Ticker

6/recent/ticker-posts

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-29 (வரலாறு-பாகம்-2)

மெததும்பற 29
தும்பறைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மெததும்பற செயலகப் பிரிவு 165.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும்,  94 கிராம அதிகாரிப் பிரிவுகளையும் 222 கிராமங்களையும் உள்ளடக்கியதாகும்.  2008ம் ஆண்டைய உத்தேச மதிப்பீட்டில்  67474 பேர் அங்கு வாழ்ந்ததாக பிரதேச செயலக அறிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.



2008ம் ஆண்டு  இனவாரியான  சனத்தொகையினர் - 
சிங்களவர் 50,100
தமிழர் 13,046
முஸ்லிம்கள் 4,262
வேறும்     66

தமிழ்க் குடிகளுள் கனிசமான எண்ணிக்கையினர் தோட்டத் தொழிலாளர்களாவர். அவர்களது எண்ணிக்கை 9,939 ஆகும். மெததும்பற பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அதிகாரிப் பிரிவுகளில் பின்வரும் எண்ணிக்கையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன.  

2004ம் ஆண்டு     2008ம் ஆண்டு
ஹிஜ்ராபுர 1370 1550
அம்பகஹலந்த 1061 1386
அம்பால 96  73
அல்லகொல 75 119
மொரகஹமுல 44  38
உடிஸ்பத்துவ 270 288

ஹிஜ்ராபுர:
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரத் பயணத்தை நினைவுகூர்வதாக அமைந்திருக்கும் ஹிஜ்ராபுர மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் காணிகளையும் வீடுகளையும் இழந்த மக்களுக்காக அரசாங்கத்தால்  ஏற்படுத்தப்பட்ட புதிய குடியிருப்புப் பகுதிகளுள் ஒன்றாகும்.  பிறந்த மண்ணைத் துறந்து சென்றவர்கள்  குடியேறிய புதிய பிரதேசத்திற்கு ஹிஜ்ராபுர எனப் பெயரிட்டுள்ளனர். 53 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தீரணமடைந்திருக்கும் புதிய குடியேற்றப் பகுதி, 1983ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்.

தும்பறைப் பிரதேசத்தின் பெரும் வர்த்தக ஜாம்பவானாகத் திகழ்ந்த கனவான் ஆ. மு. ஆ. முத்தலிப், கண்டியைச் சேர்ந்த திருவாளர் தோமஸ் முதலாளி இருவருக்கும் சொந்தமாக விளங்கிய பெருந்தோட்டப் பகுதிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு, புதிதாக அங்கு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.   இன்று சுமார் நூற்றிருபது  குடும்பங்கள் வாழும்  ஹிஜ்ராபுர குடியிருப்பில்  மஸ்ஜிதும், பாடசாலையும் அரசாங்;கத்தால் வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றது.

1992. 08. 14 திகதியில் ஆரம்பிக்கப்பட்ட ஹிஜ்ராபுர பாடசாலையில் தற்போது இருபத்தேழு  ஆசிரியர்கள்  பணிபுரிபுரிந்து வருவதுடன்  சுமார் 500 மாணவர்கள் கல்வியைத் தொடர்கின்றனர். 

ஹிஜ்ராபுர மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டபோது அதன் முதலாவது  தலைவராக விளங்கியவர் அதிபர் முஹம்மத் ஸக்கரிய்யா அவர்களாவார். தற்போது மஸ்ஜிதின் தலைவராகப் பணிபுரியும்  புரவலர் அல்ஹாஜ் எம். எம். எம். இஷ்ஹாக் அவர்கள் பிரதேசத்தின் சமூக, கல்வி, கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவராக விளங்குவதோடு,  அவரின் பெரும் முயற்சியில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபம்  மஸ்ஜிதுக்குப் பக்கத்தில் கம்பீரமாக எழுந்திருப்பதைக் காணலாம்.(தொடரும்)





Post a Comment

0 Comments