Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-8


குறள்  443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

மருமவன... பெரியவங்களை மதிச்சு, பாராட்டி, அவங்களோட எப்பமும் சேந்து இருக்கணும். இந்தப் பழக்கம் இருக்குல்லா.. அது தான் மாப்ள  நமக்கு கெடைய்க்க  பேறுகள்லயே  ரொம்ப ஒசந்த பேறு. 

குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

ஒரு அரசாங்கம் தப்பு செஞ்சுச்சுன்னா, மருமவன... அந்த தப்பு பத்தி துணிஞ்சு எடுத்துச் சொல்ல சில பெருசுகள் கண்டிப்பா இருக்கணும். 

இந்த  கசப்பு மருந்தை கொடுக்கதுக்கு அவொ இல்லாமப்  போயிட்டாவொன்னு வச்சுக்க மருமவன... அந்த அரசாங்கத்தை கெடுக்கதுக்கு வெளிலயிருந்து வேற ஆளு யாரும் வராண்டாம். 

அப்படி யாரும் இல்லாமலயே,  அந்த அரசாங்கம் தன்னால நாசமாப் பொயிரும். மருமவப்புள்ளை இதை நல்லா புரிஞ்சிக்கிடணும். 

குறள் 449.
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

ஒரு கட்டிடத்தை நல்ல தாங்கிப் பிடிய்க்கது அதோட தூண்கள். தங்களைக் காப்பாத்த அந்த தூண் மாதிரி நல்ல துணை கெடைய்க்காதவொளோட நெலைமை எப்படி இருக்கும்னா, முதல் போடாம செய்யுத வணிகத்துல வருமானம் வராத மாதிரி இருக்கும் மாப்ள. 

குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

மாப்ளை... செய்யக்கூடாத சோலி எதையும் செஞ்சம்னா கேடுதான் வரும். அதே மாதிரி செய்யக் கூடிய சோலியை செய்யாம விட்டோம்னாலும், கேடுதான் வரும். 

சுருக்கமா சொல்லணுமுன்னா, செய்யக் கூடாததை தொட்றக் கூடாது. செய்ய வேண்டியதை விட்றக் கூடாது. நல்ல புரிஞ்சுக்க மாப்ள. 

குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 

யோவ்.. ஒரு சோலில எறங்கதுக்கு முந்தி, அதுல்லாம் நமக்கு தோது வருமான்னு தெளிவா தெரிஞ்ச பொறவு தாம்யா அதுல எறங்கணும்.
எடையில எதாவது சிக்கல் வந்தா, அப்பம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா எறங்கிறது பெரிய தப்பு. 

குறள் 471:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

ஏல.. ஒரு போட்டியில எறங்கப் போறதுக்கு முன்னால நீ செய்யப் போற சங்கதி யோட சிறப்பு, ஒன்னோட பலம்,  எதிராளியோட பலம், எதிராளிக்கு ஏண்டுகிட்டு எவன் எவன் வருவான்... இதைப்பத்தில்லாம் நல்லா விசாரிச்சு தெரிஞ்சப் பொறவு தாம்டே  நீ களத்துல எறங்கணும்... என்ன சரியா... ?

குறள் 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

மாப்ள..  ஒரு வேலையை செய்ய எறங்குததுக்கு முன்னால, இதை நம்மால முழுசா செய்ய முடியுமான்னு யோசிக்கணும். 

அப்படில்லாம் பாக்காம, எதோ ஒரு ஆர்வக் கோளாறுல அந்த வேலையை செய்ய தொடங்கிட்டு, பொறவு அதை செஞ்சு முடிக்க முடியாம இடையில விட்டுட்டு கெட்டுப் போனவங்க ரொம்ப பேர் இருக்காங்க மாப்ள. 

குறள்  475 
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்.

மயில் எறகுங்கிறது எடை இல்லாததுதாம்யா. அதுக்காக நீரு வாட்ல அதை எக்கச் சக்கமா வண்டியில ஏத்திராதேரும். அப்பிடி ஏத்துனேருன்னு வச்சுக்கிடும்... பாரந் தாங்காம, வண்டியோட அச்சு சடார்னு நொரிஞ்சு பொயிரும்.(தொடரும்) 



Post a Comment

0 Comments