கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-1

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-1

(காலஞ்சென்ற இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக!.Nov 13, 2021 ஆம் ஆண்டு இஸ்மத் பாத்திமா அவர்களுடனான வேட்டைநேர்காணலை மீண்டும் பதிவிடுகின்றோம்.)

பானகமுவ ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிவான் அல்ஹாஜ் ஏ.ஸீ செய்ய்து அஹமது அவர்களினதும் மர்ஹுமா ஹாஜியானி கே.ரீ.ரஹுமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும் பஸ்யாலயைச் சேர்ந்த தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளரான ஜனாப் எம்.ஏ.எம்.றிப்தி அவர்களது துணைவியாரும், எம்.ஆர்.அகீல் அஹ்மதுவின் அன்புத் தாயாருமான  கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று அதிபர், சிறந்த ஆளுமை நிரவாகத்திறமை, மும்மொழித் தேர்ச்சியும் மிக்கவர். கவிஞர், எழுத்தாளர், "இரண்டும் ஒன்று", "புதையல் தேடி" என இரண்டு கவிதைத் தொகுதிகளை படைத்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் எடுத்த எடுப்பிலேயே கவி படைப்பவர். இவரது புதையல் தேடி கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு செய்யப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாக இருக்கின்றது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர் கல்வித் துறையிலும் கலைத் துறையிலும் நிறைய விருதுகளைத் தனதாக்கியவர். அவருடனான நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.

முக்கியமாக நான் விரும்பிப் படிக்கும் வேட்டை சஞ்சிகையில் இந்த நேர்காணலை பிரசுரிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

ஆரம்ப காலம் தொட்டு இலங்கையில் இலக்கியம் வளர்த்த ஊர் கல்ஹின்னை. என் பிறந்த ஊரின் பக்கத்து ஊர்.   எப்போதும் எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்குவிக்கும். ஏனைய சஞ்சிகைகளைக் காட்டிலும் வேட்டை சஞ்சிகையில் அதைக் காண முடிகிறது.   "வேட்டை" மின்னிதழ் சஞ்சிகையின் ஆறு வருட வெற்றிப் பயணம் மேலும் சிறப்புக்களுடன் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.

Nov 13, 2021

 நேர்கண்டவர் அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ்  

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:உங்களுடைய ஆரம்ப கல்வி மற்றும் உயர் தரக் கல்வி பற்றி உங்களால் குறிப்பிட முடியுமா?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;முதலில் நீங்கள் என்னை நேர்காண்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். முதற்கண் இறைவனுக்கும் அடுத்து உங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை எனது சொந்த ஊராகிய குருநாகல், பானகமுவ கு/இப்/அந்-நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் நான்காம் வகுப்பு வரை பயின்றேன். தரம் இரண்டில் double promotion பெற்று தரம் நான்கில் கல்வி கற்றேன்.

பின்னர் ஐந்தாம் தரத்திற்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள தற்போது நான் வசிக்குமிடமான பஸ்யால், நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயம் தற்போது பாபுஸ்ஸலாம் முஸ்லிம் மஹா வித்தியாலயம் என்றழைக்கப்படும் பாடசாலையில் தரம் 5 தொடக்கம் ஏழு வரை கல்வி பயின்றேன். அதன் பின்னர் மீண்டும் சொந்த ஊராகிய பானகமுவயில் கல்விப் பொது தராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்றேன். க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலத்தில் அதிவிசேட சித்தியையும் மற்றும் அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகளையும் பெற்றேன். அதன் பின்னர் கல்விப் பொது தராதர உயர்தரப் படிப்பை மேற்கொள்வதற்காக கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் என்னுடைய கல்வியினை மேற்கொண்டேன் அங்கு இரண்டு வருடங்கள் கல்வி கற்றேன். அப்போது உயர் தரத்தில் நான்கு பாடங்கள் கற்க வேண்டும். இஸ்லாம் பாடத்தில் அதி விஷேட சித்தியையும் மற்றும்,மூன்று திறமைச் சித்திகளையும்பெற்றுக் கொண்டேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்: உங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகள் சேவை அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;நான் என்னுடைய உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்ததன் பின்னர் பஸ்துண்ரட கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தலுக்கான தேசிய டிப்ளோமா (Diploma in Teaching English as Second Language ) மூன்று வருட பாடநெறியைச் சிறப்பாக பூர்த்தி செய்து அதிவிஷேட சித்தியைப் பெற்று ஆங்கில ஆசிரியராக குருனாகல் பரகஹதெனிய தேசிய பாடசாலைக்கு முதலாவதாக நியமனம் பெற்றுச் சென்றேன். அங்கே இரண்டரை வருடங்கள் மிகவும் சிறப்பாக சேவையாற்றினேன். அதனைத் தொடர்ந்து திருமணத்தின் பின் கணவருடைய ஊரான பஸ்யாலயிற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டேன். அதனைத்தொடர்ந்து ஆங்கில ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக போட்டிப் பரீட்சைகளில் சித்தி எய்தி அந்தந்த பதவிகளை வகித்தேன். தற்பொழுது இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று அதிபராக பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றேன்.

கல்வி சம்பந்தமாகக் குறிப்பிடுவதென்றால் நான் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் உள்வாரியாக என்னுடைய பட்டப் படிப்பைப் பூரணப் படுத்திக் கொண்டேன். அத்தோடு ஆங்கிலம் சம்பந்தமான பல பாடநெறிகளையும் “Diploma in Teaching English as Second Language" ஒரு வருடக் கற்கை நெறியையும் உள் வாரியாகச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் "Advanced Diploma in English for Academic and Administrative Purposes" எனும் ஒரு வருட கற்கை நெறியையும் மிக சிறப்பாக பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறும் பெற்றேன்.

இதுபோன்று இன்னும் "Certificate Course in Professional Skills Development" English (CCPSD) எனும் மூன்று மாத பாடக்கற்கை நெறியையும் சிறப்பாகக் கற்றேன். மேற்கூறப்பட்ட சகல கற்றல் விடயங்களிலும் எனது கணவர் தற்போது தரகா நகரில் ஆசிரியர் வாய்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளராக விரிவுரையாளராகப் பணிபுரியும் ஜனாப் எம்.ஏ.எம்.றிப்தி அவர்களும் நானும் ஒன்றாகவே இருந்து கற்றல் விடயங்களைத் தொடரக்கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

அதுமட்டுமன்றி கணினித் துறையிலும் தற்கால உலகில் ஈடுகொடுத்து நிற்கக் கூடிய அளவிற்கு கணினி அறிவையும் கற்று எங்களை நாங்கள் இருவருமே வளப்படுத்திக் கொண்டோம். "International Computer Driving License" ICDL பாடநெறியை 2008 இல் மிகவும் சிறப்பாக கற்றுக் கொண்டோம்.

அடுத்ததாக நான் Post Graduate Diploma in Education Management ஐ முடித்து அதிலும் விஷேட சித்தியினைப் பெற்றுக் கொண்டேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:நீங்கள் பாடசாலையில் ஆரம்பத்தில் கற்றுக் கொண்டிருந்த பாடசாலைகளில் பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள் விருதுகள் சான்றுகள் பற்றியும் குறிப்பிட முடியுமா?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;பாடசாலையில் கற்றுக் கொண்டிருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலத்தில் மிகவும் அக்கறையும் ஈடுபாடும் எனக்குள் இருந்தது. ஆங்கிலத்தைக் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆங்கில தினத்தில் பாடசாலை மட்டத்தில், கோட்ட மட்டத்தில், மாகாண மட்டத்தில் என கையெழுத்துப் பிரதிப் போட்டி, கவிதை பாடல் போட்டிகள் பேச்சுப்போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன்.

மேலும் தமிழிலும் பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டதுண்டு. ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் கவிதைகள். கதைகள், கட்டுரைகள், இலக்கணம், இலக்கியம் போன்ற சகல விடயங்களையும் நிறைய வாசிப்பதுண்டு இதற்கு என்னுடைய தந்தை நிறைய பங்களிப்புச் செய்துள்ளார். என்னுடைய தந்தை நிறைய இலக்கண இலக்கிய புத்தகங்கள் வாங்கித் தருவார். பாடசாலை விடுமுறை காலங்களிலும் பாடசாலை வாசிகசாலையிலிருந்து புத்தகங்களைப் பெற்று வந்து வாசிப்போம். இன்னும் அந்த ஞாபகங்கள் மனதில் பசுமையாக உள்ளன. அத்தோடு வீட்டிலும் ஒரு வாசிகசாலை போன்று ஒரு பெரிய அலுமாரி நிறையப் புத்தகங்கள் உள்ளன. அதனை வாசிப்பதுவும் மிகவும் சுவை தரக்கூடியதாக இருந்தது. இன்னும் அந்த இனிமையான ஞாபகங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன. அதுமட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் பங்கேற்று இல்ல மட்டத்தில் கோட்ட மட்டத்தில் நிறைய சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:முதலாவது படைப்பு பத்திரிகையில் வெளிவந்த போது எவ்வாறான ஒரு தாக்கத்தையும் உணர்வுகளையும் ஏற்படுத்தியது? அது பற்றி குறிப்பிட முடியுமா?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;இளமைப்பராயம் தொட்டு ஆசிரிய பயிலுனராக இருக்கும் வரைக்கும் எத்தனையோ கவிதைகள் எழுதியுள்ளேன். எந்த பத்திரிகைகளுக்கும் அனுப்பியதில்லை. காரணம் அதற்கான  வழிகாட்டுதல்கள் எதுவும் கிடைத்ததில்லை.

பாடசாலை மாணவியாக பின்னர் கல்வியில் கல்லூரியில் பயிலுனராக, ஆங்கில ஆசிரியராக, ஆங்கில ஆசிரிய ஆலோசகராக அதன் பின்னர் அதிபர் எனும் பொறுப்பை சுமந்த பின்னர் தான் என்று முதல் கவிதை பத்திரிகையில் பிரசுமானது. நான் அப்போது கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய சந்தரப்பம் அது. பாடசாலை மாணவர்களுடைய அடைவுகளை வெற்றி வாகை சூடும் நிகழ்வுகளை நவமணி பத்திரிகைக்கு அனுப்புவது வழக்கம். அந்த சந்தர்ப்பத்தில் தான் என்னுடைய முதலாம் கவிதைப் படைப்பான இடம் கொடுங்கள் இலை மறைகாய்களுக்கு" எனும் கவிதை நவமணி பத்திரிகையில் வெளியானது. அந்த சந்தரப்பத்தில் வெளியான மகிழ்ச்சியின் இன்பம் இன்னும் என் உள்ளத்தில் வழிந்தோடுகிறது. எனது எழுத்துக்களை அதன் கருத்துக்களை கவிதை வடிவில் எழுத்துக்களாக நவமணியில் கண்டபொழுது இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மீண்டும் பிறந்தது போன்ற ஓர் உணர்வும் இன்னும் நிறைய எழுதி சாதனைகள் பல படைக்க வேண்டும் எனும் எண்ணமும் எனக்குள் வேர்விட்டது. அது அழகான உணர்வின் அனுபவப் அதிர்வு. அதே அந்த அனுபவம் மென்மேலும் என்னை எழுதத் தூண்டியது. ஒவ்வொரு வாரமும் எழுதினேன். எழுதி அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்த பத்திரிகையில் வரும் என்னுடைய கவிதைகளை வெட்டி எடுத்து நேர்த்தியான முறையில் ஒட்டி எடுத்து சேர்த்து வைப்பேன். எனது முதல் ஆக்கம் நவமணிப் பத்திரிகையில் வருவதற்கு நவமணியின் பிரதம செய்தி ஆசிரியர் அல்ஹாஜ் எம். எஸ்.எம் ஷாஜஹான் அவர்கள் தான் காரணம். எனவே அவர்களுக்கு நான் எனது நன்றியினைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். அவர் மாத்திரம் எனது கவிதையை பத்திரிகையில் பிரசுரிக்காதிருந்தால் எனது இனிய கவிதைகள் அகிலத்தில் மணம் பரப்பியிருக்காது. இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்திருக்காது. எனவே அந்த சகோதரர் அவர்களுக்கு எனது நன்றியினை மிகவும் அன்புடன் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

என்னுடைய கவிதை பத்திரிகையில் வெளிவந்த பொழுது உடலுக்கும் உள்ளத்துக்கும் தெம்பை அளித்தது. மிகுந்த சக்தியையும் தைரியத்தையும் அது கொடுத்தது. அதிபர் எனும் நிர்வாகியாக இருந்து நிறைய வேலைகளை செய்வதற்கு சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் மென்மேலும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது. மேலும் சமூக அவலங்களை சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய கருத்திக்களை கவிதையாக வடித்து பத்திரிகையில் பிரசுரமானதுமே என்னுடைய மனபாரம் குறைந்ததாக உணர்வேன். மேலும் நான் கவிதை எழுதுவது போல் என்னுடைய மாணவச் செல்வங்களும் என்னுடைய கவிதைகளை வாசிப்பதற்கும் அது போன்று எழுதவும் முயற்சித்தார்கள். தற்பொழுதும் முயற்சிக்கிறார்கள். எனவே எனக்கு அவர்களுக்கு வழிகாட்டவும் வாய்ப்பாகவுள்ளது. அது போன்ற கவிதைகளை அவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் கவிதைகளை எழுதி என்னிடம் கொண்டு வந்து காட்டுவார்கள். எனவே அவர்களையும் ஊக்கப் படுத்தும் முகமாக ஆசிரியர்களுடைய கவிதைகளையும் மாணவர்களுடைய கவிதைகளையும் நானே பத்திரிகைக்கு அனுப்பி அவை பிரசுரமான பின்னர், அவர்களுக்கு அந்த பத்திரிகைப் பிரதி ஒன்றையும் அன்பளிப்பு செய்து வைப்பேன். அதன் விளைவாகவே எனக்குள் மென்மேலும் கவிதை ஊற்று பெருக்கெடுத்தது. அதன் விளைவாக இன்று இரண்டு கவிதைப் புத்தகங்களை தொகுத்து சமூகத்தின் கரங்களில் ஒப்படைத்த மனத்திருப்தி எனக்குள். இதற்கு அருளாய் வரம் தந்த இறைவனையும் புகழ்ந்து என்னுடைய நன்றியை என்னுடைய ஊக்குவிப்பாளர்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

ஆரம்பத்தில் நவமணியில் பூத்த என்னுடைய கவிதைகள் பின்னர் விடிவெள்ளி, தினகரன், மெட்ரோ நியுஸ், சுடர் ஒளி, எங்கள் தேசம், மித்திரன் வார மலர், சஞ்சிகைகளான அல்ஹஸனாத், பூங்காவனம், உதயம்(இந்தியா). ஞானம், நீங்களும் எழுதலாம் போன்ற மாதாந்த, மற்றும் காலாண்டு சஞ்சிகைகளிலும் வியூகம் இணையதளத்திலும் என்னுடைய முக நூலிலும் (Fathima Ahamed) பிரசுரமானது. எனவே என்னுடைய கவிதைகளை பிரசுரித்த அந்த செய்தி ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றும் எனது முதல் படைப்பு பத்திரிகையில் வெளியானது ஒரு பேரானந்தமாக இருந்து கொண்டிருக்கின்றது. அதன் இன்பத்தின் நுகரச்சியை இன்னும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:உங்களது நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றி அறியத் தாருங்களேன்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;எனக்கு இதுவரை "இரண்டும் ஒன்று", "புதையல் தேடி" என இரண்டு தமிழ் கவிதைத் தொகுப்புக்களை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த இரு நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பங்களிலும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து உறுதுணை வழங்கியவர் எனது அன்புக் கணவரும், ஆசிரிய வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப் எம்.ஏ. எம்.றிப்தி அவர்களும் என்னுடைய அன்பு மகன் எம்.ஆர்.அகீல் அஹமத் மற்றும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் ஆவர். எனவே நான் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

அடுத்ததாக எனது முதல் நூலை தயாரிக்கும் சந்தரப்பத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த கலாபூஷணம் பி.ரீ.அஸீஸ் அவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். இதில் ISBN இலக்கம் எடுப்பது முதல் இறுதி வரை சகல வழிகாட்டல்களையும் தந்தார்கள். இச்சந்தரப்பத்தில் அவர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். முதல் நூலை தயாரிப்பதற்கு பெற்ற அனுபவத்தைக் கொண்டு இரண்டாவது நூலை எனக்கே ஓரளவு இலகுவாக சுயமாக செய்து கொள்ள முடிந்தது. இருப்பினும் இந்த நூல் வெளியீட்டின் போது மேலும் சிலர் எனக்கு பக்கபலமாக இருந்து பங்களிப்புச் செய்தார்கள். எனவே அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல் வெளியீடு என்பது காலத்தால் மறக்க முடியாத ஒரு அனுபவப் பகிர்வு. அது ஒரு பெரிய அனுபவப் பதிவாக உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. என்னுடைய முதல் நூல் வெளியீட்டு விழாவின்போது 300-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தார்கள். அது ஒரு ஆனந்தமான ஒரு சிறிய இலக்கிய விழாவாக இருந்தது. அது பற்றி முன்னாள் தர்கா நகர் கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதியான கலைவாதி கலீல் ஆசிரியர் அவர்கள் "கல் எலியவில்... ஒரு குட்டி இலக்கிய விழாவாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா" எனும் தலைப்பில் 2018/01/10 ஆம் திகதி தனது அனுபவப் பகிர்வை நவமணியில் அழகியதொரு கட்டுரையாக வடித்திருந்தார். கலைமான்களும் பல  கல்விமான்களும் பல ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்த இனியதொரு வைபவமாக அது இருந்தது.

அதே போன்று இரண்டாவது நூலுக்கும் அநேகமானோர் வந்து கலந்து கொண்டார்கள். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏனெனில் இரண்டு நூல் வெளியீடுகளிலும் என்னுடைய தந்தை, ஓய்வு நிலை முன்னாள் அதிபர், சமாதான நீதிவானான அல் ஹாஜ் ஏ.சீ.செய்யது அஹ்மது அவர்கள் கலந்துகொண்டமை வாழ்வில் இனிய நிகழ்வாகும். என்னுடைய இரண்டாவது நூலில் என்னுடைய அன்புக் கணவரும் தர்கா நகர் ஆசிரியர்கள் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் ஜனாப். எம்.ஏ.எம்.றிப்தி அவர்கள் தலைமை தாங்க என்னுடைய தந்தை. முன்னாள் அதிபர், சமாதான நீதிவானுமான அல் ஹாஜ் ஏ.சீ.செய்யது அஹ்மது அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவரை பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தமை என் உள்ளத்துக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது தாயின் திடீர் மறைவையொட்டியே நான் இத்தனை வேகத்தில் தந்தை முன்னிலையில் இந்த நூல் வெளியீட்டை செய்வதற்கு எண்ணங் கொண்டேன். என் எண்ணம் அல்லாஹ்வின் அருள் கொண்டு நிறைவேறியது.

அதே சந்தர்ப்பத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ.அஸீஸ் அவர்கள் கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினால் எனக்கு "கவியரசி" எனப் பட்டம் தந்து பொன்னாடை போர்த்தி விருதும் கேடயமும் வழங்கி எனக்காக காவியம் பாடி என்னை கௌரவித்தமை வாழ்வில் எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகின்றது. இந்த இரு நூல் வெளியீடுகளிலும் கல்வியியலாளர்கள், இலக்கிய ஆர்வளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் வந்து கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வுகளுக்கு சில நண்பர்கள் எனக்கு உதவி புரிந்தமை எனது உள்ளச் சுமையை இலகுபடுத்தியது. எனவே இந்த சந்தரப்பத்தில் அந்த நல்லுள்ளம் கொண்டு உதவி புரிந்த மற்றும் வந்து கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:படைப்பிலக்கியப் பணிகளுக்காக நீங்கள் சமூக மட்டத்தில் பெற்ற விருதுகள் பாராட்டுகள் ஏதும் உண்டா? நீங்கள் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுண்டா? அது பற்றிய விவரங்கள்?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;படைப்பிலக்கியப் பணிகளுக்காக சமூக மட்டத்தில் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளேன். 2018 ஆம் ஆண்டில் மிரிகம பிரதேச மட்டத்தில்  திறந்த மட்ட இலக்கியப் போட்டிகளில் சிறுவர் கதை, பாட்டு என ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் மொத்தமாக நான்கு முதலிடங்களை பெற்றுக்கொண்டேன். அடுத்து மாவட்ட மட்டத்திலும் மூன்று முதல் இடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்றேன். அத்தோடு தேசிய மட்டத்தில் சிறுவர் கதை எழுதுதல் போட்டியில் இரண்டாமிடம் கிடைக்கப்பெற்றது. இதற்கு வெள்ளிப்பதக்கம், ரூபாய் 7500 /= காசோலை, சான்றிதழ் என்பன கிடைத்தன. இந்த நிகழ்வு 2019 March மாதம் 05 ஆம் திகதி BMICH இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்ததாக 2019 ஆம் ஆண்டில் மீரிகம பிரதேச மட்டத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற இரு மொழிகளிலுமாக கவிதை, சிறுவர் கதை, சிறுகதை, நூல் விமர்சனம், பாட்டு, போன்ற ஒன்பது போட்டிகளிலும் பங்குபற்றி ஒன்பது முதலிடங்களைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து மாவட்ட மட்டத்தில் எட்டு முதலிடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டேன். இதற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு நாட்டின் அசாதாரண நிலைமை ( கொரோனா) காரணமாக இன்னும் நடைபெறவில்லை.

மேலும் சிறந்த அதிபருக்கான விருதாக "விதுகல்பதி அபிநன்தன -2018" (Viduhalpathi Abinandana 2018) கேடயம், வெண்கலப்பதக்கம், சான்றிதழ் என்பன கிடைக்கப்பெற்றன. இவையே நான் பெற்றுக்கொண்ட விருதுகளும் பாராட்டுகளுமாக இருக்கின்றன. மேலும் இன்னும் பல விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்னும் பல நிகழ்வுகள் நடக்காமல் உள்ளன. எனவே கூடிய சீக்கிரம் அவை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இவை தவிர இளம்பராயத்தில் ஆங்கில மட்டப் போட்டிகளிலும் தமிழ் தினப் போட்டிகளிலும் நிறைய விருதுகள் பாடசாலை மட்டத்தில், கோட்ட மட்டத்தில் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றுள்ளேன்.

அடுத்து எழுத்தாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்கான அழைப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. அது கடந்த 2018.09.04 ஆம் திகதி நடைபெற்றது. இது உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய மற்றும் வெளியீட்டுப் பிரிவினால் நூலாக்கத்தில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்களுக்காக நடைபெற்றது. இதன் போது இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். இதன் போது  எழுத்தாளர்களுக்கிடையேயான நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post