ரெங்க்மாவுடன் இணைந்து வனத்துக்குள் வந்திருப்பதை நினைத்து அவன் செரோக்கி பெருமைப்பட்டுக் கொண்டான்!
“ஒரினோகோ” ஆற்றில் அவளுடன் ஆசைதீர முங்கியெழுந்த செரோக்கி... சிறிது நேரத்தில் மெல்லக் கரைக்கு வந்தான்.
அவள் இன்னும் கொஞ்ச நேரம் நீருக்குள் இருக்க விரும்பினாள்!
தனது கைகளையும் கால்களையும் நீரில் அடித்தவாறு சிறுபிள்ளைத்தனமாக அவள் விளையாடிக்கொண்டிருந்ததை செரோக்கி கரையிலிருந்து பார்த்து ரசித்தான்.
சற்று நேரம் சென்று... கரையைத் தொட்டவாறு விழுந்து கிடந்த காய்ந்த மரக்கட்டை மேல் வைத்திருந்த தனது அந்கவஸ்தியை எடுத்துக்கொண்டவனாக நீரோட்டத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அங்கு நீரில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்த ரெங்க்மாவைக்காணவில்லை!
அவன் மனம் துடித்துப் போய்விட்டது. கையிலெடுத்த அங்கவஸ்தியைத் தூக்கி எறிந்துவிட்டு...ஆற்றுக்குள் பாய்ந்தான் செரோக்கி.
அங்குமிங்கும் நீந்திச் சென்று, எங்கு தேடியும் அவனால் ரெங்க்மாவைக் கண்டுகொள்ள முடியாதிருந்தது. நீர் வழிந்தோடிக்கொண்டிருந்த திசையை நோக்கி அவன் சிறிது தூரம் நீந்திச் சென்றான்!
அவனது கண்கள் கரையை நோக்கிச் சென்றபோது ... அங்கு சிலர் கூடி நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
அவர்களைப் பார்த்தால், வனப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை. சிறிது குள்ளமான உருவத்தைக் கொண்ட அவர்கள், நாகரீகமான ... நகரத்து உடையுடன் தொப்பியணிந்து காணப்பட்டனர்!
அவர்களுக்கு மத்தியில் ஒருவர் குப்புறப் படுத்திருப்பதையும், நீருக்குள்ளிருந்தவாறே கண்டு கொண்ட அவன் விரைந்து நீந்திச் சென்று கரைக்கு வந்து அவர்களை நெருங்கலானான்!
தூரத்திலிருந்து அவன் அவர்களைப் பார்த்தபோது... அவர்களுள் ஒருவன் குந்தியிருந்தவாறு... குப்புறப்படுத்திருந்தவரை எதையோ செய்துகொண்டிருந்ததைக் கண்டான்!
செரோக்கி மேலும் சற்று நெருங்கிப் பார்த்தபோது, குப்புறப்படுத்திருந்தது ஒரு வனப்பகுதிப் பெண் உருவம் என்பதையும்... அது ரெங்க்மாவாகத்தானிருக்கவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள அவனுக்கு வெகு நேரம் எடுக்கவில்லை!
(தொடரும்)



0 Comments