குறள் 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
ஒருத்தன் வறுமையிலயே தொடர்ந்து கெடந்தாம்னா, அது அவனோட அறிவை மழுங்கடிச்சிறும்.
ஒருத்தனுக்கு மறதிங்கிறது வந்துட்டுன்னா, அது அவனோட பெருமையை அழிச்சிறும்.
குறள் 534
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
மாப்ள.. ஒருத்தன் எப்பமும் உள்ளுக்குள்ள பயந்துகிட்டு ஒரு தொடை நடுங்கியா இருந்தாமுன்னா, வேற யாரும் எந்த பாதுகாப்பு கொடுத்தாலும் ஒரு வகைக்கும் ஆகாது. அது மாதிரி தான் மாப்ள, ஒருத்தன் எவ்வளவு பெரிய பொறுப்புல இருந்தாலுஞ் சரி, அவனுக்கு இந்த கேடு கெட்ட மறதி மட்டும் இருந்து தொலைச்சுதுன்னா, அவன் சல்லிக் காசுக்கு பெற மாட்டான்.
குறள் 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
மகிழ்ச்சியா இருக்கும் போது, மமதையில, செய்யவேண்டிய கடமையை மறந்துட்டு இருக்க நேரத்துல, இதுக்கு முந்தி, இந்த மாதிரி நடந்து, வம்பாப் போனவங்களை நெனச்சுப் பார்த்து தங்களை திருத்திக்கிடணும். புரிஞ்சிச்சா மாப்ள.
குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
மருமவன.. இந்த ஒலகத்துல இருக்க உயிரினங்கள்லாம் மழையை நம்பித்தான் உசுரோடு இருக்குதுங்க.
அது மாதிரி தான் மருமவன... ஆட்சில இருக்கவொ நல்லாட்சி தருவாங்கங்கிற எதிர்பார்ப்புல தான் பொதுமக்களும் இருக்காவொ.
குறள் 543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மருமவன ... அறவோர் எத்தனையோ நூல்கள் எழுதியிருப்பாவொ. எத்தனையோ நல்ல அறவழிகளை சொல்லி இருப்பாவொ. இதுக்குல்லாம் அடிப்படையா இருக்கது நம்மை ஆளும் அரசாங்கத்தோட நேர்மையான ஆட்சி தான் மருமவன.
குறள் 544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
ஏல மாப்ள.. ஒரு நாட்டுல பல தரப்பட்ட மக்கள் இருப்பாவொ. அவொ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும். அரசாங்கத்துல பொறுப்புல இருக்கவொ இந்த மாதிரி ஆளுங்க எல்லோரையும் அரவணைச்சு ஆட்சி செஞ்சாவொன்னா, இந்த ஒலகமே அந்த அரசாங்கத்தை போற்றி பின்பற்றும் மாப்ள.. (தொடரும்)
0 Comments