சுவனத்துக் குழந்தைகளுடன் நான்-1

சுவனத்துக் குழந்தைகளுடன் நான்-1



(உளவியல் ஆலோசகர் லைலா அக்ஷியாவின் அனுபவத் துளிகள்
)
இன்றுவரை  என் மனதிற்கு‌ பிடித்த சில துறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ,சேவையில் அமர்ந்திருக்கிறேன்.இன்று வரையான எனது அனுபவத்தில்70 % மானது சிறுவர்களோடு கூடியது.

எல்லா வகையான பரிணாம வளர்ச்சி, நுண்ணறிவு வளர்ச்சியுடன் அமைந்த  சாதாரணமான  ஒரு பிள்ளைக்கு ஆசிரியையாக  இருந்ததை விட  "விஷேட தேவையுடைய"  (special Needs) மாணவர்களுக்கு  வழிகாட்டியாக, ஆசிரியையாக அமைந்திருப்பதில் தான் மிகுந்த பெருமிதமும், திருப்தியும் அடைகின்றேன்.

ஒன்று கூற வேண்டும்.
இங்கு  இப்பிள்ளைகள் (special needs) பெற்றோர்களால் மறைக்கப்பட்டோ அல்லது அவர்களது எதிர்காலம் ஏதோ விதிப்படி அமையட்டும் என்று பாராமுகமாக வளர்க்கப் படுகிறார்கள். ஒரு பிள்ளை அசாதாரணமாக பிறந்துவிட்டாலோ சமூகத்தின் முன் அப்பிள்ளையை நிறுத்த வெட்கப் படுகிறார்கள். பயப்படுகிறார்கள். 
("Guilt over")

இது எதற்காக? ஏன்? போன்று கேள்விகளை ஆராய்வது இங்கு நோக்கமல்ல.பொதுவாக இதற்கான ஒரே ஒரு பதில்  சிலவேளை அவர்களது அறியாமையாகவும் பல வேளை  இப்பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர்கள் சரியான வழிகாட்டல்களையோ அறிவுறுத்தல்களையோ  அடைய முயற்சி செய்யாமையுமே எனலாம்.

இந்த விஷேட தேவையுடைய பிள்ளைகள் 'இன்ன குறைபாடு' என்ற பெயரில் வைத்தியர்களால் பெற்றோர்களுக்கு  இனம் காட்டி கொடுக்கப்படும் .ஒவ்வொரு குறைபாட்டுக்கும் பல்வேறுபட்ட அறிகுறிகளும், நடத்தை மாற்றங்களும் பிள்ளைகளில்  இருந்து  வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு  பிள்ளையின்  குறைபாடு இனம் கண்ட பின்னர்தான் பெற்றோர்களுக்கு அது பேரிடியாக அமைந்து விடுகிறது.வளர்ப்பு முறை, பயிற்சி,செலவினங்கள் கல்வி, எதிர்காலம் போன்றன சவாலாக அமைந்து விடுகிறது. ஏன்? பெற்றோர்கள் அவர்களாகவே இவற்றை ஒரு சவாலாக அமைத்து விடுகிறார்கள்.

அவ்வாறு அல்ல .நீங்கள் தொந்தரவாக நினைத்துக் கொண்டிருக்கும்  இக்குழந்தைகள் உண்மையிலேயே அதிசயமானவர்கள்.

இப் பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து அவர்களுக்கான ஒரு ஆசிரியையாக, வழிகாட்டியாக இருக்கும்,  என் அனுபவத்தில் கூறுகின்றேன்.
இவர்கள் பிரமாதமான நுண்ணறிவை ஏதோ ஒரு வகையில் தமக்குள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தன் முன்னால் நின்று பேசுபவரின் கண்களை பார்க்கும் அளவுக்கு கூட  தொடர்பாடலில்(" eye contact ") இல்லை என்றாலும்  அவர்களோடு பழகிய சில நாட்களுக்குள்  எம் கரத்தை பற்றி பிடிக்க தொடங்குகின்றனர்.‌

  அரவணைக்கும் போது கூட‌ தம் முன்னால் இருக்கும் பொருட்களால் விசிறி அடிப்பதாலும், எதிர்பார்க்காத நடத்தை மாற்றங்களாலும் திடீரென மாறும் மனநிலை போன்றவற்றாலும் உடல் காயங்களுக்கு கூட நான் ஆளானதுண்டு. ("Rejecting cuddling")

கண்ணுக்கெதிரான காட்சி முன்னே காட்டப்பட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்களது பார்வை எங்கோ ஒரு மரத்தில் ஆடும் ஒரு இலையை  நோக்கிக் கொண்டிருக்கும் .( "strange attachment").ஆனாலும் திடீரென்று என்  முகத்தை பார்க்கும் போது அவர்களது கண்களில் ஆயிரம் அர்த்தங்களை உணரமுடியும். இதற்காகவே எதிர்பார்த்து காத்திருந்து பல மணித்தியாலங்களை கடத்தி இருக்கின்றேன்.

அதட்டிப் பேசுவதாலும் , வலியுறுத்துவதாலும், கண்டிப்பதனாலும்,பயம் காட்டுவதாலும் அவர்களை மாற்றுவது என்பது அவர்களது இயற்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட செயல்கள்.

இவற்றையெல்லாம் வைத்து அவர்களை எடைபோடுவது இங்கு மிகப்பெரிய தவறு. ஏனெனில் கல்வி சம்பந்தமான விடயங்களில் சாதாரண ஒரு மாணவனை விட ஒரு படி கிரகிக்கும் ஆற்றல் அவர்களுக்கு அதிகமாக இருப்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?

என் பாட்டுக்கு  கணிதத்தையும் மொழியையோ விஞ்ஞானத்தையோ ஒருமுறை கற்பித்துக் கொடுக்கும் பொழுதே அதன் சரியான முறையையும், பல்வேறு வரைவிலக்கணங்களையும் ,விதிகளையும் மிகச்சாதாரணமாக உள் வாங்குகின்றார்கள் என்பதனை உணர்ந்துகொண்டேன்.

என்னால் வழங்கப்பட்ட பல்வேறுபட்ட பயிற்சிகளின் பின்னர் தமது பாடம் சம்பந்தமான வினாக்கள் வழங்கப்பட்ட தாளில் அல்லது  சாதனத்தில் மிகச்சரியான பதில் துல்லியமாக தெரிவு செய்கிறார்கள், எழுதுகிறார்கள். இவர்கள் வயதோடு ஒத்த சாதாரண ஒரு மாணவனை இவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்த போது எத்தனையோ முறை நானே  வியந்து இருக்கின்றேன்.

இதற்கு மேலாக ஞாபக சக்தி என்பது மிக அதீதமாகவே அவர்களிடம்  செயற்படுகிறது.

ஒரு முறை கேட்ட பெயர் எந்த ஒரு மீட்டலும் இல்லாமல் ஓரிரு நாட்களுக்குள் அவர்களால் இனம் காணப்படுகிறது. முணு முணுக்கப் படுகிறது.

உறுதியாக இருங்கள்:

"We need to understand the  powerful of a positive word"

இவர்களது உலகம் வேறு என இவ்வாறான பிள்ளைகளை தள்ளி வைத்து   விடாதீர்கள்.

அவர்களுக்குள்ளும் அன்பு  வாழ்கிறது. ஏக்கங்கள்  இருக்கின்றன.

அவர்களால் அதனை வார்த்தைகளாலோ
பாவனைகளாலோ  வெளிக்காட்டத் தான் முடிவதில்லை. (Non verbal communicating)

  ஒரு சில நேரங்களில் என் கைகளை பற்றி என்மேல் தலைசாய்த்து  என் பெயரை  எவ்விதக் காரணமும் இல்லாமல் முணுமுணுக்கும் போது அளவிலாத ஒரு பாசப் பிணைப்பு உணருகின்றேன். அதை உணர்த்த இங்கு வசனங்கள் இல்லை என்றே கூறுவேன்.

நுணுக்கமான முறையில் அவர்களுக்கே உரிய சில பல இயலுமைகளையும் திறமைகளையும் அறிவையும் பாவமே அறியாத  இப் படைப்புகளுக்கு சாதகமாக கொடுத்த இறைவனுக்கே எல்லா புகழும் .

"Every child has  a set of God given gifts and strength"

எந்தப் பாவமும் அறியா இக்குழந்தைகள் இறைவன் இவ்வுலகில்  எமக்காகப் படைத்த சுவனத்துக் குழந்தைகள் என்றே நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.

உண்மையும் அது தான். இவ்வாறான குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர்களும், குடும்பத்தவர்களும் அல்லது பாதுகாவலர்களும் இக் குழந்தைகளை மிகச் சாதாரணமாக எண்ணி விடவேண்டாம். அவர்களோடு அன்பாகப் பழகுங்கள். பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளுங்கள். அதற்கான உயர் கூலி நிச்சயம் உங்களுக்குண்டு என்பதை மனதிற் கொண்டு பழகுங்கள். இதுவே இவ்வாறான குழந்தைகளுக்காக நான் வேண்டிக் கொள்ளும் ஒரே விடயம்.

எனது அனுபவத்தின் ஒரு சிறு துளியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.பிரிந்திருந்தாலும் ,தொலைவில் இருந்தாலும்,தொலைபேசியில் கூட முகம் பார்க்கவோ பேசவோ  முடியாமல் தவிக்கும்  ஒரு பாசப் பிணைப்பின் ஊமை போராட்டம் இது.
(தொடரும்)

Laila Akshiya.
(skills Insight)
Dip in psychology & counselling.

Post a Comment

Previous Post Next Post