Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரட்டை வேடம்!


வலது கையால்
அன்பு செய்கிறார்கள்
இடது கையால்
இம்சை செய்கிறார்கள்

அவையிலேறி
அகிம்சையாய் பேசுகிறார்கள்
அடுத்த கணம்
ஆயுதத்தால் பேசுகிறார்கள்

அமைதிப் புறாவை
பகிரங்கமாகப் பறக்கவிடுகிறார்கள்
இறக்கையை மட்டும்
ரகசியமாய்  உடைத்து விடுகிறார்கள்

ஒருபக்கம்
நல்லிணக்கம் என்று 
நாடுகளை இணைக்கிறார்கள்
மறுபக்கம்
குள்ளநரிகளைப் போல்
கோடுகளைப் போடுகிறார்கள்

ஒருபுறம்
வட்டமேசையில்
வாதம் நடத்துகிறார்கள் 
அமைதிக்காக
மறுபுறம்
திட்டமிட்டுத் 
தீர்வைக் குழப்புகிறார்கள் 
அழிவுக்காக

தங்கள் தலைக்கு
தலையணை செய்கிறார்கள்
அடுத்தவன் தலைக்கு
அணுகுண்டு செய்கிறார்கள்

ஆயுதத்தை
விற்பனை செய்வதற்காய்
கலவரத்தை
கற்பனை செய்கிறார்கள்

வெளியே தெரிவது
கண்ணீர் துடைக்கும் காட்சி
உள்ளே இருப்பது
ரத்தத்தைக் குடிக்கும் சூழ்ச்சி

மெய் நாக்கு
பொய் நாக்கு என்று
ஐ நாக்கு 
ஆயிரம் நாக்கு

ஆம்
பொய் நாக்கள்
போர்நிறுத்தம் செய்கின்றன
ஐ நாக்கள்
ஆயுதங்கள் செய்கின்றன

குண்டு தயாரிக்கிறார்கள்
தாய்நாட்டில்
சண்டை தயாரிக்கிறார்கள்
பிறநாட்டில்

உதவிகள் செய்கிறது
உலகம் பார்க்க
உள்ளம் நினைக்கிறது
கலகம் பார்க்க

ஆம்
உதட்டின் வாசகம் அமைதி,
உள்ளத்தின் வாசகம் அமை தீ !
உலகம் காணுமா அமைதி ..?

Post a Comment

0 Comments