இதுதான் ஒளி!

இதுதான் ஒளி!

இருளின் ஆளுகையினுள்
தவித்துக் கொண்டிருந்தது
அந்த ஒளி
காதை கிழித்தன சப்தங்கள்
வரிசை கட்டின அழுகைகள்
அனுஷ்டிக்கப்பட்டது மௌனம்
ஆறாக ஓடியது ரத்தம்
உருவப்பட்ட உயிர்களினால்தான்
இருளிலிருந்து தப்பி வந்தது ஒளி
அந்த வெளிச்சத்தில் தான்
ஆச்சரியமாய் வெளிப்பட்டது
ஒளிந்திருந்த நிர்வாணங்கள்
விண்ணைப் பிளந்தன
" உங்கள் நிர்வாணங்களை 
நாங்கள் தான் மாற்றுவோம்"
எனும் புதுப்புது கோசங்கள்
விழிபிதுங்கி தத்தளித்தது ஒளி
பசியை விரட்டுவதாகச்சொல்லி
சிலர் பாகம் வைத்தார்கள்
ஆடை அணிவிப்பதாகச் சொல்லி
சிலர் அடகு வைத்தார்கள்
சுமைகளை இறக்கி வைப்பதாகச் சொல்லி 
சிலர் சூட்சுமமாய் சுரண்டினார்கள்
இன்னும் ஒருபடி மேலேறி 
" நீங்கள் தான் எஜமானர்கள்
நாங்கள் வெறும் வேலைக்காரர்கள்
உங்களுக்கான ஒளியை 
நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்"
என கூவி கூவி பாதைகளில்  
விற்றுவருகிறார்கள் சிலர்
ஒரு முனை துவங்கி மறுமுனைவரை 
மீண்டும் பரவிவருகிறது
இருளின் ஆதிக்கம்
" பாருங்கள் இதுதான் ஒளி" எனும்
வாய்கிழிய வலியுறுத்தும் சப்தங்களும்
ஒருவனின் கரங்களைப் பிடித்து 
இன்னொருவன் கைத்தட்டும் கரவொலிகளும்
வளர்ந்துகொண்டே வர
இந்த சப்தங்களுக்கிடையில்
கழுத்து நெரிக்கப்பட்டு 
கிடக்கின்றனஇன்னும் 
பதறியபடியே அலையும்
பசியின் ஓலங்கள்...




வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  



3 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
    எனது கவிதையை இனிமையாக வெளியிட்டதற்காக இதயம் நிறைந்த நன்றிகள்...

    ஐ.தர்மசிங்

    ReplyDelete
  2. " உங்கள் நிர்வாணங்களை
    நாங்கள் தான் மாற்றுவோம்"
    எனும் புதுப்புது கோசங்கள்
    விழிபிதுங்கி தத்தளித்தது ஒளி
    பசியை விரட்டுவதாகச்சொல்லி
    சிலர் பாகம் வைத்தார்கள்......................சிறப்பு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா

      Delete
Previous Post Next Post