நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -அத்தியாயம் -15

நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -அத்தியாயம் -15


இறுதித் தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின்  அவதரிப்பு
அரபு மொழி பேசுவோர் “அரேபியர்” என அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசம் அரேபியத் தீபகற்பமாகும். இது அரபியில் “அல்-ஜஸீரதுல் அரபிய்யா” வாகும்.  இது  ஆசியாக் கண்டத்தின் தென் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. கிழக்கில் உம்மான் கடலுடன் பாரசீக வளைகுடாவையும், தெற்கில் இந்து சமுத்திரத்தையும், மேற்கில் செங்கடலையும், வடக்கில் ஷாம் மாகாணத்தையும்  அது எல்லையாகக் கொண்டுள்ளது.

இத்தீபகற்பம் அல்கஸா, ஹிஜாஸ், யெமன், நஜ்த், உம்மான் என ஐந்து பிரிவுகாகப் பிரிவு பட்டிருந்தது.
 
அரேபியா தீபகற்பம் பொதுவாக பாலை நிலமும், தாழ்ந்த குன்றுகளும் கொண்டதாக அமைந்திருந்தது. “தாயிப்” பகுதி விவசாய நிலங்களைக் கொண்டிருந்தது.

நூஹ் (அலை) அவர்களின் புயற்காற்று சம்பவத்தின் பின்னர் இத்தீபகற்பம் நூஹ் (அலை) அவர்களின் சந்ததியிரைக் கொண்டே செழிப்பாகியதாகக் கூறப்படுகின்றது,

ஹிஜாஸ் மாகாணத்திலேயே மக்கா, மதீனா நகரங்கள் அமைந்திருந்ததால் அக்காலத்திலிருந்தே இது புனித பூமியாகக் கருதப்பட்டது. மக்கா நகரம் “உம்முல் குறா” (பட்டினங்களின் தாய்) என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டது. இதன் புராதனப் பெயர் “பக்கா” என்பதாகும்.
 
இந்நகரை நபி இப்றாஹீம் (அலை) அவர்களே நிர்மாணித்தவராகக் கருதப்படுகின்றார்.  நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் புதல்வர் இஸ்மயில் (அலை) அவபகளின் வழித்தோன்றல்களே இந்நகரை நெடுங்காலமாக நிர்வகித்து வந்துள்ளனர். அவர்களைதத் தொடர்ந்து இந்நகரின் நிர்வாகப் பொறுப்பு குறைஷிக் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது.  

 நூஹ் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்த வந்த - அல்குர்ஆனில் குறிப்பிடப்படுகின்ற - “ஆத். ஸமூத்” சமூகங்களில் சிலர் மலைவாசிகளாவர்.
 
மலைவாசிகள் “பதவிகள்” அல்லது “அஹ்லுல் பாதியா” என அழைக்கப்பட்டனர். இவர்கள் கால்நடைகள் மேய்த்து ஸ்தீர வாஸஸ்தலமின்றி காடுகளிலில் அலைந்து வாழ்ந்து வந்தனர். வேட்டையாடுதல், கொள்ளையடித்தல் என்பன இவர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வந்துள்ளது. அராபிய இனத்தவரில் “பதவிகள்” என்றழைப்பட்ட மலைவாசிகளே அதிகமாகக் காணப்பட்டனர்.
 
மற்றையோர் நகரவாசிகளாவர். இவர்கள் “அஹ்லுல் ஹழ்ரா” என அழைக்கப்பட்டனர். செழிப்பான பகுதிகளிலும் கடலை அண்டியும் வாழ்ந்த இவர்கள் விவசாயம், வியாபாரம் போன்றவற்றைச் செய்து வாழ்க்கை நடாத்தினர்.

அக்காலத்தில் அராபிய தீபகற்பத்தில் அரசாங்கங்கள் இருக்கவில்லை. இரண்டொரு மாகாணங்களில் வெறுமனே பேருக்கு மாத்திரம் அரசாங்கங்கள் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

உரிய கட்டுக்கோப்பு இல்லாத நிலையில் மக்கள் கோத்திரங்களாகப் பிளவுபட்டு வாழ்ந்தனர்.  அக்காலத்தில் கோத்திரங்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடந்தன. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர். சண்டையிட மாத்திரமே அவர்கள் தலைவர்களாகவிருந்தனரே தவிர வேறு அதிகாரங்கள் அவர்களுக்கு இருக்கவில்லை.

இதனால் அக்காலத்து மக்கள் தம் மனம் போன போக்கில் வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டது. அராபியரின் ஆகாரம் பால், மாமிசம், பேரீத்தம் பழம் என்பனவாகும்.
 
கல்வியறிவு அக்கால மக்களிடத்தில் இருக்கவில்லை. கவிதைகள் படிப்பது அவர்களின் பொழுது போக்காக இருந்தது. சூதாட்டம் அவர்களின் முக்கிய தொழிலாகக் கருதப்பட்டது.

பெண் குழந்தைகள் பிறந்தால், துரதிர்ஷ்டம் எனக்கருதி உயிரோடு புதைத்து வந்தனர்.  அக்காலத்து மக்களிடையே நல்லது கெட்டதைப் பிரித்தறியும் பண்பு இல்லாமையினால் பாவச் செயல்களும், மூட நம்பிக்கைகளும் அவர்களிடையே அபரிதமாகக் காணப்பட்டன.

பாவச்செயல்களும், மூட நம்பிக்கைகளும், மலிந்து காணப்பட்டபோதிலும், அக்காலத்து அராபியரிடையே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சமய நெறிமுறைகளைப் பின்பற்றும் வழக்கமும் காணப்பட்டுள்ளது.

கஃபாவை வலம் வருதல், ஹஜ், உம்றா செய்தல், அறபாவில் தங்குதல், அல்லாஹ்வுக்காக கால்நடைகளை அறுத்துப் பலியிடுதல் போன்ற அவற்றிற் சிலவாகும்.  கொடை, தயாளம்,  சகிப்புத்தன்மை, துணிவு, நியாயம், வாய்மை, விருந்தோம்பல்  போன்ற உயர் பண்புகளும் அவர்களிடையே காணப்பட்டுள்ளன.

உருவ வழிபாடு அக்காலத்து அரேபியரிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தது.  மக்கள் மதிப்பைப் பெற்று மரணித்தவர்களின் அடக்கஸ்தலங்கள் புனிதத்தலங்களாகக் கருதப்பட்டு, வழிபடப்பட்டு வந்துள்ளன.

அம்பு எய்துதல் மூலம் சூதாட்டமும், குறிபார்த்தல், ராசிபலன், பறவைகள் கொண்டு சகுனம் பார்த்தல்,  கனவுகளுக்கு பொருள் தேடுதல் என்பன அவர்களிடம் மலிந்து காணப்பட்டன.
 
இவ்வாறான அறியாமைக் காலமே  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த காலப்பகுதியாகும்.  அரபு மொழியில் இது “ஐயாமுல் ஜாஹிலிய்யா” என்று அழைக்கப்படுகின்றது. இக்காலப்பகுதியானது “இறைதூது கிடைக்கப் பெறாத காலப்பகுதி” என்ற பொருள்படும், “ஐயாமுல் பத்ரத்” எனவும் அழைக்கப்படுகின்றது.
 
இஸ்மாயீல் நபியின் 23வது சந்ததியில் வந்த  கிலாப் என்பவருக்கு ஷுஹ்ராஹ், குறைஷ் என்ற இரண்டு பிள்ளைகள். ஷுஹ்ராவின் வழித் தோன்றலில் அப்துல் மனாப் பிறந்தார்கள்.  அப்துல் மனாபின்  மகனே அப்துல் வஹ்ஹாப் ஆவார். அப்துல் வஹ்ஹாபின் மகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினா  அவர்களாவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி. பி. 571ல் குறைஷிக் குலத்திலேயே பிறந்தார்கள். குறைஷிக் குலம் நபி இஸ்மாயில் (அலை) அவர்களைத் தொடர்ந்து மக்காவை நிர்வகித்து வந்த, சிறப்பும்  கண்ணியமுமிக்க குலமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் “யானை வருடம்” (ஐயாமுல் பீல்) என்று அழைக்கப்படுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ஆவார்கள். தாயார் ஆமினா அவர்களாவர்.
                                                         
தமது சிறு பிராயத்தில் ஹலீமா என்பவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த காலத்தில். அவர்களின் பிள்ளைகயோடு சேர்ந்து பாலைவனக் காடுகளில் ஆடுகள் மேய்த்துள்ளார்கள்.
 
நபிகளார் (ஸல்) அவர்கள் எப்போதும் உண்மையே பேசியதால் “அஸ்-ஸாதிக்” எனவும், அனைவரிடமும் நம்பிக்கையாய் நடந்து கொண்டதால் “அல்-அமீன்” எனவும் மக்காவாசிகளால் அழைக்கப்பட்டார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தாய் தந்தையரை இழந்த பின்னர் சிறிய தந்தையார் அவர்களால் பராமரிக்கப்பட்டார்கள்.

தனது வாலிப வயதை அடைந்ததும்,  வியாபாரத்தில் ஈடுபடும் நோக்கில், சீமாட்டி கதீஜா அவர்களின் வியாபாரப் பணியில் இணைந்தார்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பண்புகளால் கவரப்பட்ட கதீஜாப் பிராட்டியார்   தனது 40வது வயதில், 25 வயதான முஹம்மத் (ஸல்) அவர்களை மணந்து கொண்டார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல விடயங்களில் கலந்து கொள்ளும் பண்புள்ளவராக இருந்தார்கள். அவ்வப்போது கஃபா திருத்த வேலைகளில் மக்காவாசிகள் ஈடுபடும்போது, நபியவர்களும் கலந்து கொண்டார்கள்.
“ஹஜ்ருல் அஸ்வத்” கல்லை வைக்கும் விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சையின்போது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்ப்பை வழங்கி சமூகங்களுக்கிடையில் ஏற்படவிருந்த குழப்பத்தைத் தடுத்து வைத்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்போதும் தனது சமூகத்தைப் பற்றிப் பெரும் கவலை கொண்டவராகவே காணப்பட்டார்கள்.

தனது நாற்பதாவது வயதில் அடிக்கடி ஹிறாக்குகை சென்று, சமூகத்தை நல்வழிப் படுத்துவது பற்றி சிந்திப்பதிலும், பிரார்த்திப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக மூன்று வருடங்களின் பின்னர் அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் (அலை) மூலமாக  அல்-குர்ஆனின் வசனங்கள் வஹீயாக வரத்தொடங்கின. அன்று முதல் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி நபித்துவத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

மனிதன் பலவீனமானவன், அவசரப் புத்திக்காரன், சுயநலமிக்கவன்,  மனிதனின் அறிவானது வாழ்க்கைக்குரிய சகலவற்றையும் உருவாக்கிக் கொள்ள முடியாமையால், அவனைப் படைத்தவனின் வழிகாட்டல்கள் அவனுக்குத் தேவைப்படுகின்றன.

காலத்துக்குக் காலம் மனிதனை நல்வழிப் படுத்தும்  நோக்கில் அல்லாஹ்வால் இறைதூதர்கள் அனுப்பப்பட்டும், இறை வேதங்கன் அருளப்பட்டும் இஸ்லாம் போதிக்கப்பட்டு வந்துள்ளது.

இஸ்லாம் என்றால் கீழ்ப்படிதல், அடிபணிதல், சரணடைதல் என்ற பொருள்படும்.  ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து நடக்க வேண்டுமென்பதையே எல்லா நபிமார்களும் போதித்து வந்துள்ளனர்.  அல்லாஹ்வால் அருளப்பட்ட நான்கு வேதங்களும் இதனையே உணர்த்தின.  

அந்த வகையில் நபி முஹம்மத்  (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதராவார்கள்.  இறுதி வேதமாக அல்குர்ஆன் உலகிற்கு அருளப்பட்டது. நபி முஹம்மத்  (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு தமது உயரிய வாழ்க்கை முறையின் மூலம் அக்காலத்து மக்களை நேர்வழிப்படுத்தி அல்லாஹ்வின் ஏவலை நிறைவேற்றிச் சென்றார்கள்.

இதனால் அன்றும், இன்றும் என்றும் உலகில் “ஓரிறைக் கொள்கை” நிலைபெற்றுள்ளது. ஒழுக்கங்கெட்டு வாழ்ந்த மனிதன் - புனிதனாக மாற்றம் பெற்று வாழ வழிகாட்டப்பட்டான்.

துரதிர்ஷ்டமென  மதிக்கப்பட்ட பெண்ணினம் சமூகத்தில் உரிய மதிப்பும் மரியாதையும் பெற்றது. சதா பாவச்செயல்களிலேயே  மூழ்கியிருந்த மனிதன் - இறைவணக்கத்தில் ஈடுபடும் நிலை உருவானது.
 
இஸ்லாம் என்ற போர்வையில் உலகில் மாபெரும் சீர்திருத்தம் ஏற்பட்டது. உலகம் அழியும் வரைக்கும் மனிதனுக்கு வழிகாட்டும் அறிவுரைகள் அல்-குர்ஆனிலும், இறுதித்தூதர் நபி முஹம்மத்  (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலும் அடங்கப்பட்டுள்ளன. நரகத்திலிருந்து மனிதன் விடுபட்டு- சுவர்க்கம் செல்லும்  வழி அவனுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.                            
 (முற்றும்)

Post a Comment

Previous Post Next Post