மெதமஹநுவர 31
கண்டி - மஹியங்கனைப் பிரதான பாதையில் 34வது கிலோமீற்றரில் அமைந்துள்ள மெதமஹநுவர முன்னர் “ஊருகல’ என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த ஒரு பிரதேசமாகும். கண்டி இராச்சிய காலத்தில் சிற்றரசர்களது தலைநகராக மெதமஹநுவர விளங்கியது பற்றியும் குறிப்பிடப்படுவதுண்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள ஊருகல வடக்கில் நக்ள்ஸ் மலைத் தொடர்களையும் தென் கிழக்கில் சுமார் நாலாயிரம் அடி உயரமான மலைத் தொடர்களையும் எல்லைகளாகக் கொண்ட தும்பறைப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் அமைந்தருக்கின்றது.
பூர்வீக முதல் இப்பள்ளத்தாக்குச் சாய்வுகளில் அமைந்திருந்த படிமுறை வயல்களை அண்டியதாக மக்கள் குடியேற்றங்கள் ஆரம்பமாகியதாகக் கொள்ளப்படுகின்றது. அக்காலை பெருமளவு சேனைப் பயிர்ச்செய்கையும் நெல் விவசாயமும், அங்கு அதிகமாக செய்கை பண்ணப்பட்டிருக்க வேண்டும் எனக்கருதலாம். ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து பிரதேசம் முழுவதும் தேயிலை, ஏலக்காய், கிராம்பு போன்ற பல ஏற்றுமதிப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டதால் பெரும் எண்ணிக்கையிலான தோட்டத் தொழிலாளர்கள் இப்பகுதியைச் சுற்றிக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பெருந்தோட்டங்களது அபிவிருத்தி காரணமாக நூற்றைம்பது வருடங்களுக்கும் முதலிலிருந்தே ஒரு சந்தைப் பட்டினமாக அறிமுகமாகியிருந்த இப்பட்டினம் தற்போதும் பிரதேசத்தின் பிரதான வர்த்தக மையமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது
மத்திய மலைநாட்டிலிருந்து கிழக்கு மாகாணத்தை அடையும் பிரதான பாதையின் மையத்தில் பட்டினம் அமைந்திருப்பதால், அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கலாம். இன்று மெதமஹநுவர என அழைக்கப்படும் பட்டினம் பழைமையான அரச ஆவணங்களில் ஊருகல என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தபோதும், பிரதேசத்தின் பிரதான மதகுருவாக விளங்கிய மெதமஹநுவர விகாரையின் பிரதம குரு சங். பிளஸ்ஸ அத்தசச்சி தேரரின் வேண்டுகோளுக்கமைய அதன் பெயர் மெதமஹநுவர எனப் பிரகடனப்படுத்தப்படலாயிற்று.
நகரில் அமைந்தருக்கும் தமிழ்ப் பாடசாலை முன்னர் ஊருகல தமிழ் வித்தியாலயம் எனவும நகரில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஊருகல மஸ்ஜித் எனவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை இன்றும் அவதானிக்கமுடிகின்றது. கண்டியின் கடைசி அரசனாக விளங்கிய நாயக்கர் வமிசத்தைச் சேர்ந்த ஸ்ரீவிக்ரம இராசசிங்கன் (1798-1815) ஆங்கிலேயரிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பியோடி, ஒளிந்திருந்த மறைவிடம் பட்டினத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.
மறைந்திருந்த அரசன் 1815ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி உள்ளுர் நிருவாக அதிகாரியாகிய போமுர அப்புஹாமி உடுப்பிட்டி ஆரச்சி வீட்டிலிருந்து அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டதாக பதிவுகளிலிருந்து அறிய முடிகின்றது.ழூ விஜயனிலிருந்து ஆரம்பமாகிய இலங்கை ஆட்சியாளர்களது வரலாறு ஸ்ரீவிக்ரம இராசசிங்கன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை வரலாறாகும். அரசன் மறைந்திருந்த இடத்தை அடையாளப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியை போமுர-கள்ளஹாவத்தையில் இன்றும் காணமுடிகின்றது.
1850ம் ஆண்டுகளைத் தொடர்ந்துள்ள காலங்களில் மெதமஹநுவர பட்டினத்தில் தென்-இந்திய முஸ்லிம் வியாபாரிகளால் வியாபார முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அக்காலை அதிகளவிலான வர்த்தக நிறுவனங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விளங்கியபோதிலும், இன்று சுமார் பத்து வியாபார நிறுவனங்களே முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விளங்குகின்றன. வர்த்தக நிறுவனங்கள் தவிர, குடியிருப்பாளர்களாக ஐந்து முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே வாழ்ந்து வருவதோடு, பலர் சமூக-சமய நலன்கருதி படிப்படியாகக் அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது..
மஸ்ஜித்:
பட்டினத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜித் நூற்றைம்பது வருடங்களையும் கடந்து செல்லும் வரலாற்றைக் கொண்டதாகப் பேசப்படுவதுண்டு. இந்திய முஸ்லிம் வர்த்தகச் செல்வர்களின் அழியாச் சாதனைகளில் ஒன்றாகக் காட்சியளிக்கும் மெதமஹநுவர மஸ்ஜிதின் வளாகத்தில் மகான் அஷ்ஷெய்க் பத்ருத்தீன் வலிய்யுல்லாஹ் (ரஹ்) என்ற பெரியாரின் ஸியாரமும் இன்றுவரையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 1965ம் ஆண்டு ஊருகல தமிழ் வித்தியாலயத்தில் கல்வி நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிடப்பட்ட சஞ்சிகையில் பெரியார் பதுருத்தீன் வலிய்யுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கி. பி. 1860ம் ஆண்டுகளைத் தொடர்ந்த தசாப்தங்களில் மெதமகநுவர பிரதேசத்தில் சன்மார்க்க சேவைகளில் ஈடுபட்டிருந்தகாலை இறையடி சேர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தற்போதும் கும்புக்கந்துறை - அம்பலாந்துவையில் வாழ்ந்து வருகின்றனர்.
அம்பலாந்துவையில் வதியும் கனவான் அல்ஹாஜ் அபூபக்கர் ஸித்தீக் வழங்கிய தகவலிலிருந்து தென்னிந்தியா காயல்பட்டணத்தைச் சேர்ந்த தனது பாட்டனார் பெரியார் அபூபக்கர் ஸித்தீக் அவர்களது மாமனாரே மகான் அஷ்ஷெய்க் பத்ருத்தீன் வலிய்யுல்லாஹ் (ரஹ்) அவர்களாவர் என எனக் குறிப்பிடப்படுவதோடு, மகான் அவர்கள் அக்காலை பிரதேசத்தின் புகழ்பூத்த ~தோதலகந்த| (னுழவயடயமயனெய) ஏலக்காய்த் தோட்ட உரிமையாளராக விளங்கியவராவா.; ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் முதலில் மெதமஹநுவர பிரதேசத்தில் ஏலக்காயப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தகாலை அன்னாரின் வழிகாட்டலிலேயே மெதமஹநுவர மஸ்ஜிதும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. அன்னாரை கௌரவி;க்குமுகமாக அவர்களது அடக்கஸ்தலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் ஸியாரம் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மஸ்ஜிதின் நிலங்குறித்த உரிமைப்பிரச்சினைகள் பற்றிய நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக மஸ்ஜிதின் செயலாளர் ஜனாப் மீரா முஹிதீன் ஸெய்யித் முஹம்மத் வழங்கிய தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது. மஸ்ஜித் மையவாடியில் 1926ம் ஆண்டு அடக்கஞ்செய்ய்ப்பட்ட பிஸ்மில்லாஹ் ஸாஹிப் என்பவரின் குமாரர் ஹ{ஸைன் ஸாஹிப் குறித்த ஆவணங்கள் மையவாடியின் பூர்வீகத்தை 1900களுக்கும் முன்பிருந்து ஆரம்பிக்கமுடிவது சிறப்பானதாகும்.
1940ம் ஆண்டு ஊருகல நிலப்பரப்பு அளவை செய்யப்பட்டபோது அதன் வரைபடத்தில் ~பள்ளியவத்த~ நிலமும் மஸ்ஜிதும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மையவாடி நிலம் தொடர்பாக உருவாகியியருக்கும் சட்டவிவகார சர்ச்சையில் நிருவாக சபையினர் காத்திரமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். நிருவாக அமைப்பின் தலைவராக வர்த்தகச் செல்வர் ஜெய்னுல் ஆப்தீன் முஹம்மத் ரிஸ்வி ஹாஜியாரும் செயலாளராக ஊருகல தமிழ் வித்தியாலய அதிபர் மீரா முஹிதீன் ஸெய்யித் முஹம்மத் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். நகரில் அமைந்திருக்கும் தமிழ் வித்தியாலயம் 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.(தொடரும்)
0 Comments