தமிழ் இலக்கியத்தின் மாண்பிலும், மாட்சியிலும் தன்னைப் பறிகொடுத்த கவிஞர் அவர்கள் தான் தமிழ் இலக்கியத்தில் கண்டெடுத்தவற்றை வாசகர்கயோடு பகிர்ந்துகொள்வான் வேண்டி இஸ்லாமியத் தமிழ் புலவர்களையும்; அவர் தம் கவிதைகளையும் தனது கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார். ஒரு நல்ல கட்டுரையாளனுக்குரிய சகல தகைமைகளும் கவிஞரிடம் இருந்தமையால், அவரது கட்டுரைகள் அக்காலத்தல் பெரும் வரவேற்புப் பெற்றன.
தனது கட்டுரைகளினால் அவர் சாதித்தவைகள் பல. இதில் குறிப்பிடத் தக்கதாக அமைந்தமையாக அறிஞர்கள் பலருக்கு பாராட்டு விழாக்கள் ஏற்பாடுகளும், முத்திரை வெளியிட வைத்தமையும். கவிஞர்அப்துல் காதர் லெப்பை, பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றோருக்குப் பாராட்டு விழாக்களும், அறிஞர் சித்தி லெப்பை அவார்களுக்கு முத்தரை வெளியீடும் கவிஞரின் அயரா உழைப்பிலேயே நடந்தேறியது. இஸ்லாமிய இலக்கியத்தையும், இஸ்லாமியப் புலவர்கள் பற்றிய விபரங்கள் அக்காலப் பாடநூற்களில் சேர்க்கப்பட, இவரது கட்டுரைகளின் உந்துதலும் முக்கிய காரணமாக இருந்தது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் செம்மையையும் செழுமையையும் பற்றி அறியாமை இருள் அகற்றும் புனித பணியில் பூரணமாக ஈடுபடாது, பொதுவாக நாமறிந்த புலவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பதைவிட, உமருப் புலவர், சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், அப்துல் காதர் நெய்னா லெப்பை ஆலிம் ஆகியோர் பற்றியும், அவர்களின் பாக்கள் பற்றியும் கட்டுரைகளை எழுதி தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மகாகவி இக்பால் பற்றியும் அவர்தம் ஆக்கங்கள் பற்றியும் தனது கட்டுரைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
வாசகர் பாராட்டுக்களினால் தூண்டப்பட்ட கவிஞர் சுபைர் அவர்கள், தனது வானொலி உரைகள், பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த தனது கட்டுரைகளைத் தொகுத்து 1989ல் "இலக்கிய மலர்கள்" என்ற நூலை வெளியிட்டார். இதன் உள்ளடக்கமானது இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் , புலவர்களையும் அறிமுகப்படுத்துவதாக அமைநத்மையால், அவற்றைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை மக்களுக்கு ஊட்டின.
உரையாசிரியர்:
இலங்கையில் பரீட்சைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சீராப்புராணம் - பத்றுப் படலம் என்ற முதல் இஸ்லாமிய நூலுக்கு உரையெழுதி, முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இஸ்லாமிய இலக்கிய நூல்கள் பாடசாலைகளில் அறிமுகப்படுததுவற்கு எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டாளர்:
தம் சமூகத்திற்குத் தரமான நூல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில், தம்முடைய ஆக்கங்களைப் பிரசுரிப்பது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், தமது காலநேரத்தைப் பயன் படுத்தி தம் சொந்தப் பணத்தில் பிறர் ஆக்கங்களை வெளியிடுவதில் கவிஞர் சுபைர் முன்னின்றுள்ளார்.
ஜாவீது நாமா, இக்பால் இதயம், ருபய்யாத், இஸ்லாமியத் தென்றல் இரசூல் சதகம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச் சுடர் போன்ற தரமான நுற்களை அவர் பதிப்பித்துள்ளார். சொந்தமாக நூல்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் தமிழ் வாசகர்களிடம் - குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் அரிதாக இருந்த நிலையிலும் கூட, தரமான ஆக்கங்களுக்கு நூலுருவம் கொடுத்து, அவற்றைச் சமுதாயத்தற்கு வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பிரசுரித்தார். விற்பனை அருகி, அவற்றில் அவர் நட்டமே அடைந்தபோதிலும், அதனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.
ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும், தமிழ் தழுவல்களிலும் பிழையாகச் சித்தரிக்கப்பட்டிருந்த உமர்கையாமை, இலங்கை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்களிடம் கோரி, உமர்கையாமின் ருபய்யாத்தை அற்புதமாக மொழிபெயர்த்து வெளியிட்டார். இது 1965ல் கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பைக்குச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கவிஞர் சுபைர் அவர்களின் மற்றுமோர் சேவை, கடந்த நூற்றாண்டின் ஆரம்பத் தராப்தங்களில் காத்தாங்குடி முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய திருமணச் சம்பிரதாயங்களையும், மற்றும் சடங்குகளையும் சித்தார்க்கும் "செய்னம்பு நாச்சியார் மான்மியம்" என்ற கவிதைத் தொடரை மணிக்குரலில் தொடராக வெளியிட்டுப் பின்னர் நூலுருவில் பிரசுரித்ததாகும்.
மலர்ந்த வாழ்வு, காலத்தின் குரல்கள், மலரும் மனமும், கண்ணான மச்சி, என்பன அவரால் இயற்றப்பட்டு, நூலுருவில் வெளிவந்த சிறந்த நூல்களாகும்.
பட்டமும் பாராட்டுக்களும்:
1981. 11. 11 ல் "கவிஞர் சுபைர் பாராட்டு விழா" நாடாளுமன்ற சபாநாயகர் அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெற்றபோது, "ஈழத்துக்கவிமணி" என்ற பட்டத்தை யாழ். பல்கலைக்கழக துணைவேநந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வழங்கினார்.
1991 ல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செயப்பட்ட வாழ்வோரை வாழ்த்துவோம் பாராட்டு விழாவின்போது, கவித்தாரகை பட்டம் வழங்கப்பட்டது.
மலேசியத் தழிழறிஞர் பட்டர்வேர்த் ஜெய்னுதீன் அவர்களின் தலைமையில் இயங்கும் கவிமாலை இலக்கிய அமைப்பு "இலக்கியமணி" என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது.
1993ம் ஆண்டு தென்னிந்திய ஐயம்பேட்டையில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாட்டில் கௌரவப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், சுகயீனம் காரணமாக சமுகமளிக்காததால், அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கொழும்பு "ரமதா ரெனய்ஸான்ஸ்" ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு விழாவின்போது, அன்றைய பாராளுமன்றச் சபாநாயகர் அல்ஹாஜ் எம். எச். முஹம்மத் அவர்களால் பொன்னாடைபோர்த்தியும், இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களால் விருது வழங்கியும், வீடடைப்புத்துறை அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களால் பொற்கிழி வழங்கியும் பாராட்டப்பட்டார்.
கவிஞர்சுபைர் அவர்கள் கவிதை, சிறுவர் பாக்கள், நாட்டுப் பாடல்கள் ஆகியவற்றுக்கு வழங்கியுள்ள பங்களிபானது கவித்துறையில் நீங்காத நிலையான ஓh; இடத்தை தமிழ்பேசும் நல்லுலகில் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இரண்டொரு கவிதைகளை மட்டும் எழுதிவிட்டுப் போலித்தனமாக தானும் ஒரு கவிஞர் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகில் இவர் நிரந்தரக் கவிஞராக, உண்மைக் கவிஞராகப் போற்றப்பட்டார். தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பணி காரணமாக அவர் ஓர் அறிஞராக மதிக்கப்பட்டார்.
அவர் எம்மை விட்டும் மறைந்துவிட்ட போதிலும் அவரின் இலக்கியப் பங்களிப்பின் விசாலத் தன்மை சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு, முழுமையான முறையில் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தமிழ் இலக்கியம் வளர்க்க இன்றைய நமது தலைமுறையினர் திடம் பூணவேண்டும்.
முற்றும்
(நன்றி: தினகரன் வாரமஞ்சரி: 16.05.2010, 23.05.2010 , 30.05.2010.)




0 Comments