பாரதியின் புதிய ஆத்திசூடி-11

பாரதியின் புதிய ஆத்திசூடி-11


100  (உ)லுத்தரை இகழ்
மலைபோல செல்வம் குவிந்திருந்த போதும்
அலைத்துளி  கூட வறியவர்க்( கு)  ஈயா
சிலைமனங் கொண்ட உலுத்தரை நாளும்
தலைநாணும் வண்ணம் இகழ்.

101  (உ)லோகநூல் கற்றுணர்
பட்டங்கள் கற்றும் உலக நடப்புகளில்
பட்டறி வில்லாத மாந்தரின் வாழ்க்கைப்
பட்டமோ நூலறுந்த பட்டமாகும்! இவ்வுலகைக்
கற்றுணர்ந்து வாழ்தல் சிறப்பு.

102  லௌகிகம் ஆற்று
உலகின் நெறிமுறையைப் பின்பற்றி நாளும்
உளமகிழ்ந்தே இல்லறத்தைக் காக்கும் பணியில்
சுரக்கும் கடமைப் பொறுப்புகளை ஏற்றே
உரமாகி வாழ்தல் வரம்

103  வருவதை மகிழ்ந்துண்
அமையாத வாழ்வை நினைத்தேங்க வேண்டாம்!
அமைந்ததில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்! என்றும்
மனையில் மகிழ்ச்சி பெருகும்! நாளும்
மனத்திருப்தி கூடும் உணர்.

104  வான நூல் பயிற்சி கொள்
மண்ணகத்தின் அற்புதத்தைக் கண்டே வியக்கின்றோம்!
விண்ணகத்தின் பால்வீதி, கோள்களின் கூட்டமைப்பைக்
கண்ணே! அறிந்துகொண்டால்  ஞானம் விரிவடையும்!
என்றுமே ஞானதாகம் கொள்.

105  விதையினைத் தெரிந்து இடு
1.எந்தப் பருவத்தில் எந்தவிதை போடவேண்டும்
என்றே அறிந்துகொண்டு மண்ணில் பயிரிட்டால்
அந்தப் பயிர்செழிக்கும்! நாட்டில் வளங்கொழிக்கும்!
கண்டபடி நட்டால் இழப்பு.
                    
 2,நேரம் பருவம் அறிந்தே செயல்பட்டால்
காலம் கனிந்துவந்தே திட்டம் நிறைவேறும்!
நேரம் தவறினால் குழப்பம் முடிவாகும்!
வேரூன்ற நற்பருவம் பார்

106  வீரியம் பெருக்கு
தாழ்வு மனப்பான்மை கோழைத் தனமாகும்!
தாழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்கும் ஆற்றலே
வீர மனப்பான்மை ஆகும்! அத்தகைய
வீரத்தை நாளும் பெருக்கு.

107  வெடிப்புறப் பேசு
நேருக்கு நேராய் ஒளிவு மறைவின்றி
பாரபட்ச மில்லாமல் சொல்லவந்த நற்கருத்தை
யாருக்கும் அஞ்சாமல் பேசுகின்ற ஆற்றலே
பேரும் புகழும் தரும்.

108  வேதம் புதுமை செய்
மாற்ற முடியாத தல்லவே வேதங்கள்!
மாற்றத்தில் ஆக்கபூர்வ மாற்றங்கள் ஏற்படுத்தி
ஏட்டளவில் இன்றி  நடைமுறைக் கேற்றவண்ணம்
மாற்றியே பின்பற்று வோம்

109  வையத் தலைமை கொள்
தன்னலமற்ற கொள்கை, தியாக மனப்பான்மை,
உண்மை, ஒழுக்கம், மனிதநேயச் சிந்தனை,
அஞ்சாமை, மாசற்ற உள்ளம் படைத்தவரை
என்றும் தலைவரெனப் போற்று.
பாரதியின் புதிய ஆத்திச்சூடி நிறைவு

110  வௌவுதல் நீக்கு
ஆசை வெறியானால் வக்கிரத்தைத் தூண்டிவிடும்!
நீசனாக மாற்றித்தான் மாற்றார் பொருள்களைக்
கூசாமல் இங்கே அபகரிக்கத் திட்டமிடும்!
பாதக எண்ணத்தை நீக்கு.(முற்றும்)

வாழ்த்து!
அமரகவி பாரதி புதிய ஆத்திச்சூடியில் 
அச்சம் தவிர்,ஆண்மை தவறேல் என்ற அர்த்தம் நிறைந்த ஆண்மையோடு எழுதியதை சிறந்த விளக்க கவிதையில் புலப்படுவது அற்புதம்.ஆனந்தம்.பாரதி பாடலில் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகின் வாக்கினில் ஒளி உண்டாகும் என்ற முது மொழிக்கு வழியாகத் திகழும் வள்ளுவர் வழியில் வழுவாது நடைபோடும் இனியவர் கவிஞர் மதுரை பாபாராஜ் அவர்களுக்கு அக மகிழ்வுடன் எங்களது கனிந்த வாழ்த்துகள்.வாழ்க பல்லாண்டு. இறை அருள் பொழிக.
ஜான் மோசஸ்




Post a Comment

Previous Post Next Post