Ticker

6/recent/ticker-posts

நாட்டுப்பற்று -5

அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆடலாம் என்பார்கள்.
நாட்டுப்பற்று முதலில் எங்கு காட்டப்பட வேண்டும்?

இன்று நாம் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் அன்போடு பல்லின மக்களையும் அரவணைத்து வாழ்கிறோம்.

அரசியல்வாதிகளின் சதிகள் இல்லை என்றால் இனங்களுக்கு மத்தியில் குரோதங்கள் இல்லாமல் வாழ்ந்திருப்போம் என்று சொல்லுமளவு அரசியல்வாதிகள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தடையாக உள்ளார்களோ என்று நினைக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது.

துரதிஷ்டவசமாக பாராளுமன்றம் செல்கின்ற எமது சிறுபான்மை அரசியல்வாதிகள் குறித்த ஒரு இனத்துக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பேரம் பேசி சோரம் போனதனால் இன்றைய இலங்கை சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

உரிமைகளை வென்றெடுக்க தான் வேண்டும் ஆனால் சலுகைகளுக்காக தங்கள் சுயத்தை இழந்து விடுகின்றனர் என்பதுதான் மிகப்பெரும் விசனம்.

எல்லாவற்றிலும் பொதுநலன்  பேணும் மனோபாவம் உருவாக வேண்டும்.

அரசியல்வாதிகளின் சுய இலாபங்களுக்காக ஆட்சியை கொண்டுவருவதும் ஆட்சியை வீழ்த்துவதும் என்ற நிலையில் சுயநல அரசியல்வாதிகள் செயற்ப்பதனால் அல்லது செயற்படுவதனால் சிறுபான்மை சமூகம் இந்த நாட்டில் அழிவுக்கு உள்ளாக்கப்படும் அபாய நிலை தோன்றி வருகின்றது.

சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை மறுதலிக்க முடியாது.

அம்பலத்தில் ஆடுபவர்கள் எமது அரசியல்வாதிகளே.

நாம் அறையில் ஆடுகின்றோம் இந்த ஆட்டம் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ரீதியாக சென்றடைவதில்லை.

பாராளுமன்றத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் தங்களின் இனத்துக்காக மட்டும் குரல் கொடுப்பவர்களாக இருப்பது இந்த நாட்டை நேசிக்கின்ற சமூகம் சிறுபான்மை சமூகம் என்ற கருத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டது.

தேசத்தின் நலன் கருதி பாராளுமன்றத்தில் முழங்குகின்ற சிறுபான்மை அரசியல் தலைவர்களை காண்பது குறைவு.

தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் கிட்டிய தேவைகளை நிறைவு செய்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டு நாட்டின் நலனை கிஞ்சிற்றும் கவனிக்காத ஒரு சுயநல அரசியல் கும்பல்தான் எம்மை இந்த நாட்டின் நேசர்கள் இல்லை என்பதை பறைசாட்டிக் கொண்டிருக்கிறது.

எனவே நாம் அனுப்புகின்ற பாராளுமன்ற தலைவர்கள் நாங்கள் இந்த நாட்டில் யார்?

எங்கள் பணி என்ன? 

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

நாட்டை வளப்படுத்துவது என்றால் என்ன?

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எம்மாலான முயற்சிகள் எவை?

நமது சொந்த நலனை விட்டுக் கொடுத்து நாட்டு நலனில் அக்கறை கொள்வது எப்படி?

என்றெல்லாம் பூரண தெளிவள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

பாராளுமன்றம் சென்று சலுகைகளுக்கு சோரம் போய் சொந்த இலாபங்களை அடைந்து கொள்வதற்கு இனத்தின் பேரால் அபிவிருத்திகளை கொண்டுவர ஒருபோதும் முனையக் கூடாது.

இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களை அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டி விடுவதற்கு சிறுபான்மை சமூகம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

பாராளுமன்றம் செல்கின்ற அரசியல்வாதிகள் தான்சார்ந்த இனத்தின் உரிமைகளையும் தன்னால் முடியுமான தேசத்து கடமைகளையும் எவ்வாறு செய்வது? என்ற தெளிவையும் அறிவையும் சமுதாய தலைவர்கள் வழங்க வேண்டும்.
(தொடரும்)

Post a Comment

0 Comments