூறினார் மருள் நீக்கியார். தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்கள் செய்யும் வேலைகளைவிட, கூடுதலாகவும் சிறப்பாகவும் செய்தால் "படித்தவர், படித்தவர்தான்" என்று சொல்வார்கள். இல்லை என்றால் "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்" என்றுதான் சொல்வார்கள். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார் என விளக்கம் அளித்தார் மருள் நீக்கியார்.

இதனைத் தொடர்ந்து, வேலை செய்யத் தொடங்கினார் அந்த இளைஞனர். ஆனால் மற்றவர்களைப் போல, அவரால், செய்ய முடியமல் போனது. அப்போதுதான் அவர், படித்தால் மட்டும் போதாது தொழில் அனுபவமும் தேவை என்பதை உணர்ந்தார். பின்னாளில், அனுபவத்தையும் படிப்பையும் கொண்டு, தான் செய்யும் வேலைகளில் புதுமைகளை புகுத்தத் தொடங்கினார். தன்னுடன் பணிபுரியும் மற்றவர்களுடன் கலந்துப் பழகினான். இதனால், அவரிடம் இருந்த தலைக்கணம், ஈகோ உணர்வுகள் மாறின. இப்பொழுது அவருக்கு மனப்பூர்வமான அன்பும், மரியாதையும் கிடைத்தன. உண்மையான கௌரவமும் கிடைத்தது. இதனால் பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.

news18


Post a Comment

0 Comments