Ticker

6/recent/ticker-posts

மறுபடி துளிர்க்கும் கனவுகளோடு...


ஒரு நல்ல வீடு பற்றி 
அவர்கள் 
கண்ணிமைகளில் தேக்கியிருந்த  
இறுதிக்கனவையும் 
பறித்துக் கொண்ட 
இறுமாப்பின் தந்தையாய்,  
இதோ நான்  
செய்வதறியாது 
உட்கார்ந்து இருக்கிறேன். 
ஒழுகும் கூரைகள் பற்றியோ,  
சந்தையில் விலைபோகா 
நம் பெண்மக்கள்  பற்றியோ 
எப்போதும் 
புலம்பிக் கொண்டிருந்த  
இல்லாளும் 
இங்கில்லை இப்போது.

கனவுகள் பெருகி வழியும் கண்களோடு 
எனை நம்பிக் காத்திருந்து 
ஏமாந்த
என் புதல்வியரின் பெருமூச்சுகளால் 
நிரம்பி இருக்கிறது 
இன்று 
எவருமில்லாத இந்த வீடு.
கொடும்பற்கள் வெளித்தெரிய 
அகம்பாவத்தின் 
கோர ஒலியெழுப்பி 
எப்போதும் எனக்குள்ளிருந்து 
சிரித்துக்கொண்டிருந்த புலி, 
வெளியேறிப் போயிற்று.

நான் போக வேண்டும் 
அவர்கள் 
அமைதியில் உறங்கும் 
கல்லறைகளின் திசைநோக்கி, 
அன்பின் துளிகள் ஊற்றி 
அவர்தம் அச்சங்கள் 
களைந்தெடுத்து 
மறுபடி இட்டு வரவேண்டி..

இறந்த இந்த வீட்டின் 
உயிர்ப்பு 
புரிந்துகொள்ளலின் 
வாக்குறுதிகளால் 
சிலவேளை 
சாஸ்வதமாகலாம்.... !!!


Post a Comment

0 Comments