Ticker

6/recent/ticker-posts

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-74 (செந்தமிழ் இலக்கியம்)


இலட்சியத்தை அடைய
எண்ணம் போல் வாழ்வு என்றார் ஔவை பிராட்டியார், "நீ எதை ஆழமாக நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுகின்றாய்" என்றார் சுவாமி விவேகானந்தர். ஆம் உண்மை தான் ! 

எண்ணம்தான் 'சொல்' ஆகிறது ; சொல்தான் செயல்' ஆகிறது ; செயல்தான் பழக்கம்' ஆகிறது ; பழக்கம்தான் 'வழக்கம்' ஆகிறது வழக்கம் தான் வாழ்க்கை ஆகிறது. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்குறளாசான்,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள் 666) என்று கூறுவதன் மூலம் வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துகிறார்.

மனஉறுதியும், விடாமுயற்சியும் சீரான ஒரே சிந்தனையும், அதற்கான அயராத உழைப்பும் உடையவர்களிடம் இறைவனே கட்டுப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிடுகிறார். இந்த உண்மையை உணர வேண்டும். 
இதைச்சொல்லும்போது எமக்கு ஒருகதை
கூறத் தோன்றுகிறது.

ஒரு முனிவர் காட்டில் நீண்ட காலமாக தவமியற்றிக் கொண்டிருந்தார். இதை ஒரு வேடன் வேட்டையாடப் போகும் போதெல்லாம் பார்த்தான். இவர் எதற்காக இப்படித் தவம் செய்கிறார்? அவனுக்குப் புரியவில்லை . ஒரு நாள் அவரிடமே கேட்டான். வேடனிடம் அவர் "அப்பனே! நான் ஸ்ரீ நரசிம்மரைக் காண்பதற்காகத் தவமியற்றுகிறேன்” என்றார்.

உடனே, வேடன் அவரிடம், 'அது யார் நரசிம்மர்?" என்றான் இவனுக்கு விளக்கமளித்தால் விளங்காது. அது வீண் வேலை என நினைத்த முனிவர் வேடனிடம், “ அது ஒரு மிருகம்பா, சிங்கத் தலை மனித உடல். அதைக் காணத்தான்" என்று கூறினார்.

அதற்கு வேடன், “அப்படி ஒரு மிருகத்தை நான் இந்தக் காட்டில் இதுவரை கண்டதே இல்லையே. இங்குள்ள அனைத்து மிருகங்களையும் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் கூறுவது போன்ற நரசிம்ம மிருகம் இல்லவே இல்லை" என்று உறுதியாக சொன்னான் வேடன்.

*இருக்கப்பா, நீ பார்த்திருக்கமாட்டாய், அது மறைந்தே இருக்கும். அவ்வளவு சுலபத்தில் அதைப் பிடிக்க முடியாது. அது அகப்படாது” என்றார் முனிவர்.

"சரி, அப்படி ஒரு மிருகம் இருந்தால் இன்னும் முப்பது நாளில் நான் அதைப் பிடித்துவிடுவேன்" எனச் சூளுரைத்துச் சென்றான் வேடன். முனிவர் சிரித்துக்கொண்டார்.

முப்பது ஆண்டு காலமாக இந்தக் காட்டில் அப்படி ஒரு மிருகத்தை நான் பார்த்ததே இல்லையே! அப்படியே இருந்திருந்தால் என் அப்பன். பாட்டான் எல்லாம் பார்த்திருக்க மாட்டார்களா? இந்த முனிவர் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லையே ! சரி... எதற்கும் இம்மியளவு இடம்கூடப் பிசகாமல் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டியதுதான். 

ஒரு புது மிருகத்தை முதலில் கண்டவன் என்ற பெயராவது இருக்கட்டும் என நினைத்து, 

ஆழ் மனத்திற்குக் கட்டளையிட்டு, ஊன் உறக்கமின்றி அவன் தேடத்தொடங்கினான்.

சதா, நரசிம்மம், நரசிம்மம் என வாய் முணுமுணுக்க மனக் கண்ணில் அதன் உருவம் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு சிறு அசைவையும் உடனே பரிசோதித்தான். எப்படியும் முப்பது நாட்களில் அதைப் பிடித்துவிட வேண்டும்

என்ற இலட்சிய வைராக்கியத்துடன் தேடத் தொடங்கினான். 

தேடினான் தேடினான் அப்படித் தேடினான். தேடலின் உக்கிரம் அதிகமாகிய அந்த ஜூவாலை இறைவனை வாட்டியது.

என்னைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாத ஒரு வேடனின் தீவிரத்தேடுதலில் தான் எவ்வளவு உக்கிரம். எண்ணத்தின் ஜுவாலை என்னையே இழுக்கிறதே ! என வியந்த இறைவன் வேடன் விரும்பியவாறே அவனுக்கு மட்டும் காட்சியளித்தார். 

வேடனுக்கே அம்மிருகம் புதிது. ஆகா, இத்தனை நாள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தாய்? என்று கூறி மிகவும் மிகழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, ஒருகயிற்றால் அதைக் கட்டினான்.

மன ஒருமைக்காக இறைவனும் கட்டுப்பட, அதை முனிவரிடம் அழைத்துச் சென்றான் வேடன். சுவாமி, நீங்கள் சொன்ன நரசிம்ம மிருகத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்துள்ளேன் பாருங்கள் என்றான். முனிவரின் கண்களுக்கு இறைவன் புலனாகவில்லை. வேடன் ஏதோ கோமாளித்தனம் செய்கின்றான் என நினைத்தார். 

இருந்தாலும் அவனிடம், எங்கே நீ அதைப்பற்றி விவரி என்று கூற, வேடனும் அதன் கீரிடத்திலிருந்து வஸ்திராபரணம் முதற்கொண்டு பாதம் வரை அப்படியே விவரித்தான்.

முனிவருக்கு கதி கலங்கிவிட்டது.

 இறைவா ! ஒரு மூட வேட்டுவனுக்குக் கட்டுப்பட்டு வந்த நீர், என் கண்களுக்குக் காட்சி அளிக்காமல் போனது முறையா? என்று கதறினார்.

வேடனின் எண்ணத்தின் உறுதி, அவனது இலட்சிய ஜூவாலை, தேடலின் தவிப்பு என்னையே எரித்துவிடும் அளவிற்கு இருந்தது. அதனால் தான் நான் கட்டுப்பட்டேன். உன்னுடைய நிலை அந்த அளவிற்கு உயரவில்லை . இன்னும் நூறாண்டு தவமியற்று என்றது அசரீரி.

இது கதையோ, நிஜமோ, கற்பனையோ, அது பிரச்சினை அல்ல. நாம் கற்பனையாளர்களாக நம் முகத்திற்கு இந்த உலகில் ஒரு முகவரி ஏற்படுத்த வேண்டும். நம் இலட்சியத்தை அடையும் வரை நாம் தேடுதலில் அந்த வேடனைப் போல் இருக்க வேண்டும். அப்போது இறைவனே நம்முடன் இருந்து நம் மனம் விரும்பிய நிலை எட்ட வழிகாட்டுவார்.(தொடரும்)


Post a Comment

0 Comments