Ticker

6/recent/ticker-posts

நழீம் ஹாஜியாரின் பிரார்த்தனை!


நழீம் ஹாஜியார் அவர்களின் 16 ஆம் வருட நினைவு தினம் சம்பந்தமாக சில ஆக்கங்களை வாசித்தேன்.  அவர் நினைவு தினமான இவ்வேளையில், அவரிடம் நான் கண்ட ,  சிந்தனைக்கு எட்டாத, அதிசயமான  குணத்தையும், நற்பண்புகளையும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்த, அந்த ஒரு வித்தியாசமான  சிந்தனையுடைய, அந்த மாமனிதனின்  அதிசய குணங்களை,  தற்கால முஸ்லிம் சமூகம் அறிய எடுத்து வைப்பதை   ஒரு அரிய சந்தர்ப்பமாக கருதுகிறேன்.

எனது நினைவின் படி அன்று 1983  ஆம் ஆண்டு, அல்லது 1984  ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அப்போது அவரது வீட்டுக்கு சிறிது தூரத்தில் உள்ள 
அல் ஹூமைஸரா மத்திய கல்லூரியில்  படிக்கும் காலம்  அது.  

அக்காலப்  பகுதியில்  சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக  கை கொடுக்க, கொடை  வள்ளல்   மாமனிதர்  நழீம் ஹாஜியார் அவர்களால்,  அவரது இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தினால், அப்போது படிக்கும் மாணவர்களுக்காக  இலவச பகுதி நேர வகுப்புகள் நாட்டின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. 

நான் நினைவு படுத்தும் இந்த நாள், எமது பாடசாலையிலும் இவ்வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள்.

அப்போது நானும் ஒரு சிறுவனாக அந்த அவையில் உட்கார்ந்திருந்தேன்.  அவரது இலவச  வகுப்பில் பயனடைந்ததில்  நானும் ஒருவன். இன்று இந்த பேனாவை கையில் எடுத்து இந்த நான்கு சொற்களை எழுதுவதற்கு அந்த மாமனிதனிரும் ஒரு காரணம்  அதற்காக அவருக்கு இன்னும் பிராத்திக்கிறேன்.

அன்று, அவ்வேளையில்,  படிக்காத மேதை கொடைவள்ளல் நழீம் ஹாஜியார்  அவர்கள்  நிகழ்த்திய உரையை பற்றி,  சில  வேளைகளில் இன்றும் சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரது சமூக சிந்தனை இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அன்று, அவரது கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு  உதவியாக துணை நின்ற,  காலஞ்சென்ற Dr சுக்ரி அவர்களும் வீற்றிருக்கும் இருக்கும் போது,  அல் ஹுமைஸரா  மத்திய கல்லூரியின், அப்போது இருந்த பாஸி மண்டபத்தில் அவர் உரை நிகழ்த்தினார். 

உண்மையில்  அன்று அவர் நிகழ்த்திய அந்த உரையானது,  இன்று நினைத்துப் பார்க்கும் போது,  அது ஒரு படிக்காத, பாமர மனிதனால்  நிகழ்த்தப்பட்டதாக  நினைக்க முடியாத,  ஒரு வரலாற்று ரீதியான,  தீர்க்கதரிசன கண்ணோட்டத்தோடு இன்று நோக்க வேண்டிய மிகச் சிறப்பு மிக்க உரையாகும்.

அன்று அவர் நிகழ்த்திய  அவ்வுரையை நினைத்துப் பார்க்கும் போது, 
அது ஒரு  இலங்கையின் அரசியலில் உச்ச அனுபவம் கொண்ட,  உலக அரசியல்,  சர்வதேச ரீதியிலான  வர்த்தக போட்டிகள், சர்வதேச  ரீதியிலான சதிகள்,  உட்பட  பல்வேறுபட்ட  அனுபவங்களை உடைய  ஒரு அறிவாளியினால், பல்வேறுபட்ட  துறைகளையும் உள்ளடக்கிய, ஒரு தூர சிந்தனையுடைய  உரையாக அமைந்திருந்தை காணமுடிந்ததையிட்டு இன்று வியப்படைகின்றேன்.

நிச்சயமாக அவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு விசஷட அருள் புரியப்பட்டவராக நான் கான்கிறேன்.

இவ் உரையை, படிக்காத, சாதாரண மனிதனால்  நிகழ்த்தப்பட்ட உரையாக இன்று சற்றும் நினைத்தும் பார்க்க முடியாது.

பாறையில் செதுக்கப்பட்ட  சிற்பம் போல், என் சிறுவயதில்,  என்  கண் முன்  நின்ற்கும் அவரது அழகிய, சிவந்த, வட்ட வடிவமான அழகிய முகத்துடனான உருவமும், அவரது குரல் ஓசையும்  என் காதுகளில் இன்னும்  எதிரொலிக்கின்றது.

அன்று அந்த அளவில் அவர் என்ன சொன்னார்.

அப்போது நாட்டில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் தமிழர் பிரச்சினை உலகில் பல்வேறு நாடுகளில் பேசப்படும் காலகட்டம் அது.

" மாணவர்களே, பிள்ளைகளே,   நான் இந்த இலவச  பகுதி நேர வகுப்பை
நடத்துவதற்கான காரணம், வருங்காலத்தில் நீங்கள் அத்தனை பேரும் சமூகத்தில்  படித்த, பெரிய மனிதர்களாகவும்,  நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய,  பொருமதியுள்ள   நல்ல  மனிதர்களாக வரவேண்டும் என்பதற்காகவாகும்"

"  பிள்ளைகளே நான் படிக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டேன்.  எனது தாய் இரவு விடிய இருந்து கயிறு திரிப்பார்.  காலை விடியும் போது  ஒரு முடி கயிற்றை திரித்து விடுவார்.  காலையிலே நான் எழுந்து அதை கடையில் கொடுத்தால் 2 சதம்  தருவார்கள்.  அதற்கு காலை உணவை வாங்கிக்கொண்டு பாடசாலைக்குச் செல்வேன். பக்கத்தில் உள்ள இன்றைய நழீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் எனது தாய் கயிறுதிரிப்பதற்கான மட்டைகளை நீரில் ஊரவைப்பார். நான் பாடசாலை விட்டு வந்து எனது தாய்க்கு மட்டைகளை தட்டிக் கொடுப்பேன்"

"நான் இன்று நழீம் ஹாஜியாராக உங்கள் முன் வந்து கதைப்பதற்கு அந்த அல்லாஹ்வே காரணம்.  எனது குடும்ப வறுமையே எனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனக்கு அன்று ஏற்பட்ட இந்த நிலை  இனிவரும் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது.  என்பது எனது ஆசையாகும்"

"பிள்ளைகளே  இன்று நாட்டில் மற்ற சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும்  இந்த இவ்வாறான பிரச்சகனைகள்,   முஸ்லிம்களுக்கு  வருங்காலத்தில்  வராது என்று மட்டும் நீங்கள் நினைத்து விட வேண்டாம். நாங்கள் இல்லாத ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் பிரச்சினை வரலாம்.
இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கும் நிம்மதி இல்லாமல் போகலாம்.  அப்போது பிரச்சினைகள்  வந்தால்  சமூகத்தை காப்பாற்றவும் சமூகத்தை வெற்றியான பாதையில் எடுத்துச் செல்லவும், சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேசவும், சாதிக்கவும், படித்தவர்களாகவும், படித்த உயர்பதவிகளில் நீங்கள் இருக்க  வேண்டும்" (இவை அவர் அன்று சொன்னவை)

" நான் எனது  முதல் மக்காவிற்கான  உம்ரா பயணத்தின்போது , அல்லாஹ்விடம் கஃபாவை சுத்தி சுத்திக் கேட்டேன்.  யா அல்லாஹ் !  எனக்கு அழியா செல்வத்தைத்தா அல்லாஹ் !  அத்தோடு சேர்த்து,  கொடுக்கும் மனதையும் சேர்த்துத்தா யாஅல்லா . செல்வத்தையும் கல் நெஞ்சத்தையும் தந்து விடாதே  எனது றஹ்மானே !  செல்வத்தோடு சேர்த்து தாராளமாக கொடுக்கும் மனதையும் தா யா அல்லாஹ் ! என் சமூகத்திற்காக வாரி வாரி வழங்க, என் சமூகத்திற்கு உதவி செய்ய அழியா செல்வத்தையும் தாராளமாக வாரி வழங்கும் மனதையும் தா யாஅல்லாஹ், என கஃபாவை சுத்திச் சூத்தி அழுதவனாக கண்னீர் வடித்தவனாக கேட்டேன்.

"ஆகவே பிள்ளைகளே  இன்று நாங்கள் செய்யும் இந்த உதவியை கொண்டு வருங்காலத்தில் நீங்கள் படித்தவர்களாகவும், உயர் பதவிகளை அடைந்தவர்களாகவும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள மக்களாகவும்  ஆக வேண்டும்.  இன்று கல்வியை ஊக்குவிக்கும் எனது பயணத்தைத் தொடர்வதற்கு அல்லாஹ் Dr சுக்ரி என்ற வெளிச்சத்தையும்    உதவிக்காக என்னிடம் கொண்டுவந்து சேர்த்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்" 

அவரது பேச்சில் இடை இடையே அல்லாஹ்வை நினைவு படுத்துவதும், அல்லாஹ்வை புகழ்வதும்,ஒரு வித்தியாசமான சிறப்பம்சமாக நான் அன்று அவதானித்தேன்.

இன்னும் பல்வேறுபட்ட விடயங்கள் பேசினாலும், இதுவே அன்று அவர் ஆற்றிய உரையின் மிகச் சிறிய சுருக்கமாகும்.  சுமார் 20 நிமிடங்கள் அவர்  ஆற்றிய உரை  இன்று  பல தாசாப்தங்களின்  உள்ளடக்கத்தை கொண்டிருப்பதை   உணர்கிறேன்.

இன்று அரசியலானாலும், ஆன்மீகமானாலும், தனது சோந்த வியாபாரத்துறையானாலும், பல்வேறுபட்ட துறைகளை  எடுத்து நோக்கும் போது, தனக்காகவும்  தன் குடும்பத்திற்காகவும்  பல தலை முறைகளுக்கும்,  செல்வங்களை சேகரிக்கும் மனித வாழ்க்கையினை  நோக்கும் போது, கொடைவள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களை  நமது சிந்தனைகளுக்கு  எட்டாத,  ஒரு வித்தியாசமான  மனிதனாகவே நான் காண்கின்றேன். 

தான் வியர்வை சிந்தி, துன்பப்பட்டு உழைத்த செல்வத்தை,  எண்ணிக்கை இல்லாமல், கோடி கோடியாக சமூகத்துக்காக அள்ளி வீசிய மாபெரும் கொடைவள்ளல்.

இன்றைய  உலகின் மனித குலத்தில்,  மனிதன் வாழ்ந்து செல்கின்ற வரலாறுகளை  படிக்கும்போது,  இவ்வாறான சமூக  கவலையுடன் வாழ்ந்து சென்ற மனிதப் புனிதர்கள்  வரிசையில் சில விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின்  வரலாறுகளையே  நாம் படிக்கக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில்  எமது இலங்கை திருநாட்டை பொருத்தவரையில்  நாம் தாண்டி வந்த சில தசாப்தங்களை  திரும்பிப் பார்க்கும் போது,  நம்மில் இருந்து மறைந்து வாழும்  மாமனிதர்   நழீம்   ஹாஜியாரை  மனித சிந்தனையில் ஒரு  வித்தியாசமானவர் ஆகவே  நான் காண்கின்றேன். 

இன்றும் சிலவேளைகளில் நினைவுகளில் வரும்போது அவருக்காக  துஆ செய்கின்றேன்.

அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து, அவரின் கொடைகளையும், தர்மங்களையும், அங்கீகரித்து, அவரின் மன்னரையை மாளிகையாக்கி,அவர் ஏழைகளிடமும் அநாதைகளிடமும் காட்டிய இரக்கத்தையும் கருனையையும், பலகேடிகளா அல்லாஹ் அவரிடம் காட்டி அவருக்கு சுவர்கத்தில் உயர்வான பதவியை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இன்று எமது நாட்டில்  சில மக்களுக்கு  நழீம் ஹாஜியார் செய்த அளவில்  நூறு மடங்கு செய்ய  வாய்ப்பு வசதிகள் இருந்தபோதிலும்,  நழீம் ஹாஜியார் அல்லாஹ்விடம்  செய்த பிரார்த்தனைகளில் இருந்து  சிந்திப்போருக்கு
ஆயிரம் படிப்பினைகள் இருக்கின்றன.

நிச்சயமாக நழீம் ஹாஜியார்இன்று நினைவு கூறுவதற்கு தகுதியானவர். நினைவு படுத்தப்பட வேண்டியவர்.

வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்தவர்கள் ஒரு பாடம்,

பெற்றவர்கள் செய் நலம், பிள்ளைகளைச் சேரும்,

சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்கும்,

சாதித்தோரின் வரலாற்றையே சரித்திரங்கள் பேசும்.

இதை சிந்திப்பவருக்குதான் உலகில் உயர்வான வெற்றி

வாழ்ந்து சென்ற வழியில் நறுமனம் கமலும் நழீம் ஹாஜியார்.

உலகை வெல்ல இவர் வழியில் படிப்பினை உண்டு

Post a Comment

0 Comments