அசதி மேலீட்டால் இரவு அயர்ந்து தூங்கிவிட்ட ரெங்கமா விடியலில் விழித்துக் கொண்ட பொழுதே செரோக்கியும் விழித்தெழுந்தான்.
திடுதிப்பென அவன் தன் மனையை விட்டும் வெளியேறி குகைக்கருகே வந்தபோது அங்கிருந்த கற்களில் விருந்தாளிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான்!
அவர்கள் வரைபடமொன்றை வைத்துகொண்டு அதில் எதையோ அலசி ஆய்ந்துகொண்டிருந்தனர். செரோக்கி அங்கு சென்றபோது அதனை அவனிடம் காட்டி தற்போது தாங்களிருக்குமிடத்தை பேனாமுனையால் குறிப்பிட்டு, தாங்கள் போகவேண்டிய தீவுப்பகுதியையும் சுட்டிக்காட்டினர்.
வரைபடத்தில் வனப்பகுதி வேறாக்கப் பட்டு எல்லைக் கோடிடப்பட்டிருந்தது! பூகோளவியலில் அதிதேர்ச்சி பெற்ற ஒருவனைப்போல், காம்பீரமாகப் பேனாவைக்கையிலெடுத்த செரோக்கி, தாம் தற்போது நிலைகொண்டிருக்கும் வனப்பகுதியின் எல்லைக்குப் புள்ளியிட்டுவிட்டு, அதனை அடுத்த ஒரு நகர்ப்பகுதியைச் சுட்டிக்காட்டி, அங்கு அவர்களைக் கொண்டுபோய் விடுவதாக தனக்கேயுரிய கொச்சை ஆங்கிலத்தில் கூறினான்!
அவனது பாஷையைப் புரிந்துகொண்ட அம்மனிதர்கள், பயணத்தைத் தொடர ஒப்புக் கொண்டவர்களாகத் தங்களைத் தயார் படுத்தலாயினர்!
அந்த “மொழிவலவன்” தான் புராதன நூலிலிருந்து கலட்டி எடுத்து மறைத்து வைத்திருந்த இரண்டு தாள்களும் பத்திரமாக இருக்கின்றதா என்பதை ஒருமுறை சரி பார்த்துக் கொண்டவனாக இறுதியாகக் குகையை விட்டும் வெளியேறினான்!
தனது நகரத்து உடைகளையும், தான் அச்சகத்தில் வேலை செய்து கிடைத்த ஊதியத்தில் மிகுதியாகவிருந்த காசுத்தாள்களையும் தன்னோடு எடுத்துக்கொண்ட செரோக்கி, அவர்களைக் அழைத்துக் கொண்டு “மரவேரடி” க்கு வந்து சேர்ந்தான்!
அங்கே அவன் தனது வனக்கோலத்தைக் களைந்துவிட்டு நகரவேசமிட்டுக்கொண்டான்! கலட்டிய துணிகளை மரவேருக்குள் பதுக்கி வைத்துவிட்டு, அந்த மனிதர்களைக் கூட்டிக் கொண்டு, தான் இரு சக்கர வண்டி பழகிய பாதையில் “ஸ்ட்ரோபெர்ரி உணவகம்” நோக்கி நடக்கலானான்!
அவனும் அவனது நண்பன் இர்வினும் பலமுறை சென்று “ஸ்ட்ரோபெர்ரி” பானமருந்திய உணவுச்சாலை அது.
அவன் இருசக்கர வண்டி கற்றுக்கொண்டிருந்த வேளை, ஒருமுறை காயமடைந்தபோது, அவனுக்கு ஆறுதல் கூறி, அவனது ரணத்திற்கு மருந்திட்ட அந்த அழகிய நங்கை கவுண்டரில் இருந்தபடி புன்னகைக்கலானாள்! நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் வேறும் சில நகரத்து மனிதர்களோடு செரோக்கியைக் கண்டதும் அவள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்!
(தொடரும்)
0 Comments