Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-11


குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மாப்ளை... மொதல்ல ஒருத்தங்கிட்ட என்னென்ன நல்ல குணம் இருக்குண்ணு பாக்கணும். அதுக்குப் பொறவு, அவங்கிட்ட என்னென்ன குத்தம் கொறை இருக்குங்கிறதை ஆராஞ்சு பாக்கணும். இந்த ரெண்டுல எது கூடுதல் னும் தெரிஞ்சுக்கிடணும். அதைப்பத்தி ஒரு தெளிவுக்கு வந்த பொறவு,  கூடுதலாக இருக்க கொணத்துக்கு ஏத்தபடி பொறுப்பு குடுக்கணும். புரிஞ்சுதா மாப்ள.. 

குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

மாப்ள.. வீட்ல இருக்க நகை நட்டை அடகு வைக்கதுக்கோ, விய்க்கதுக்கோ, இல்லை அதை அழிச்சுட்டு புதுசா நகை செய்யதுக்கோ எடுத்துக்கிட்டு போனேன்னு வச்சுக்க.. அப்பம் அங்க கையில உரை கல்லோடு ஒருத்தரு ஒக்காந்திருப்பாரு. 

ஓங்கிட்ட இருந்து நகையை வேங்கி, அந்த கருப்பு கல்லுல நகையை வச்சு அளுத்தி அளுத்தி தேய்ப்பாரு. தங்கத்தோட மாத்து எம்புட்டுன்னு அந்த கல்லு காட்டும். அதப்பாத்துட்டு தங்கத்தோட மாத்து, அரையே அரைய்க்கா தான் இருக்கு, முக்கலே மாகாணி தான் இருக்குன்னு அவரு எதோ ஒண்ணை ஓங்கிட்ட சொல்லுவாரு. 

அது மாதிரி தான் மாப்ள... ஓங் கொணம் இருக்கே, அது ஒசந்த கொணமா, இல்லை கேவலமான கொணமாங்கிறதை,  சரியா காட்டக் கூடிய, உரை கல்லு ஓம் பளக்க வளக்கமந்தான் மாப்ள. 

குறள் 506 
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.

மருமவன.. நேர்மை இல்லாதவனுவொ... வக்கு இல்லாதவனுவொ... சொந்தக்காரங்க இல்லாத ஒத்தை வீட்டுக் காரனுவொ..  இவனுவொல்லாம், ஊர்க்காரவொளை சட்டை பண்ண மாட்டானுவொ. பழி பாவத்துக்கு அஞ்சாம தப்பு தண்டால்லாம் சரளமாச் செய்வானுவொ. இவனுவொகிட்ட  எந்த வேலையையும் நம்பி கொடுத்திரப்பிடாது மருமவன.

குறள் 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஒருத்தனைப் பத்தி முளுசா தெரியாம அவங்கிட்ட எந்த சோலியையும் குடுக்கக் கூடாது மாப்ளை. 

சோலியை ஒப்படைச்சாச்சா. அதுக்குப் பொறவு அவனை நம்பாம இது சொத்தை .. அது சொள்ளை.. ன்னு சும்ம புளு புளுங்கக் கூடாது. 

இந்த ரெண்டுமே நல்லதில்ல மாப்ளை. 

குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.

மருமவன.. ஒரு சோலியை  செய்யப் போறதுக்கு முன்னால, அதை செஞ்சு முடிச்சா, நல்லதா இருக்குமா, இல்லை கெடுதல் எதுவும் செஞ்சிருமாங்கிறதை நல்ல யோசிச்சு பாக்கணும். 

நல்லது செய்யக்கூடிய சோலியை மட்டுமே செய்யணும்னு நெனைய்க்கவொகிட்ட தான் எந்த சோலியையும் குடுக்கலாம் மருமவன. 

குறள் 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

நமக்கு வருமானம் வரக்கூடிய வழிகளை கூடுதலாக்கணும். வருமானத்தை வச்சு வளங்களை பெருக்கணும். இடையில சில தடங்கல்கள் வரலாம்.  அதை என்னன்னு கண்டு பிடிச்சு அதை ஒழிக்கணும். இப்படில்லாம் செய்யக் கூடியவொ தான் நல்ல தெறமைசாலிங்க. (தொடரும்)

Post a Comment

0 Comments