நேர் கோடுகளும் வளைகோடுகளும்!

நேர் கோடுகளும் வளைகோடுகளும்!


அந்த  வாரச் சஞ்சிகையில் இடம் பெற்றிருந்த சிறுகதையைப் படித்து முடித்தவுடன் அவள் முகம் வாடிப் போயிற்று. உதடுகள் உளர்ந்து போயின. நா வரண்டுவிட்டது. கைப்பையிலிருந்த போத்தலை எடுத்து ஒரு மிடருத்தண்ணீரைக் குடித்தாள். தன்னையறியாமலேயே பெருமூச்சொன்றை விட்டவள், சட்டென்று சுதாகரித்துக் கொண்ட வளாக,  பக்கத்தில் யாரும் இருக்கி ன்றார்களா என்று கவனித்தாள்!

 அந்த நீள்சதுர அறையின் மறுகோடியில் அமர்ந்து பயிற்சிக் கொப்பிகளைத் திருத்துவதில் ஈடுபட்டிருந்த சேகர் மாஸ்டர்,  மூச்சொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தார்!

 "என்ன டீச்சர் பலத்த பெருமூச்சு?" என்று கேட்டவர், அவளிடமிருந்து எந்தப் பதிலுமே வராததால், மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுத் தன் பாட்டில், தன் வேலையில் ஈடுபடலானார்!

 ‘அவள் அப்படித்தான்’ என்பது சேகர் மாஸ்டருக்கு மாத்திரமல்ல, அந்தக் கிராமத்துப் பாடசாலையில் எல்லோருக்குமே தெரியும். தன்னையே மறந்த நிலையில் சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதில் அவளுக்கு நிகர் அவளேதான்!  இப்போதுகூட  கடந்தகால நினைவோன்றில்தான்  அவள் ஒன்றிப்போயிருந்தாள்!

'தத்துவத்தை'த் தனது துறையாகக் கொண்டு பல்கலைக் கழகப் பட்டத்தை முடித்த அவள், வேதாந்திகள் சிந்தனையில் மூல்கிப்போய்விடுவது போன்று அவளும் அடிக்கடி தன்னிலை மறந்துசிந்தனையில் மூழ்கிடுவாள்!

 வெள்ளைச் சட்டையணிந்து துள்ளிக் குதித்தோடும் பாடசாலைக் காலங்கள்... உயர் வகுப்பிற்கு வந்த பின்னர், புத்தகக் கட்டை நெஞ்சோடணைத்தபடி பிரத்தியேக வகுப்புக்களை நாடி, நகரத்துக்குப் போய்வந்த கல்லூரி நாட்கள்.... ஓர் கண்ணியமான பெண்ணுக்குரிய உடை, நடை, ஒழுக்கங்களையெல்லாம்  ஒதுக்கிவைத்துவிட்டு, பெண்ணின் உடலோடும் ஆணின் மனதோடும்  நடமாடிய பல்கலைக்கழக நாட்களும்  மனித வாழ்வுகளை, வாழ்வின் இன்பங்களைச் சுவைக்கத் தொடங்கிய இனிமையான அதன் பொழுதுகள்... சோகங்களையும், அவலங்களையும் துச்சமென மதித்து, தான்தோன்றித் தனமாக வாழ்ந்துவிட்ட  அந்தக் கணங்கள்..! அதன் பிறகு சாரியணிந்து... பொட்டிட்டு... பூவைத்து.... தன்னை ஒரு ஒழுக்கமுள்ள பெண்ணாகக் காட்டிக் கொண்டு, ஒரே நேர்கோட்டில் நடந்து கொண்டிருக்கும்  இந்நாட்கள்... எல்லாமே.... ஒவ்வொன்றாக.... ஒன்றும் விடாமல்... அவள் நினைவைத் தொட்டன!

 பருவ வயதடைந்ததும் பக்குவப்பட்டவள் என்ற நினையில் - மற்றவர் கண்களுக்குத் தன்னை ஒரு பார்வைப் பொருளாகக் காட்டிக்கொள்ளாமல் - அச்சம், பயிர்ப்பு, நாணத்தோடு வாழவேண்டிய நான், இடத்துக்கு, சூழலுக்கு ஏற்ற விதமாக இரட்டை வாழ்க்கை வாழ்கின்றேனா?  அதன் மூலம் மற்றவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டதாக புத்திசாலித்தனமாக என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேனா?

 அப்பொழுதுதான் அந்தக் கதையில்  அவன் தன் பெண் பாத்திரத்தைச் சித்தரித்திருந்தது கூட, ஒருவகையில் சரியென்று பட்டது அவளுக்கு!

 ஆனால், அந்த உண்மையை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை!

 பெண் குலத்திற்காகப் பரிந்துபேச - அவள் தவறுதான் செய்திருந்தபோதிலும் அவற்றை மூடிமறைத்து - அவளுக்காக அனுதாபப்பட... அவளின் சார்பாக வரிந்து கட்டிக்கொண்டு வாதாட ஒரு வக்கரித்த ஆண்கள் கூட்டம்  இருக்கும்போது... அவள் ஏன் பயப்பட வேண்டும்?

அந்த  வக்கரித்த  கூட்டத்திலிருந்து விலகி -   சுற்றாடலுக்கும், சூழலுக்குமேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழும் பெண்ணினத்தின் கபட நாடகத்தைக் காட்டிக்கொடுக்க நினைக்கும் இந்தப் புதிய... புத்தம்  புதிய  அயோக்கியத்தனத்திற்கு முடிவுகட்ட வேண்டும்  என்ற நினைப்போடு இருக்கையை விட்டும் எழுந்தாள்!

 அவனை ஒருமுறை... ஒரே ஒரு முறை சந்தித்து, இரண்டு வார்த்தைகள் கேட்டுவிட வேண்டும்… அவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாமல்... அவனைத் தடுமாறிப்போகச் செய்து தன் எழுத்துலக வாழ்க்கைக்கே  முற்றுப்புள்ளி வைத்துவிடச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவள் இதயத்தை நெருட… தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்!

 ஒரு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் மணியடித்ததும், முதலில் நேராக பஸ் ஏறி, அவனின் அலுவலகத்திற்குப் போக வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள்.

 தனது அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டதும், ‘யேஸ் கம் இன்” என்ற வழமையான வார்த்தைகளோடு, திறந்துவிடப்பட்ட கதவுப்புறத்தைப் பார்த்த சுந்தருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

 எத்தனையோ வருடங்களுக்கு முன் பல்கலைக் கழகத்தில் தன்னோடு கூடியிருந்து... எப்போதும் தன் இன்ப துன்பங்களில் பங்குகொள்வதாக உறுதியளித்த கெளரி... இறுக்கியணிந்த ஜீன்ஸூம் டீசேர்டுமில்லாமல்... சாரியணிந்து… பொட்டிட்டு... பூ வைத்து... ஒரு ஒழுக்கமுள்ள தமிழ்ப் பெண்ணுக்கேயுரிய சகல இலட்சணங்களோடும் தன் முன்னே நிற்பதைக் கண்டு... இமை கொட்டாமல்... சில வினாடிகள்  அவளையே பார்த்துப் பிரமித்துப்போய் விட்டான்!

 பின், சுயநினைவுக்கு வந்தவன்போல் தன்னை சுதாகரித்துக் கொண்டவனாக,

 "ஆ...  நீயா? " என்றான்.

 அவள் எதுவுமே பேசவில்லை. கைகளைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தாள். தான் வந்த வேகம் - இரண்டு வார்த்தைகள் கேட்டு அவனைத் திணரடித்துவிட வேண்டுமென்ற எண்ணம்  - அவனின் முகதரிசனம் கிட்டியதும், தன்னையறியாமலேயே குறைந்துபோனதை அவளே உணர்ந்தாள்.

 "உனக்கு இங்கே என்னதான்  வேலை? " கோபமாகக் கேட்டான் சுந்தர்.

 "உங்களிடம் ஒரு விசயம் பேச வேண்டும்."

 "என்னிடத்தில் பேச என்ன இருக்கிறது?"

 "என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிறீர்கள்? " சற்றுப் பலமாகக் கேட்டாள் அவள்.

 "நானா... உன் வாழ்கையிலா?... அதுதான் எப்போதோ முடிந்த கதையாயிற்றே?" என்றான் அவன், அலட்சியமாக!

 "என்ன? " எரித்துவிடுவதைப்போல் அவள் கேட்டாள்.

 "நமக்குள் இருந்த உறவுதான் என்றைக்கோ அஸ்தமமாகிவிட்டதே.... இனி நான் ஏன் உன் வாழ்க்கையில் தலையிட வேண்டும்? " அவன் கோபமாகக் கேட்டான்.

 "என்னைப் பின்னணியாக வைத்துப் பத்திரிகைகளிலெல்லாம் ஏன் எழுதுகிறீர்கள்? கடந்து விட்ட - அவலம் நிறைந்த -   அந்த நாட்களை என் எண்ணத்திலிருந்தும் மறந்துவிட முனைகின்றபோதெல்லாம்... ஏதாவதொரு கோணத்திலிருந்து அவற்றை நினைவூட்டி, ஏன் என் மனதை இப்படி அலைபாய விடுகிறீர்கள்? ஒரு காலத்தில் உங்களோடு சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதற்காக... ஏன் என்னை இப்படியெல்லாம்  கேவலம் செய்கிறீர்கள்? - சம்பந்தப் பட்டிருந்தோம் என்பது பொதுவான விசயம்தானே? "

 "மறக்கவும், மறுபடி உறவாடவும் அதுதான் உங்களுக்கொல்லாம் எண்ணற்ற இதயங்கள் இருக்கின்றதே! முடிந்த கதையை ஏன் நீ மீண்டும் கிளர வந்தாய்?"

 "இல்லை, அதனை நீங்கள் முடிய விடவில்லை. ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டிருந்தோம் என்பதற்காக  என்னை இப்படிப் பழிதீர்க்காதீர்கள். பல்கலைக் கழகத்தில் சார்யணியாமல், ஜீன்ஸோடும், முந்தானையில்லாமல், திறந்த நெஞ்சோடும்  நடமாடியது உண்மைதான்!  அது அந்த சூழலுக்கு! இப்போ நான் ஓர் ஒழுக்கமுள்ள பெண்ணாக... சாரியணிந்து.... பொட்டிட்டு... பூ வைத்து...  ஒரே நேர்கோட்டில்தானே போய்க் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து இனிமேல் உங்கள் கதைகளில் என்  வாழ்க்கையை இணைக்காதீர்கள்."

 "சீ... உன்னை... உன் வாழ்க்கையை யார் இணைத்தார்கள்...  என் கதைகளில்?  இடத்துக்கு ஒன்றாக  இரட்டை வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்  கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்கின்ற பெண்ணினத்தின் ஒரு பகுதியினரைப் பற்றியல்லவா எழுதுகின்றேன்... அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, இடறி வீழ்ந்து, எழுந்துகொள்ள  முடியமாமல் தவிக்கின்ற இளைஞர்களின் இதய ராகங்களையல்லவா எழுதுகின்றேன்."

 'இல்லை... பெண்ணினத்தின் மானத்தையல்லவா சந்திக்கிழுக்கின்றீர்கள்? "

 'சீ... மானமாவது மண்ணாங்கட்டியாவது... தானுண்டு, தனது  வேலையுண்டு என்றிருக்கின்ற அப்பாவி  இளைஞர்களின் வாழ்க்கையில் தலையிட்டு... அவர்களின் மனசை மோசடி பண்ணி... அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்து விளையாடும் பெண்ணினத்திற்கு மானமா? கற்பு என்றால் அது பெண்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்ற உரிமையில்  எதையும் செய்துவிடலாம் என்ற நினைப்பு... தவறுகளையெல்லாம் தலையில் கொட்டிக்கொள்வதற்கு ஆண்கள்தான் இருக்கின்றார்களே என்ற எண்ணம்... பரம்பரை பரம்பரையாக இருந்துவரும்  இந்த அடாத செயலை  மாற்ற ஒருவன் துணிந்தால்...  மானம் போகிறது என்ற கொக்கரிப்பு!  கற்பு, மானம் இதுவெல்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இருக்கிறது!  கற்பு பெண்களுக்குரிய பிரத்தியேகமான சொத்து. அதற்காகவே  நாங்கள் வாழ்கின்றோம். என்று ஆண்களை நம்பவைத்துக் கொண்டு.... தமக்கு வேண்டிய நேரங்களில் அவர்களிடம் அணைந்து, வேண்டாதபோது நெறி தவறாது வாழ்கின்றவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்கின்ற உங்களுக்கா மானம் போகிறது? "  -உணர்ச்சிவசப்பட்டவனாக அவன் பேசி முடித்தான்.

அவனின் அனல் கக்கும் வார்த்தைகள், அவளை அப்படியே மௌனம் சாதிக்க வைத்துவிட்டது. எங்கிருந்து வந்தோம்... எங்கே போகிறோம்  என்பதை மறந்து, அங்கிருந்து...  அப்படியே நழுவிவிட்டால் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு!
நன்றி : தினகரன் - 24.09.1981

Post a Comment

Previous Post Next Post