Ticker

6/recent/ticker-posts

விமானத்தை தள்ளிச் சென்ற பயணிகள் -வீடியோ

விமான ஓடுதளத்தில் பழுதாகி நின்ற விமானத்தை பயணிகள் இறங்கிவந்து தள்ளிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக சாலைகளில் வாகனங்கள் எதும் பழுதாகிவிட்டால் அதில் பயணிக்கும் பயணிகள் இறங்கி தள்ளிவிடுவார்கள்.

இதில் வெறும் கார், இருசக்கர வாகனம், பேருந்து இவற்றினை தான் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு ஒரு விமானத்தையே பயணிகள் தள்ளிவிடும் காட்சி வைரலாகி வருகின்றது.

நேபாள நாட்டின் கோட்லி எனும் பகுதியில் அமைந்துள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில் திடீரென அந்த விமானத்தின் பின்புற டயர் ஒன்று வெடித்திருக்கிறது.

டயர் வெடித்ததால் விமானமானது அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் ரன்வேயில் அப்படியே நின்றுவிட்டது.

இதற்கிடையே இந்த விமானம் ரன்வேயில் நின்றதால் அந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அந்த விமான நிலையத்தில் பழுதான விமானத்தை நகர்த்திச் செல்ல போதுமான உபகரணங்கள் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சேர்ந்து அந்த விமானத்தை அலேக்காக தள்ளத் தொடங்கினர்


அதே விமானத்தில் இருந்த பயணிகளும் இறங்கிவந்து விமானத்தை ரன்வேயில் இருந்து தள்ள உதவினர். சுமார் 20 நபர்கள் சேர்ந்து அந்த விமானத்தை கஷ்டப்பட்டு தள்ளி பத்திரமாக ரன்வேயில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அந்த விமானத்துக்கு வேறு டயர் மாற்றப்பட்டது, விமானத்தை பயணிகள் இறங்கி வந்து தள்ளிய வீடியோவை ஒருவர் ட்விட்டரில் பதிவிட அது தற்போது வைரலாக மாறியிருக்கிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதாகி நின்ற ரயில் பெட்டியை பொதுமக்கள், ஊழியர்கள் சேர்ந்து தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments