49. தையலை உயர்வு செய்
பெண்களை போகப் பொருளாகக் காட்டுகின்றார்
அன்றாடம் ஊடகத்தில்! இந்த எதிர்மறை
எண்ணத்தைக் கண்டிப்போம்!வாழ்வில் மதிப்பளிப்போம்!
இன்னும் சமஉரிமை கேள்விக் குறியானால்
உன்மனம் சாடும் நகைத்து.
50 தொன்மைக்கு அஞ்சேல்
மூடப் பழக்கத்தை வேகமாய்ப் பின்பற்றும்
மோகத்தைவிட்டுவிடு! அச்சத்தைத் தூக்கியெறி!
வேகத்தை விட்டே விவேகத்தால் சிந்தித்தால்
நாடறிய வாழலாம் நன்கு.
51 தோல்வியிற் கலங்கேல்
வெற்றியும் தோல்வியும் வாழ்வின் நிகழ்வுகள்!
வெற்றியில் ஆடாதே! தோல்வியில் வாடாதே!
முற்றும் சமநிலையில் ஏற்கின்ற பக்குவத்தைக்
கற்றால் கலக்கமில்லை காண்..
52 தவத்தினை நிதம் புரி
நல்லதை கெட்டதை நன்றாக சிந்தித்தே
உள்ளத்தால் நல்லதை நாள்தோறும் பின்பற்றி
இவ்வுலகில் வாழ்வதே நல்ல தவமாகும்!
நல்லதையே நாடு தினம்.
53 நன்று கருது
நல்லதை நல்லதென்றே ஏற்கின்ற உள்ளத்தில்
துள்ளாது பொல்லாத எண்ணங்கள்! எப்போதும்
நல்லதை நாடியே நல்லதைச் செய்யவேண்டும்!
நல்வழி தானே அறம்.
54 நாளெல்லாம் வினை செய்
முப்படை மற்றும் விவசாயி ஓய்வெடுத்தால்
எப்படி நாடிருக்கும்? மக்கள் உயிரிருக்கும்?
மக்கள்நாம் நாளும் உழைக்கவேண்டும் அப்படியே!
அப்படி வாழப் பழகு.
55 நினைப்பது முடியும்
நரம்பில்லா வீணையும் நம்பிக்கை யற்ற
செயல்களும் ஒன்றே! எதைச்செய்த போதும்
முயற்சியில் நம்பிக்கை கொண்டிறங்க வேண்டும்!
செயல்கள் நிறைவேறும் செப்பு.
56 நீதி நூல் பயில்
மேதினியில் நீதிநூலைக் கற்றறிந்தால் போதாது!
நீதி நெறிகளைப் பின்பற்றி மற்றவர்க்கும்
நீதிவழி வாழும் வழிகாட்டி யாகவேண்டும்!
நீதிவழி நிம்மதிக்கு வித்து.
57 நுனி அளவு செல்
துரும்பை அசைப்பதற்கும் எச்சரிக்கை வேண்டும்!
துரும்புதானே என்று கவனமின்றி செய்தால்
வருமுன்னே காவாதான் வாழ்க்கையைப் போல
பெருந்தீங்கைச் சந்திப்போம் செப்பு.
58 நூலினை பகுத்துணர்
மேலோட்ட மாகப் படித்துவிட்டு நானுமிங்கே
நூல்களைப் படித்தேன் எனச்சொல்லி வாழாதே!
நூல்களை ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்!
நூல்கள் அறிவளிக்கும் ஊற்று.
(தொடரும்)


0 Comments