கயிற்றுக் கட்டில் ...!

கயிற்றுக் கட்டில் ...!

எழில் கொஞ்சும் பண்ணை வீடு சற்றே கலையிழந்து சோக மயமாக காட்சி அளித்தது . 

15 நாளாக உயிர் போகாம தொண்டை க்கும் நெஞ்சுக்கும் இழுத்துகிட்டு இருக்கு என்று சுத்தி இருக்கும் உறவுக்காரர்கள் தகவல் தந்ததும் முனுசாமி ஓடோடி வந்தார் . கடைசியாக வாழ்வின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் ஆருயிர் நண்பனை பார்ப் பதற்கு ...!

பல வண்ணத்தில் காலணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசலை அடைத்திருந்தது .  மூன்று காலில் சரக் சரக் என்ற செருப்பை தேய்த்தபடி நடந்து வந்த முனுசாமி ஒரு இடம் தேடி காலணியை விட்டு  விட்டு வீட்டுக்குள் நுழைந்தார் .

கயிற்றுக் கட்டிலில் நடைபிணமாய் கிடந்தார் ராமசாமி . தொண்டையை செருமிய   முனுசாமி... ராமசாமியின் கைகளைப் பற்றி ஏப்பா என்னை அடையாளம் தெரியுதா என்று கேட்டார் . ராமசாமியின் கண்கலங்கி விழி நீர் வழிந்தது . பற்றியிருந்த கைகளின் இறுக்கம் கூடியது .

பால்யகால சினேகிதன் ... பழங்கதைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ... தானாய்  பகிர்ந்துகொண்டார் .

நண்பன் கூறிய ஒவ்வொரு நிகழ்வுகளையும்  நினைவுகளையும் பின்னோக்கி அசை போட்டு ரசித்துக்கொண்டிருந்த ராமசாமியின் உதடுகள் தானே சிரித்தது .
  
நண்பன் சிரித்ததை பார்த்து மகிழ்ந்த முனுசாமி எப்படி  வாழ்ந்த மனிதன் இப்படி கிழிந்த நாராய்  இருப்பதைப் பார்க்க மனது வலிக்கிறது என்று கலங்கினார் 75 வயது உயிர்த்தோழன் முனுசாமி ...!

ராமசாமியின் முகம் மாறுவதை கண்டு சரி சரி விடு என்று பேச்சை மாற்ற முற்பட்டார் முனுசாமி . ஏப்பா ... இரண்டு மாசத்துக்கு முன்ன ஆனந்தியை புதுக்கோட்டையில் பார்த்தேன்ப்பா ..., குழந்தைகள் கணவரோடு மகிழ்வாக இருக்கா .... அன்பா பேசினா உன்னையும் கேட்டாப்பா .... என்றதும் உதடு துடித்தது .... 

தட்டுத்தடுமாறி .... ஆ ..ஆனந்த்... ஆனந்தி .... என்றதும் .... பெரிய மூச்சை இழுத்தார் .... மூச்சை விட மறந்து விட்டார் போலும் மூர்ச்சையாகி விட்டார் ...!

அடப்பாவி ....! ஆனந்தி தான் உன் நெஞ்சுக் குழிக்குள்  சிக்கி இருந்தாளா என்று கேட்டபடி கண்களை மூடி விட்டு ... 

முடிஞ்சிருச்சு...ப்பா.... என்று கம்மிய  குரலில் கூறிவிட்டு தோளில் கிடந்த துண்டை உதறி வாயை பொத்தியபடி வெளியேறினார் ....!

சற்று நேரத்திற்குள் ...!

வெட்டவெளி பொட்டல் உறவினர்கள் புடைசூழ கயிற்றுக் கட்டிலில் அலங்காரமாய்  இறுதி அஞ்சலிக்காக கிடத்தி வைக்கப்பட்டிருந்தார் ராமசாமி.

கூட்டம் அலைமோதியது ...! 

ஆனந்திக்கும் தகவல் சொல்லப்பட்டது ...!

இரண்டு நாட்களுக்குப் பிறகு ...

சுவரோரம் முற்றத்தில் கயிற்றுக் கட்டில்  ராமசாமியின் படம் மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்தது . பக்கத்தில் அகல் விளக்கு சுடர் விட்டுக்கொண்டிருந்தது . 

மாலையுடன் வந்தாள் ஆனந்தி ...!

மலையை படத்திற்கு  போட்டுவிட்டு  மௌனமாய் கட்டிலின் கால் பக்கம் அமர்ந்தாள் . 

சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ராமசாமியின் கைதடி .... சரிந்து  ஆனந்தியின் மடியில் விழுந்தது ...! 

ஆனந்தி ராமசாமியின் புகைப்படத்தை  நிமிர்ந்து பார்த்தாள் ... இராமசாமி புன்னகைத்தார் ஆனந்தியின் கருவிழியில்...!




Post a Comment

Previous Post Next Post