ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வைத்து டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச தொடர்களைத் தவிர பிற போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானும் நேரடியாக மோதாததால் உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மோதும் போட்டி மிகப்பெரிய அளவில் கவனம் பெறுகிறது.
இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுவது வழக்கமாக இருந்துவருகிறது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது என்ற வரலாற்றுச் சாதனை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்துவந்தது. அந்தச் சாதனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் கடுமையாக திணறினர். பேட்டிங்கில் 150 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. அதில், முகம்மது சமி 3.5 ஓவரில் 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். நேற்றைய் போட்டியில் இந்தியாவின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத இந்திய ரசிகர்கள் முகம்மது சமியை அருவருக்கத் தக்க வகையில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அவர் இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டார் என்பது போலவும், அவர் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்பது போலவும் அருவருக்கத் தக்க வகையில் விமர்சனத்தில் ஈடுபட்டனர்.
இது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் சமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘முகம்மது சமி நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். இவர்கள் அனைவரும் வெறுப்புத் தன்மையால் நிறைந்தவர்கள் ஏனென்றால் யாரும் அவர்களுக்கு அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பதிவில், ‘நாம் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்கும்போது இந்திய அணியின் சார்பாக விளையாடும் அனைத்து வீரர்களையும் ஆதரிக்க வேண்டும். முகம்மது சமி உலகத் தர பந்துவீச்சாளர். நான் முகம்மது சமிக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


0 Comments