பெற்றோர்க்கு என் உள்ளம்
பெரும் சுவனம்
பிரியத்தோடு வசிக்கிறார்கள்
பிள்ளைகளுக்கு அது
தாய்வீடு
பிரியாமல் இருக்கிறார்கள்
அன்பானவர்களுக்கு
ஆயுள் சிறை
இறக்கும்வரை
எங்கேயும் போகார்கள்
ஆசான்களுக்கு
அரியாசனம்
ஆயுள் வரை
அமர்ந்திருக்கிறார்கள்
பாசமுள்ளோர்க்கு
படுக்கைஅறை
பகலிரவாய்
படுத்துறங்குகிறார்கள்
நண்பர்களுக்கு நந்தவனம்
நாளாந்தம்
நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்
வழிச் சிநேகர்களுக்கு
வரவேற்பறை
உரையாடி விட்டுப் போகிறார்கள்
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாப்பாட்டறை
உண்ணும் வரை
உட்கார்ந்திருக்கிறார்கள்
வில்லன்களுக்கு
விளையாட்டு மைதானம்
விளையாடிவிட்டு
வெளியேறுகிறார்கள்
மனிதமற்றோர்க்கு
மட்பாண்டக் களஞ்சியம்
தூளாக்கிவிட்டு
தொலைந்து போகிறார்கள்
கயவர்களுக்கு
கண்ணாடி மாளிகை
கல்லெறிந்து விட்டு
காணாமல் போகிறார்கள்
கிறுக்கன்களுக்கு
கிரிக்கட் பந்து
ஓங்கி அடித்துவிட்டு
ஓடி மறைகிறார்கள்
உதவாக் கரைகளுக்கு
உதைப் பந்து
பாய்ந்து உதைத்து விட்டு
பறந்து விடுகிறார்கள்
விநயமானவர்களுக்கு
விழா மண்டபம்
வீற்றிருந்து விட்டு
விடை பெறுகிறார்கள்
போக்கிரிகளுக்கு புதைகுழி
முகம் காட்ட முடியாதவாறு
மூடப் படுகிறார்கள்
புரிதல் உள்ளோர்க்கு
பூங்காவனம்
பொழுதுகளை நன்றாகப்
போக்கிக் கொண்டிருக்கிறார்கள்
ஆம்
என் இதயத்தில் ,
சிலர் சதா
சிலர் அவ்வப்போது
சிலர் தற்காலிகமாக
சிலர் நிரந்தரமாக
சிலர் நிர்ப்பந்தமாக
சிலர் விருப்போடு
சிலர் விருப்பின்றி
சிலர் கடமைக்காக
சிலர் காதலுக்காக
சிலர் உரிமைக்காக
சிலர் உறவுக்காக
சிலர் உடைமைக்காக
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலருக்கு
சொக்கும் சொர்க்கம்
சிரஞ்சீவியாய் வாழ்கிறார்கள்
பலருக்கு பாழான நரகம்
பதறியடித்து வெளியேறுகிறார்கள்
சிலர்
ஆயுட்கால அனுமதியோடு
ஆட்சி நடாத்துகிறார்கள்
அநேகர்
அனுமதி இல்லாமல்
ஆட்டிப் படைக்கிறார்கள்


0 Comments