Ticker

6/recent/ticker-posts

பிரியந்த குமாரவின் கொலை குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்-பாகிஸ்தான் செனட் ஒருமனதாக தீர்மானம்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.

இந்தத் தாக்குதல் சமூகத்தின் தீவிரவாதப் பிரிவினரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும், இதனால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமானது இஸ்லாத்தின் கொள்கைகள், போதனைகள் மற்றும் கட்டளைகள், முகமது நபியின் நடைமுறைகள், ஒழுக்கங்கள், மனித விழுமியங்கள், பாகிஸ்தான் அரசியலமைப்பு, சமூகத்தின் சட்டங்கள், பழக்கவழக்கங்கள், நெறிமுறைகளை முற்றிலும் மீறுவதாகக் கூறப்படுகிறது.

பிரியந்த குமாரவின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், கொலைக் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சியல்கோட் சம்பவம் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பார்பர் ஓவன் தெரிவித்துள்ளார்.

செனட் சபை விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எதிர்காலத்தில் பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்காக குற்றவியல் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பார்பர் ஓவன் தெரிவித்துள்ளார்.  


Post a Comment

0 Comments