Ticker

6/recent/ticker-posts

பாரதியின் புதிய ஆத்திசூடி!-4


31  செய்வது துணிந்து செய்
நல்லதைச் செய்கின்ற நேரத்தில்  அப்பப்பா
பொல்லாத சோதனைகள் திண்டாட  வைத்திருக்கும்!
துள்ளித் துடிக்கவைத்த போதும் துணிச்சலுடன்
நல்லதை அஞ்சாமல் செய்.

32  சேர்க்கை அழியேல்
நண்பர்கள் நல்லவராய் இவ்வுலகில் வாய்த்துவிட்டால்
நம்மைப்போல் பேறுபெற்றோர் யாருமில்லை! அத்தகைய
நண்பரை நம்முடன் எப்படியும் தக்கவைத்து
மண்ணுலகில் வாழ்தல் சிறப்பு.

33  சைகையிற் பொருள் உணர்
வாழ்க்கையில் ஏற்றங்கள் மற்றும்  இறக்கங்கள் ,
சூழ்நிலைகள் காட்டும் சைகைகள் கண்மணியே!
சார்ந்து பொருளணர்ந்து வாழும் வழியுணர்ந்தால்
சூழ்நிலையை வெல்லலாம் நாம்.

34  சொல்வது தெளிந்து சொல்
சொல்லும் கருத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு
சொல்வதை முன்னுக்குப் பின்னே முரணின்றி
தெள்ளத் தெளிவாகச் சொன்னால்தான் கேட்பவரின்
உள்ளமும் ஏற்கும் தெளிந்து.

35  சோதிடம் தனை இகழ்
சோதிடத்தை நம்பி முயற்சிகளைக் கைவிட்டால்
சோதனைகள் நம்மை விலங்கிட்டுப் பந்தாடும்!
ஈடற்ற உழைப்பை மூலதன மாக்கிவிடு!
தேடலுக்குக் காண்பாய் விடை.

36  சௌரியந் தவறேல்
விளக்கம் 
வீரத்தைத் தவற விடாதே. வீரத்தை விட்டு விடாதே.

வாழ்வென்னும் போர்க்களத்தில் நல்லொழுக்கப் பண்புடன்
வாழ்வதே வீரமாகும்! அப்படி வாழ்வதற்கு
நேரும் இடையூறைத் தாண்டுவதும் வீரமாகும்!
ஈரமனம் வீரமனந் தான்.

37  ஞமிலி போல் வாழேல்
விளக்கம் 
நாயைப் போல் வாழாதே (அடிமையாக இராதே)

நன்றி மறந்தால் மனிதனல்ல! என்றாலும்
நன்றியுடன் வாழவேண்டும் என்பதை முன்வைத்தே
என்றும் அடிமையாய் வாழ்தல் சரியல்ல!
நன்றியே வாழ்க்கைக்கு வேர்.

38  ஞாயிறு போற்று
உலகை உசுப்பி இயக்கத்தைத் தூண்டி
அலுவல்கள் எல்லாம் அரங்கேற வைத்தே
நலமும் வளமும் உயிரினம் காண
தளமாகும் ஞாயிறைப் போற்று.

39  ஞிமிரென இன்புறு
முதுகெலும் பிங்கே வளைய உழைத்தால்
மிடுக்காய் நிமிர்ந்தேதான் வாழலாம்! ஆனால்
முதுகெலும்பை நாளும் வளைக்காமல் சோம்பல்
முறுக்கில் நிமிர்ந்தேதான் வாழ்தலோ கேடு!
நடுங்காதே தீமைகள் கண்டு.(தொடரும்)

Post a Comment

0 Comments