சுகமோ,துக்கமோ
அனைவரும் ஏதேனுமொன்றை
அனுதினமும் அள்ளித்தரும் காலம்
ஓர் அட்சயப் பாத்திரம்.
என் இரவுப் பயணம் முடிந்ததும்
துணைக்கு வந்த நிலாவை
வீதியிலேயே விட்டுவிட்டேன்.
ஆகாயத்தில் விதவிதமாய் நெருப்போவியங்களை
வரைகிறது தீ...!
நானிங்கு நனைந்ததும்
நீயங்கு நனைந்ததும்
ஒரே மழை என்றாலும்
நம் வானம் மட்டும் வெவ்வேறு.
அவள் வரவேண்டிய
நேரத்திற்கு வந்து விட்டாள்.
வந்தவள் சிறகுகளைத்
தந்திருக்கிறாள்.
நான் தரையிறங்கிய
போதுதான் தெரிந்தது.
என்னுடன் பயணித்தவள்
காதல் தேவதையென்று...!
வளைந்து நெளிந்து
செல்கிறது பாதை.
என்னில் செங்குத்தாய்
வலம்வருகிறது உன் நினைவுகள்...!
முதன்முதலாய்
கடல் பார்த்த பிள்ளைக்கு;
அதன் ஞாபகமாய்
கொஞ்சம் கிளிஞ்சல்களையும்
கொஞ்சம் மணலையும்
நிறைய மகிழ்ச்சியையும்
கொடுத்தனுப்புகிறது கடல்.
மேல்மாடி
வரைச் சென்றதே தவிர
குடும்பத்துடன் கூடியமர்ந்து
குதுகலமாய் நிலாச்சோறு
தின்னதேயில்லை
மாடிப்படிகள்.
மணல் கொள்ளைபோகும்
வாகனங்களில் சொட்டிக்
கொண்டே போகிறது நதியின்
கண்ணீர்.


0 Comments