71 பெரிதினும் பெரிது கேள்!
எண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் வந்தாலும்
கண்போன்ற கல்வியெனும் ஒப்பற்ற செல்வம்போல்
மண்ணுலகச் செல்வங்கள் இங்கே நிலைக்காது!
என்றுமே கல்வி பெரிது.
72 பேய்களுக்கு அஞ்சேல்
தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று நாளும்
மனக்கோட்டை கட்டியே ஆணவத்தின் தோளில்
தினவெடுத் தாடும் வெறிகொண்டோர் தம்மை
மனத்தாலும் தீண்டாதே இங்கு.
73 பொய்ம்மை இகழ்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித்தான்
நல்லவர்போல் நாளும் நடிக்கின்ற வஞ்சகரை
எள்ளளவும் நம்பாதே! நட்பைத் தொடராதே!
பொய்மையைத் தூற்றவேண்டும் சொல்.
74 போர்த்தொழில் பழகு
தற்காத்துக் கொள்ளும் கலையறிதல் நல்லது!
அப்பப்பா வம்புகளைத் தூண்டிவிட்டுத் தாக்கவரும்
மட்டமான மாந்தருக்குத் தக்கபாடம் கற்பிக்க
தற்காத்துக் கொள்ளவேண்டும் பெண்
75 மந்திரம் வலிமை
இலக்குகளை நோக்கி விடாப்பிடி யாக
உளத்தினிலே தேக்கி முயற்சிகளில் மட்டும்
தளர்ச்சியே இன்றி உழைத்தாலே போதும்!
சுரந்துவரும் வெற்றி உணர்.
76 மானம் போற்று
அண்டிக் கெடுத்தல் ,துரோகம் புரிவது
தன்மானந் தன்னை இழக்கும் செயலாகும்!
உன்மானம் போக்கும் செயல்களை விட்டுவிடு!
தன்மானம் காத்தல் அறிவு.
77 மிடிமையில் அழிந்திடேல்
விரக்திக்குத் தூண்டுகின்ற ஏழ்மையும் ,ஏழ்மை
சுரக்கின்ற துன்பமும் சீண்டித்தான் பார்க்கும்!
களமிறங்கிச் சந்தித்து வாழவேண்டும்! வாழ்வை
இழக்காமல் வாழப் பழகு.
78 மீளுமாறு உணர்ந்து கொள்
சூழ்நிலைகள் பாதகமாய் மாறியதே என்றிங்கே
ஆழ்மனத்தில் சோர்வடைந்து போகாமல் சிந்தித்தே
சோர்வைக் களைந்தெறிந்தே பீனிக்ஸ் பறவைபோல்
வாழ்விலே மீண்டெழப் பார்.
79 முனையிலே முகத்து நில்
வேகத்தின் உச்சாணிக் கொம்பிலேறி நிற்கின்ற
தாகம் துணிவல்ல! நாளும் விவேகத்தின்
தேடலின் அஞ்சாமை துணிவாகும்! அத்தகைய
மாசற்ற பண்பே துணிவு.
80.மூப்பினுக்கு இடம் கொடேல்
மதுமைப் பருவமா! என்றஞ்சி வாழும்
கொடுமையை விட்டொழி! வாழ்க்கையில் நாமோ
உடுத்துகின்ற ஆடைபோல் நாமணியும் ஒன்றே!
ஒடுங்காதே! மூப்பை உதறு.
(தொடரும்)
0 Comments