Ticker

6/recent/ticker-posts

பாரதியின் புதிய ஆத்திசூடி!-7


60 நெற்றி சுருக்கிடேல்
எதற்கெடுத் தாலும் எரிந்து விழுதல்
முகத்தில் சிடுசிடுப்பு கோபதாபம்  என்றே
நிதமும் இருப்பதை விட்டு விடுங்கள்!
முகமலர்ச்சி என்றும் அழகு.

61 நேர்படப் பேசு
சொல்வதை என்றும் சுருக்கமாகப் பேசவேண்டும்!
சொல்லத் தெரியுமென்று ஊர்ப்பயணம் போவோரின்
சொல்லைக் கவனிப்போர் சோர்வுக்கே ஆளாவார்!
சொல்வதை நேர்படப் பேசு.

62 நையப் புடை
எதிர்மறைப் பண்புகளை நையப் புடைத்தால்
நதிப்பெருக்காய் நேர்மறைப் பண்புகள் நாளும்
குடியேறும் ஆழ்மனதில்! எல்லோரும் நம்மை
மதிக்க உயர்ந்திடுவோம்  நாம்.

63 நொந்தது சாகும்
பணச்சோர்வை நாமோ மனத்துணிவால் வெல்வோம்!
சுமைச்சோர்வு தன்னைச் சிறுஓய்வால் வெல்வோம்!
மனச்சோர்வு வந்தால் விரக்திதான் தோன்றும்!
மனச்சோர்வைப் பந்தாடு நீ.

64 நோற்பது கைவிடேல்
மதநெறியைப் போற்றி ஒழுக்கமுடன் வாழும்
அகமுடையோர் பண்புகளும் நோற்பதும் ஒன்றே!
மதநெறியைச்  சொல்லி ஒழுக்கம்  தவிர்த்து
புறநெறியாய் நோற்பதோ வேடமின்றி என்ன?
அகத்தூய்மை ஆன்மிகம் ! சொல்.

65 பணத்தினைப் பெருக்கு
ஈத்துவக்கும்  இன்பம் பெறுவதற்கோ அன்றாடம்
ஈட்டவேண்டும் ஈட்டிப் பெருக்கவேண்டும் நல்வழியில்
நாட்டமுடன் இங்கே பணத்தைத்தான்! ஈகையே
வாட்டத்தைப் போக்கும் மருந்து.

66 பாட்டினில் அன்புசெய்
மொழியுள்  இசையும் இசையுள் மொழியும்
செழித்துக் கலந்தே இதயம் சிலிர்க்க
பொழியப் பொழிய உயிர்கள் தழைக்கும்!

67 பிணத்தினைப் போற்றேல்
மற்றவரைப் பற்றிக் கவலை கிடையாது!
எப்பொழுதும் தன்னலச் சிந்தனையே வாழ்க்கையாக
அட்டையைப் போன்றோர் பிணத்திற்கே ஒப்பாவார்!
முற்றும் புறக்கணித்தல் நன்று.உயிரின அன்புமொழி பாட்டு.

68 பீழைக்கு இடம் கொடேல்
விளக்கம் 
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே

துன்பம் வரும்பொழுது கோழையாக மாறிவிட்டால்
எண்ணம் தடுமாறும்! பண்புகூட தத்தளிக்கும்!
துன்பத்தைச் சந்திக்கும் பக்குவம் பெற்றுவிட்டால்
துன்பம் பறந்தோடும் பார்.

69  புதியன விரும்பு
ஆக்கபூர்வ மாற்றம் அனைவருக்கும் நல்லதே!
ஆக்கத்தை விட்டே அழிவுக்குத் தோள்கொடுத்தால்
நாட்டுக்கும் மக்களுக்கும் கேடாக மாறிவிடும்!
மாற்றத்தால் ஆக்கத்தை நாட்டு.

70  பூமி இழந்திடேல்
நிலத்தை இழந்தே நிலக்கிழா ருக்கே
உலகத்தில் கொத்தடிமை யாகாதே! நாட்டைச்
சுரண்டுகின்ற வர்க்கத்தின் காலடியில்  வைத்தே
நிரந்தரமாய் இங்கே அடிமையாய்  மாறிக்
கலக்கத்தில் வாழாதே நீ.
(தொடரும்)


Post a Comment

0 Comments