கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-2

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-2

(காலஞ்சென்ற இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக!.Nov 13, 2021 ஆம் ஆண்டு இஸ்மத் பாத்திமா அவர்களுடனான வேட்டைநேர்காணலை மீண்டும் பதிவிடுகின்றோம்.)

சென்ற இதழின் தொடர்ச்சி..!

Nov 20, 2021

நேர்கண்டவர் அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ்  

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:இலக்கியத் துறைக்கு மேலதிகமாக நீங்கள் அதிபர் சேவையைச் சேர்ந்த ஒரு தரம் பெற்ற பெண் அதிபராக கடமையாற்றி வருகின்றீர்கள். வேலைப்பளுவான இயந்திர மயமான இந்த காலத்தில் இரண்டு துறைகளையும் உங்களால் செய்வதற்கு உங்களுக்கு நேர காலங்கள் உண்டா? இது குறித்த அனுபவங்களை பகிருங்களேன்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;இது சிறந்ததொரு கேள்வி. நீங்களும் ஒரு அதிபர் என்ற வகையில் ஒரு அதிபரின் வேலைப்பளு பற்றி நன்றாகவே உங்களுக்கு தெரியும்.

இலக்கியத் துறைக்கு மேலதிகமாக அதிபர் சேவையைச் சேர்ந்த ஒரு தரம் பெற்ற அதிபராக கடமையாற்றி வருவதோடு என்னால் இயன்ற அளவு இலக்கியம் வளர்க்க பாடுபடுகின்றேன். வேலைப்பளுவான இயந்திரமயமான இந்த காலத்தில் இரண்டு துறைகளையும் சரிசமமாக செய்வதற்கு முயற்சிகள் செய்கிறேன். இந்த இரண்டிலும் முதலில் அதிபர் பொறுப்பை உடனுக்குடனே சகல காரியங்களையும் செவ்வனே நிறைவேற்றிவிடுவேன். எப்போதெல்லாம் இலக்கிய ஊற்று எனக்குள் ஊருகிறதோ அப்போதெல்லாம் அவற்றை  கைப்பேசியிலே வடித்து வைத்துக்கொள்வேன். சிலவேளை அவற்றைக் குறித்துக் கொள்ள முடியாமல் போவதுமுண்டு பிறகு அந்த எண்ண ஊற்று மனதைவிட்டும்  நீங்கிவிடுவதால் கவிதைகள் பலவற்றை வடிக்க முடியாது போயுள்ளது.

ஒரு பெண் என்ற வகையில் இலங்கை அதிபர் சேவையில் இயங்கும் ஒரு அதிபராக, பாடசாலை நிர்வாகத்தையும் வீட்டு நிர்வாகத்தையும் சிறப்பாக வேறு நபர்களின் உதவியின்றி கவனித்துக் கொண்டு இலக்கியம் படைப்பது என்பது என்னைப் பொறுத்த மட்டில் பெரிய சாதனை தான். இந்தச் சாதனையை நிலை நாட்ட எனது கணவர் எனக்கு பக்கபலமாக உள்ளார். அதே நேரம் சில பெண் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் படைப்பதற்கு அவர்களது கணவன்மார்களே' முட்டுக்கட்டையாக உள்ளார்கள். அந்த விதத்தில் எனது கணவர் என்னை ஊக்குவிப்பவர். கவிதைகள் பத்திரிகையில் பிரசுரமானால் அதனை வாங்கிக் கொண்டு வந்து தருபவர்.

அவரும் ஒரு அதிபராக இருந்ததனால் அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தவர். அந்த வகையில் அவர் எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார். அதே நேரம் இலக்கியம் படைப்பது பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் அவரிடம் இல்லை. இது எனக்கு முற்றிலும் வரப்பிரசாதமாக இருக்கிறது. 

அதே நேரம் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளுள் என்னைப் பொறுத்தவரை நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவான சமமான ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடியும் என்றால் அதுவே அவர்களது வாழ்வில் வெற்றியாகத் திகழும். நாம் எந்த வேலையையும் திட்டமிட்டு உடனுக்குடன் செய்ய வேண்டும். எந்த வேலையை நாம் நாளைக்கு செய்வோம், பிறகு செய்வோம் என்று பிற்போடுகின்றோமோ அந்த வேலை ஒரு போதும் நடைபெறுவதில்லை. இதனால் எங்களுக்குத் தான் இழப்புகள். இதனால் எப்போதும் எமது முன்னேற்றம் தடைப்படுகின்றது. அந்த வகையில் ஒரு பொறுப்பு மிக்க அதிபராக இருந்து கொண்டு நம் மாணவச் செல்வங்களுக்கு முன்மாதிரியாக நான் எனது சகல காரியங்களையும் நானே முயன்று செய்து கொள்வேன்.

மேலும் ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். அதாவது ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள். எப்படிபென்றால் ஒரு நேரத்தில் பலவிடயங்களையும் அவதானித்துக் கொண்டு இயங்கும் வல்லமை படைத்தவர்கள். இயற்கையின் அமைப்பிலும் வலிகளைத் 
தாங்கும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள். அந்த வகையில் அதிகாரிகளாக பெண்கள் இயங்குவது மிக இலகுவான காரியம். வீடுகளில் ஆண்களின் அடக்கு முறையினால் தான் பெண்களின் திறமை வெளியாவதில்லை. வளர்ச்சி பெறுவதில்லை. ஆனால் என்னுடைய வீட்டில் அப்படியில்லை. என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற (முன்னாள் அதிபர். சமாதான நீதிவானுமான அல்ஹாஜ் ஏ.ஸீ.செய்யது அஹமது மற்றும் எனது அன்பும் கணவர் முன்னான் அதிபரும் இந்நாள் தர்கா நகர் ஆசிரியர்கள் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப்
எம்.ஏ.எம்.றிப்தி அவர்களும் இரு தலைமைப் பதவிகள் வகித்து சமூகத்திற்காக சிறந்த சேவை செய்தவர்கள். அந்த வகையில் நானும் அவர்களை விடவும் தற்காலத்திற்கு ஏற்ப திறம்பட சேவைகள் செய்ய வேண்டும் என எனக்கு எப்போதும் ஊக்கம் தருபவர்கள். ஆதலால் எனக்கு மிகவும் தைரியமாக சேவை செய்யும் மனப்பக்குவம் எனக்குள் வேரூன்றிவிட்டது.


பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றி வீட்டில் எஜமானியாகவும் பொறுப்போடு கடமை புரிந்தாலும் எந்த வேலையையும் நான் பிற்படுத்துவதில்லை. பாடசாலை மேற்பார்வை மற்றும் வேலைகளை பாடசாலையில் செய்துகொள்வேன். பெரும்பான்மையான நேரங்களில் பாடசாலை வேலைகளையும் வீட்டுக்கு கொண்டு வந்து செய்வதுண்டு. ஆனால் வீட்டு வேலைகளை பாடசாலைக்கு கொண்டு சென்று செய்வது இயலாத ஒன்று. அதே நேரம் கவிதை எனும் பொழுது கவிதை ஊற்று வரும் பொழுது எழுதி வைத்துக் கொண்டால் தான் உண்டு. எழுத உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதப் போகிறேன் என்று இருந்தால் ஒரு நாளும் எனக்கு கவிதை எழுத முடிவதில்லை. ஆதலால் தன்னுடைய ஓய்வு நேரங்களில் அல்லது பின்னேரங்களில் அல்லது அழகிய இயற்கையோடு தனித்து இருக்கும் நேரங்கள்: போன்ற சந்தர்ப்பங்களில் கவிதை எண்ணங்கள் சிறகடிக்கும். கவிதை ஊற்றுகள் ஊற்றெடுக்கும். எனவே அச்சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசியில் டைப் (type) செய்து கொள்வேன். அதன் பின்னர் ஓய்வான நேரங்களில் அதனை மெருகூட்டி சீர் செய்து சரிப்படுத்திக் கொள்வதுண்டு. அதே நேரம் அந்தக் கவிதைகளைச் சீர் செய்து கொண்ட பின்னர் ஈமெயிலில் பத்திரிகைகளுக்கு உடனே அனுப்பி வைப்பேன். பின்னர் பத்திரிகைகளில் அந்த கவிதை வரும். பொழுது அதைக் காணும் இன்பத்தில் கவலைகள், கஷ்ட நஷ்டங்களையும் கூட மறந்து போவேன். ஏனெனில் தன்னுடைய எழுத்தினை அது தாங்கி வந்த கருத்தினை பத்திரிகையில் தான் படிக்கும் பொழுது எனக்கு அலாதி இன்பம். மற்றவர்களும் படித்துவிட்டு பாராட்டும் பொழுது மீண்டும் பிறந்து  விடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் மென்மேலும் உத்வேகத்தோடு அதிபராக வேலை புரியவும், வீட்டு வேலைகளை தானே செய்து கொள்வதற்கும் சக்தியும் தைரியமும் ஏற்படுகின்றது. ஆதலால், பெண் ஆகிய நான் அதிபராக இருந்து கொண்டு இலக்கியம் படைப்பது என்பது எனக்கு ஒரு பொழுதும் சிக்கலாக இல்லை. சில சமயங்களில் பாடசாலை அனுபவங்களே எனக்கு கவிதையின் கருவாக அமைவதுண்டு. அதே நேரம் மாணவ சமூகத்திற்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை மிகவும் குறைந்த சொற்களில் மிக இலகுவாக, அழகிய உரைநடையில், கவிதை வரிகளுக்குள் அடக்கி நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்தியம்பலாம். இதனால் தனது பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்று யார் யாரெல்லாம் அந்த கவிதைகளை படிப்பார்களோ அவர்களுக்கெல்லாம் அதில் படிப்பினையும், புத்திமதியும், அனுபவமும், அறிவும், ஆற்றலும், போய்ச் சேர்கின்றது. இது ஒரு நன்மையான காரியமாக இருக்கின்றது. ஆதலால் நான் இதனை மிகவும் ஈடுபாட்டுடன் விருப்புடனே இரு துறைகளிலும் ஈடுபடுகின்றேன். இந்த இரு துறைகளிலும் ஒன்றித்து பயணிக்க இலகுவாக இருக்கின்றது. மேலும் அதிபராக இருந்து நேர்மையாக பாரபட்சமின்றி மிகவும் பாடுபட்டு கடமைப் பொறுப்புக்களை செய்வதனால் இறைவனால் வழங்கப்பட்ட ஓர் அருளாக எனக்குள் இருக்கும் இந்த கவித்திறமையைக் கருதுகிறேன். அத்தோடு தாம் வாழும் நாட்களில் உச்சபயன் பெற வேண்டும். ஆண்டுகள் எத்தனை வாழ்கிறோம் என்பதை விட வாழ்ந்த ஆண்டுகளில் எவ்வளவு நல்லது செய்தோம் என்பதே முக்கியமாகும். அதாவது. சொற்ப காலத்தில் கூடுதலான வேலைகளைத் திட்டங்களை செய்து அமுல்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதே என்னுடைய பேரவா. அப்பொழுது தான், அது ஒரு சாதனையாக இருக்கும். ஏனெனில் கரைந்து கொண்டு செல்லும் வாழ்நாளை மிகவும் களிப்போடு, பிறர் பயன் பெற, கவிதைத் துறையில் காலூன்றி, கல்வித்துறையில் வேரூன்றி பயணிப்பதே என்னுடைய ஒரே ஆசையாக இருக்கின்றது. ஆதலால் கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் வீட்டுப் பொறுப்புக்களிலும் உன்னத அக்கறையோடு சகல காரியங்களையும் செவ்வனே செய்து கொண்டு செல்வது இயலுமாக இருக்கின்றது. அதே நேரம். நேரத்தைப் பூரணமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதே 24 மணி நேரம் தான் ஒரு நாளைக்கு இருக்கிறது. கிடைக்கின்றது. அவரவர் பயன்படுத்தும் விதத்தில் தான் அது குறுகியதாகவும் நீண்டதாகவும் பயனுள்ளதாகவும் பயனற்றதாகும் இருக்கின்றது. அதனால் ஒவ்வொருவரும் மனது வைத்தால் பல விடயங்களையும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தும் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளலாம். வாழ்வை வெற்றி பெறலாம்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:முஸ்லிம் பெண்கள் நிறுவனங்களை கட்டியால்வதென்பது சம்பிரதாய ரீதியாக இல்லாத நிலையில் தான் தொடர்ந்து வந்திருக்கின்றது. நீங்கள் ஒரு பெண் ஆளுமையாக பாடசாலையை நடாத்தி வருகிறீர்கள். உங்கள் பாடசாலையை நடத்த முடியுமான அனுபவங்கள் நீங்கள் பெற்றுக்கொண்ட சவால்கள், அதனை முறியடித்த விதங்கள் பற்றிக் கொஞ்சம் அனுபவ வாயிலாக குறிப்பிடுங்கள்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;முஸ்லிம் பெண்கள் நிறுவனங்களை கட்டியால்வதென்பது சம்பிரதாய ரீதியாக இல்லாத நிலையில் தான் தொடர்ந்து வந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் பெண்ணாக ஆளுமை மிக்க அதிபராக கடமை புரிவது மிகுந்த சவாலாகவே உள்ளது. பெண் ஆசிரியர்கள் நிறையப் பேர் இருந்தாலும் முஸ்லிம் பெண் அதிபர் எனும் போது மிகவும் குறைவானவர்களே உள்ளார்கள். சவால்கள் எனும் போது எண்ணிலடங்கா சவால்கள் உள்ளன. அன்றாடம் சவால்கள் எங்களுக்காகவே முளைவிடும், ஒரு பெண் அதிபர் யாருடைய உதவியும் இன்றி தனது வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடசாலையையும் நிர்வகிப்பது என்பதுவே ஒரு சவால் தான்.

அதே நேரம் அதிபர் எனும் ஆசனத்தில் அமர்ந்தால் எண்ணிலடங்காத பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கான ஆளுமையும், அனுபவமும், அறிவும், திறமையும், சந்தர்ப்ப ஞானமும், முடிவெடுக்கும் தீர்மானமெடுக்கும் திறமையும் வேண்டும். சில வேளை காலை உணவை உண்பதற்குக் கூட நேரம் இருக்காது. பாடசாலை நிர்வாகம் செய்யும் போது பல்வேறுபட்ட மனிதர்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள்,  பண்பாடு தெரிந்தவர்கள், பண்பாடு தெரியாதவர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், விஷயம் விளங்குபவர்கள், விளங்காதவர்கள், வயோதிபர்கள், இளவயதினர் எனப் பல்வேறுபட்ட மனிதர்களுடன் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஒவ்வொரு நபரையும் இணங்கண்டு அவர்களுடைய போக்கை அடையாளங் கண்டு அதற்கு ஏற்ற அமைப்பில் பிரச்சினைகளைத் தீர்வு செய்து தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். வரும் ஒவ்வொரு நபரது தேவைகளையும் தகவல் அறிதல் சட்டத்திற்கு அமைய அவர்கள் கேட்கும் விடயங்களையும் கொடுத்தாக வேண்டும் அல்லது பதில் சொல்லியாக வேண்டும். பாடசாலை நேரத்தில் ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுடைய ஆசிரியர்களுடைய பாடசாலை வளங்களுடைய பாதுகாப்புக்கும் பொறுப்புக்கும் அதிபர் என்பவர் பொறுப்புதாரி. அதே நேரம் மாணவர்களுடைய கல்வி ஒழுக்க நடவடிக்கைகள் யாவற்றிற்கும் அதிபரே பதில் சொல்ல வேண்டும்.

மேலும் பெண் அதிபர்கள் பாடசாலையை அழகான முறையில் நிர்வாகத்தைச் செய்து முன்னேற்றிச் செல்லும் போது குறிப்பாக சதிகாரர்களினது சூழ்ச்சியில் இருந்தும் தப்ப வேண்டும். இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலைகளை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

அது மட்டுமல்லாமல் நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் அறிவு தெரிந்தவர்களாகஇருக்க வேண்டும். சில நேரங்களில் E-mail or Google forms என்பன வரும் இதனை தற்போதே நிறைத்து அனுப்புங்கள் என்று. எனவே அவை பற்றிய அறிவும் தெளிவும் எமக்கு இருந்தேயாக வேண்டும்.

மேலும் பாடசாலையில் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றால் மும்மொழிகளிலும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். இல்லையேல் நிறைய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். மேலும் இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரையில் பாடசாலைகளை பார்த்தால் மாணவர்களில் நூற்றுக்கு 20 வீதமான ஆண் மாணவர்களே கல்வி கற்கின்றனர். ஆனால் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மாணவியர்கள். அவர்களே உயர் கல்வி கற்று பெரும்பாலும் ஆசிரியர்களாக எல்லா இடங்களிலும் பதவி வகிக்கின்றனர். இந்த மாணவ மாணவியர்களில் அந்த 20 வீதமான மாணவர்கள் தான் இன்று ஆசிரியர்களாகவோ அல்லது நிர்வாமிகளாகவோ விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் முஸ்லீம் பெண்கள் நிறுவனங்களை நிர்வாகிகளாக கையாள்வது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் அவர்கள் அலுவலக ரீதியாக நிறைய சந்தர்ப்பங்களில் வெளியே செல்ல வேண்டி ஏற்படுதல், ஆண்களோடு சரிசமமாக பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுதல், அத்தோடு அடிக்கடி வெளியே சென்று பாடசாலை தேவைகளை நிறைவு செய்வதற்கு கஷ்டப்பட வேண்டிய நிலைமை போன்ற நிலைமைகளை தடுக்கும் முகமாக பெண்கள் பொறுப்புக்களை அதிபராகவோ அல்லது வேறு வடிவிலோ ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற சூழ்நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தையார் அதிபராக சேவை செய்தவர். அதே நேரம் என்னுடைய கணவரும் ஒரு அதிபராக என்னுடனேயே சமகாலத்திய பதவி வகித்தவர். எனவே தந்தையையும் கணவரையும் அதிபராக கண்ட எனக்கு அதிபராக பணிபுரிவதை  பெரிய காரியமாக கருதவில்லை. உண்மையில் அதிபராகக் கடமை புரிவதற்கு ஆளுமை பண்பு ஆற்றல் அதிகாரம் திறமை மும்மொழி வளம் இன்முகத்தோடு வேலை செய்யக்கூடிய மனப்பக்குவம் வசீகரமான தோற்றம் சகல காரியங்களிலும் மக்களுடைய மனதை வெல்லும் திறன் போன்ற அனைத்தையும் ஒருமித்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பின் சிறந்த நிரவாகியாக இருப்பது சிக்கலானதாக ஒரு பொழுதும் இருக்காது. அதனை கலையாகக் கொண்டு செயல்பட்டு வந்தால் எதுவும் பெரிய துன்பமாக இருக்காது என்பது எனது கருத்து.

அந்த வகையில் நானும் இலங்கை அதிபர் சேவையில் 2009ஆம் ஆண்டிலிருந்து சேவை செய்து வருகின்றேன். என்னுடைய இந்த அதிபராகக் கடமை புரிந்த காலகட்டங்களில் பல நெருக்கடிகளையும் சில சிக்கல்களையும் எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆயினும் அவற்றில் துவண்டு போகாமல் மீண்டும் தன்னைத் தானே தைரியமூட்டிக் கொண்டு இன்னும் பயணிக்கிறேன்.

நான் அதிபராக கடமை புரிந்த பாடசாலைகள் இறைவனருளால் மிகவும் துரிதமான வளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு நல்ல பல உள்ளங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகவும் இருக்கின்றது. மேலும் நான் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் செயற்படுவதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களிடையே பாரபட்சமின்றி நடந்து கொள்வதனால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடமிருந்து உயர் அதிகாரிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும்மற்றும் அனைவரிடமிருந்தும் நன்மதிப்பையும் சிறந்த நிர்வாகி என்ற பெயரையும் பெறக்கூடியதாக இருக்கின்றது.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் நீங்கள் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தற்பொழுது கடமையாற்றும் பாடசாலைக்கு நீங்கள் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள்?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;நான் தற்போது பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிகிறேன். இந்த பாடசாலை தரம் 11 வரையுள்ள Type 2 பாடசாலையாகும். இந்த பாடசாலை 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் க.பொ.த (சா/த) வகுப்பு வரையே உள்ளது. மொத்தமாக மாணவர்கள் 250 பிள்ளைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறார்கள். சில மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு பிற பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். சில மாணவர்கள் வெளியே சென்று கற்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சாதாரண தரத்துடனேயே வீட்டிலே இருந்து விடுகிறார்கள். ஆதலால் பிள்ளைகளது கல்வி, கலை, கலாச்சார, ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதோடு மாணவர்களுக்கு க.பொ.த(உ/த) ஐ இந்த பாடசாலையிலே கற்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இலங்கையில் சிறந்த ஒரு பாடசாலையாக உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளேன். 

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:உங்கள் பாடசாலைக்கு சமூகப் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;எனது பாடசாலை சகல இன மதத்தவர்களும் வாழும் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே சில தனிப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. பாடசாலைத் தேவைகளின் போது வசதிபடைத்த பெற்றோர்கள் சில தனி நபர்கள் உதவிகள் செய்துள்ளார்கள். அதே போன்று ஒரு சில தனியார் நிறுவனங்களும், சில NGO's உம் பங்களிப்புச் செய்துள்ளன.

வசதி வாய்ப்புள்ளவர்கள், தனவந்தர்கள், யாவருடைய உதவி ஒத்தாசைகளையும் எடுத்துக் கொண்டு தான் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை செய்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அரசினால் கிடைக்கும் உதவிகள் மாணவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப குறைவாகவே கிடைப்பதனால் அவற்றைக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. அந்த வகையில் சில பெற்றோர்களும் தனவந்தர்களும் பாடசாலைக்குத் தொண்டாற்றி வருகின்றனர். பாடசாலைக்கு உதவுவதானது ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த நன்நோக்குடைய மனிதர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:உங்கள் பாடசாலையில் மாணவர் நலன்புரி விஷயங்கள் எந்த நிலையில் உள்ளது? எதிர்காலத்தில் என்னென்ன நுட்ப முறைகளை நீங்கள் பாடசாலையைக் கட்டிக் காப்பதற்காக ஆலோசனைகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்? இது பற்றி சொல்லுங்களேன்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;எனது பாடசாலையில் மாணவர்களுடைய நலன்புரி விஷயங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. தரம் 01 தொடக்கம் 05 வரையான சகல் மாணவர்களுக்கும் காலையுணவு வழங்கப்படுகிறது. மேல் வகுப்புகளில் யாராவது உணவு கொண்டு வரவில்லை என்றாலும் அவர்களுக்கும் உணவு வழங்கி வைக்கப்படும். மாணவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்படும். அதற்கென ஒரு பொருத்தமான முதலுதவி அறை, கட்டில், மருந்துப் பொருட்கள், முதலுதவி வழங்க ஆசிரியர் வசதிகளும் உள்ளன. அடுத்து தேவையேற்படின் பெற்றோருக்கு தகவல் சொல்லி அனுப்பப்படும். 

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு வருடாவருடம் தனவந்தர் ஒருவர் மூலமாக சகல மாணவர்களுக்கும் கற்றலுக்கு தேவையான பயிற்சிக் கொப்பிகள். எழுதுகருவிகள் என்பன கொடுக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான மூக்குக்கண்ணாடி வசதிகளும் ஒரு தனவந்தர் மூலமாக செய்து கொடுக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உடல் உளவள ஆரோக்கியம் சம்பந்தமான கருத்தரங்கு நிகழ்வுகளையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். மற்றும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல். Motivational program ஆகிய கருத்தரங்குகளைச் செய்கிறோம். இதற்கு ஊரில் உள்ள NGO'S மற்றும் வளவாளர்கள் உதவி செய்கின்றனர்.

மேலும் தற்போது இருக்கும் குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள், வகுப்பறை வசதிகளை இன்னும் சிறப்பாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளோம்,

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:பாடசாலை ஒன்றின் வெற்றிக்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெரிதும் பங்காற்றுகின்றது. நீங்கள் பாடசாலையை பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் நிலை எந்த நிலையில் உள்ளது பற்றிக் குறிப்பிடுங்கள்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;நான் தற்பொழுது மினுவங்கொடை வலயத்தில் பஸ்யால, எல்லமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இந்த பாடசாலைக்கு 2020 பெப்ரவரி 20ஆம் திகதி அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டேன். நாம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியானவர்களல்ல. சில மாணவர்கள் கல்வியில் அதிவிஷேட திறமை காட்டுவார்கள். சில மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டுவார்கள். உண்மையில் மாணவர்களை இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தான் சிறந்த ஆளுமையுள்ள எதிர்கால சந்ததிகளை உருவாக்கலாம். அந்த வகையில் நான் பாடசாலையைப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே தரம் 06 உம் அதற்கு மேற்பட்ட வகுப்புகளும் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் வகுப்பாசிரியரின் வழிகாட்டுதலோடு காலைக் கூட்டத்தை நடாத்துவார்கள். இந்தக் களம் மாணவர்களது தற்துணிவை ஆளுமையை, தைரியத்தை, திறமைகளை. தன்னம்பிக்கையை வளர்க்கும் தளமாக, தலைமை தாங்கும் இடமாக இருக்கின்றது. அதே நேரம் மாணவர்களது உடல் உள விருத்திக்காக காலையில் உடற்பயிற்சியும் நடைபெறும், இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். மேலும் மாணவ தலைவர்கள் தெரிவினை நடாத்தி சின்னம் சூட்டி அவர்களது கடமைப் பொறுப்புகளை செய்ய பயிற்சியையும் வழங்கினோம். மாணவர் மன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் மும்மொழிகளிலும் மாணவர்களது நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அத்தோடு இசை வாத்தியக் கருவிகள் சில பாடசாலையில் இருக்கின்றன. இதுவரை காலமும் அவை எந்த பாவனைக்கும் உட்படுத்தாமல் இருந்தன. சில வாத்தியக் கருவிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலைமையும் இருந்தது. மாணவர்களுடைய ஆளுமைகளை மேலும் விருத்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்தேன். இதற்கு மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்க எத்தனிக்கும் வேளையில் தான் கொரோனாவின் ஆட்டம் நாட்டை உலுக்கியது. கடந்த 2020.03.17 தொடக்கம் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதாவது கோவிட் 19கொரோனாவின் தாக்கத்தின் காரணத்தால் பாடசாலை மூடுவதும் திறப்பதுமாய் உள்ளது.

இந்த கால கட்டத்தில் மாணவர்களது உள்ளம் பாதிக்காதிருப்பதற்காக மாணவர்களை கூடுதலான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தினோம். கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட "ரடக் வடின பொத" (MOE) எனும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் 54 மாணவர்கள் சுயமாக சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை, சித்திரம், சுயசரிதை, வரலாற்று நிகழ்வுகள், இலங்கையின் முக்கிய இடங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை மாணவர்கள் புத்தகங்களாக மும்மொழிகளிலும் தயாரித்தார்கள். எனவே அவற்றைத் தயாரிக்க மாணவர்களுக்கு ஊக்கமூட்டி, வழிகாட்டி. ஆசிரியர்களுாடாக திருத்தி, அவற்றை மீண்டும் சரி செய்து கோட்டக்கல்விப் பணிமனையூடாக அவற்றை வலயக்கல்வி பணிமனைக்கு கிடைக்கச் செய்தோம். இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களை மிகுந்த அக்கறையுடன் இந்த செயலில் ஈடுபடச்செய்தது அவர்களது கலை இலக்கியத்தை வளர்த்தது ஒரு பாரிய வெற்றியாக கருதுகிறேன். இருப்பினும் இது பற்றி இந்த மாணவர்களுக்கு ஒரு பதிலும் இல்லாமல் எந்த ஒரு சான்றிதழேனும் மாணவர்களுக்கு வழங்காது இருப்பது எனக்கும் மாணவர்களுக்கும்  ஆசிரியர்களுக்கும்  மிகுந்த கவலையைத் தருகின்றது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்த அதிகாரிகள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மேலும் மீரிகம பிரதேச சபையூடாக கலாச்சார பண்பாட்டு அலுவலக திணைக்களத்தினால் நடாத்தும் இலக்கியப் போட்டி நிகழ்வுகளில் நிறைய மாணவர்களை சகல பிரிவுகளிலும் கலந்து கொள்ளச்செய்தோம். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவற்றின் பெறுபேறுகள் இன்னும் வெளிவரவில்லை. கொரோனாவின் கொடுமை காரணமாக விளையாட்டுப் போட்டிகள் செய்ய முடியவில்லை. எதிர்காலத்தில் நிலமை சீரான பின்னர் அந்த தேவையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து அதனையும் நடாத்துவோம். இன்னும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ரெட் க்ரொஸ் (Red Cross) போன்ற முதலுதவி சம்பந்தமான பயிற்சிகள் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனும் தீர்மானத்தில் இருக்கின்றேன்.(தொடரும்)

Post a Comment

Previous Post Next Post