Ticker

6/recent/ticker-posts

பாரதியின் புதிய ஆத்திசூடி!-5


40  ஞெகிழ்வ தருளின்
விளக்கம் 
(ஒருவரது) முகம், அல்லது வாழ்க்கையை மலர்தல் செய். உதவி செய்

உதவியைக்  கேட்டும் செய்யாதோர் கீழோர்!
உதவியைக் கேட்காமல் செய்வோரே மேலோர்!
உதவியை அன்புடன் மற்றவர் உள்ளம்,
முகம்மலர செய்தல் சிறப்பு.

41.ஞேயங் காத்தல் செய்
படிப்பறிவை,பட்டறிவை,இல்லறத்தைப் போற்றும்
நெறியறிவை,கடமைகள் என்னும் இறையை,
துடிக்கின்ற மெய்யான நட்பின் இழையை
மதியே! இழக்காதே நீ.

42  தன்மை இழவேல்
என்னென்ன சூழ்நிலைகள் எப்படித்தான் தாக்கினாலும்
நன்னெறியைப் பின்பற்றும் உன்னியல்பை மாற்றாதே!
புண்படுத்தும் மாந்தரையும் பண்படுத்திக் காட்டவேண்டும்!
பண்பகமாய் வாழ்தல் மதிப்பு.

43  தாழ்ந்து நடவேல்
அடக்கம் பணிவென்னும் வாழ்வியல் வேறு!
அதற்காக தாழ்ந்தே அடிபணிதல்  தீது!
மடமையை நீக்கு! அறிவொளி ஏற்று!
சுடர்முகம் தூக்கி நட.

44. திருவினை வென்று வாழ்
முயற்சிகள் செய்வோம்! கடமைகள் செய்வோம்!
பலன்கள் கிடைக்கும்! கிடைக்காமல் போகும்!
கவலைப் படாதே! நேரம் கனியும்!
உழைப்பிற்கு வெற்றிமாலை உண்டு.

45  தீயோர்க்கு அஞ்சேல்
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கு
செருக்குகளும் துள்ளும் வெறிகொண்டோர் தீயோர்!
இருந்தாலும் நாமவர்க்கோ அஞ்சாமல் என்றும்
ஒழுக்கமுடன்  வாழ்தல்  சிறப்பு.

46  துன்பம் மறந்திடு
எழுந்து மறையும் அலையினங்கள் போல
உலுக்கி மறைந்திடும் துன்பங்கள் எல்லாம்!
கலங்காமல் துன்பத்தை நாளும் மறந்தே
உழைப்பையே நம்பிமுன் னேறு.

47  தூற்றுதல் ஒழி
விளக்கம் 
ஒருவரையும் பழிக்காதே.

போற்றிப்பார்!உள்ளம் குளிர்வார்! கண்மணியே!
தூற்றிப்பார்!  வாடித் துடிப்பார்! கலங்குவார்!
போற்றுவதைப் போற்று, அரும்பும் தருவாகும்!
தூற்றிப் பழிப்பதோ தீது.

48  தெய்வம் நீ என்று உணர்
மனத்துக்கண் மாசில னாகிவிட்டால் தெய்வம்
மணக்கின்ற கோயிலாக மாறும் மனம்!
மனமிங்கே கோயிலானால் நீதானே தெய்வம்!
குணங்களிலே தெய்வமாய்க் காட்டு.
(தொடரும்)

Post a Comment

0 Comments