சிறுவர் உணர்வுகளை அறிந்தவராகவும், மொழி வளம் உள்ளவராகவும், சிறுவர் உபயோகிக்கும் சொற்ப சொற்களை வைத்தே கவிதைகளை இயற்றக் கூடியவராகவும் இருக்க வேண்டியது ஒரு குழந்தைக் கவிஞருக்கான இலட்சணமென்றால், அவை அனைத்தும் கவிஞர் சுபைர் அவர்களிடம் அமைந்திருந்தன என்றே கூறவேண்டும். இந்தியக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்குச் சமனாக இலங்கையில் கவிஞர் சுபைர் ஒப்பிடப்படுகின்றார். அவர் சிறுவர்களுக்காக எழுதிய "மலரும் மனமும்", "எங்கள் தாய்நாடு" போன்ற கவிதைத் தொகுப்புக்கள் இதனைத் துள்ளயமாக எடுத்துக் காட்டுகின்றன. அதுவுமல்லாது காலத்துக்குக் காலம் குழந்தைக் கவிதைகளை பத்திரிகைகள், வானொலி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். 1977ல் அழ. வள்ளியப்பாவின் பாடல் தொகுப்பில் கவிஞர் சுபைர் அவர்களின் பாடலும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த "கவிஞர் சுபைர்அவர்களின் பாலர் பாடல்கள்" என்ற விமர்சனக் கட்டுரையில் பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள், "பாலர்களுக்கு பாடல்களை இயற்றுவதென்பது இலேசான காரியமல்ல. அவர்களது சூழலையும் பகைப்புலத்தையும் செவ்வனே புரிந்து கொண்டு அவர்களுக்கு விளங்கும் வகையிலும் அவர்களைக் கவரும் வகையிலும் அவர்களுடைய ஆளுமை, சுயத்துவம், மொழிவளம், அறிவாற்றல், நல்லொழுக்கம், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் மனப்பாங்கு முதலானவற்றை வளர்க்கும் வகையிலும் அத்தகைய பாடல்கள் அமைவது பொருந்தும்" என்று பாலர் பாடல்களின் இலட்சணங்களைக் கோடிட்டுக் காட்டிவிட்டு, கவிமணி சுபைர் அவர்களின் பாலர் பாடல்களில் சமுதாயப் பிரக்ஞை, சமயப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப் பற்று, மனிதாபிமானம், பண்பாடு பேணும் ஆர்வம், விடுதலை வேட்கை என்பன ஒருசேர இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
நாட்டுப் பாடல்கள்:
நாட்டுப்பாடல்களின் தாயகம் என்று கருதப்பட்ட கிழக்கிலங்கையுடன் கவிஞர் சுபைர் அவர்களுக்கு மிகக் குறுகிய தொடர்பே இருந்தபோதிலும், அக்கால கட்டத்தில் வெளியான நாட்டுப் பாடல்களில் அவர் தம் உள்ளம் மயங்கி, தனது கற்பனை வளத்தைக் கொண்டு சொற்சித்திரங்கள் பலவற்றைத் தீட்டினார். அவை இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, தென்னிந்திய, மலேசிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. பின்னர், அவற்றை ஒன்று சேர்த்து "கண்ணான மச்சி" என்ற பெயரில் 1969ல் நூலுறுப்படுத்தினார். கள்ளமில்லா மக்களின் உள்ளத்து ஆசைகள், உணர்வுகள், ஊடல்கள், இக்கிராமியக் கவிதைகளின் தொகுப்பிலே படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
கவிஞர் சுபைர் அவர்கள் வெறுமனே நுனிப்புல் மேயும் எழுத்தாளராக இருக்கவில்லை. இலட்சிய வேட்கை கொண்டவராகவே சமுகம் அவரை மதித்தது. அதற்குக் காரணம் வெறுமனே கவிதைகளை மாத்திரம் எழுதுவதில் நின்றுவிடாது, காலத்தின் தேவைக்கேற்ப கட்டுரைகளையும் அவர் எழுதிக்கொண்டிருந்தமையே.
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஓர் எழுத்தாளனுக்கு அவனது கருத்துக்களை கோடிட்டுக் காட்ட உதவும். ஆனால் ஒரு கட்டுரையானது அவன் சமுதாயத்திற்குக் கூற விரும்பும் ஒட்டுமொத்தமான விசயங்களை சித்திரமாக சமூகத்தின் பார்வைக்கு எத்திவைக்க உதவும். இந்த வகையில்தான் அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. காலத்தின் தேவைக்கேற்பவே அவர் கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் எழுதிக் கொண்டிருந்தார்.
(தொடரும்)




0 Comments