Ticker

6/recent/ticker-posts

மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்


மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருந்த தனிப்பெரும் முஸ்லிம் ஊரான கிண்ணியாவில் இன்று அரசியல் அதிகாரம் மற்றும் நிர்வாக கட்டமைப்பின் அசமந்த போக்கு காரணமாக நிகழ்ந்த படகு பாதை விபத்தினால் விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றோம். 
பொறுப்பு வாய்ந்த மனிதர்களின் பொடுப்போக்கின் காரணமாக நிகழ்ந்த இப்பேரவலத்தினை 'அல்லாஹ்வின் நாட்டம்' என்று சொல்லி ஓரிரு வார்த்தைகளில் கடந்து செல்ல முடியவில்லை.

நல்லாட்சியின் போது அப்துல்லாஹ் மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக் ஆகிய மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிண்ணியாவினை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் அரசியல் அதிகாரத்தில் வீற்றிருந்தனர். 

தற்போது இம்ரான் மஹ்ரூப்பும், எம்.எஸ்.தௌபீக்கும் கிண்ணியாவின் மைந்தர்களாக நாடாளுமன்ற ஆசனத்தினை அலங்கரிக்கின்றனர். 
எத்தனை அரசியல் அதிகாரங்கள் இருந்தும் கிண்ணியாவில் நடந்திருப்பது என்ன?

மக்கள் பாவனைக்கு உதவாத குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பதில் ஏன் உரிய தரப்பினர் மந்த கதியில் செயற்பட்டனர்? புதிய பாலத்தின் நிர்மாண ஒப்பந்ததாரர் யார்? அவர் குறித்த காலப்பகுதிக்குள் இவ்வேலைத்திட்டத்தினை நிறைவு செய்யாமல் இருந்தமைக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்தெல்லாம் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

மேலும், தரமற்ற,சேதாரமான விபத்திற்கு காரணமான இப்பாதை படகு குறித்தும் அப்பகுதி மக்களுக்கு நிறையவே புகார் இருந்திருக்கிறது. நீரேந்து போக்குவரத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதமற்ற ஒரு சேவையினையே இப்படகின் உரிமையாளர் நடாத்தி வந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. குறுகிய தூர பயணமாயினும் பாதுகாப்பு அங்கிகள் அணியப்பட வேண்டும் எனும் நியதிகள் இங்கே பின்பற்றப்படவில்லை. அது பற்றி பிரதேசத்தின் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கண்காணித்ததாய் பதிவுகள் இல்லை. 

யார் எத்தனை விதமான நியாயங்களை சொன்னாலும் வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டில் மனித தவறுகளால் நிகழ்ந்த மிகவும் துன்பகரமான விபத்து. கனவுகளுடன் கல்வி கூடத்திற்கு சென்ற இளம் மாணவர்கள் பலியாகி இருக்கின்றனர். பெண்கள்,வயோதிபர்கள் கூட இப்படகில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களின் நிலைவரம் பற்றிய விபரங்கள் என்னவென்று தெரியவில்லை.

"கடலுக்கு அருகில் இருப்பவர்கள் நீச்சல் பயிற்சி எடுத்திருக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்" என்றெல்லாம் கூட சில பதிவுகளை ஆங்காங்கே அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எது எப்படியானாலும், அதிகார மையங்கள் வெட்கித் தலை குனிய கூடிய ஒரு துன்பியல் சம்பவமாகவே இதனை பார்க்க முடிகிறது.

Post a Comment

0 Comments