இல்லறத்தை இனிமையாக்கு!

இல்லறத்தை இனிமையாக்கு!


உரிமைகள் மற்றும் கடமைகள் இந்த
இரண்டையும் போட்டுக் குழப்பாமல் வாழ்ந்தால்
கருத்தொன்றி ஆண்களும் பெண்களும் வாழும்
ஒருநிலை காணலாம் இங்கு.

ஆண்களோ பெண்ணை அடிமையாய் எண்ணுவதும்
ஆண்களைப் பெண்கள் துச்சமாய் எண்ணுவதும்
போட்டி பொறாமை எடுத்தெறிந்து பேசுவதும்
கூட்டை எரிக்கும் நெருப்பு.

ஆண்களும் பெண்களும் விட்டுக் கொடுப்பதே
ஊனமற்ற வாழ்வை உளைச்சலின்றி ஏற்படுத்தும்!
தேன்கூடு என்ற குடும்பம் கலையாமல்
பார்த்தல் விவேகம் உணர்.

பெருந்தன்மை கோழைத் தனமல்ல! விட்டுக்
கொடுப்பவர்கள் கெட்டுத்தான் போவதில்லை! வாழ்க்கை
நடுத்தெருப் போட்டியல்ல! வெற்றிதோல்வி பார்க்க!
சிறுமையைத் தூக்கி எறி.

தந்தையும் தாயும்  குழந்தை வளர்ப்பிலே
கண்ணுங் கருத்துமாய் அக்கறை காட்டவேண்டும்!
இந்த இருவருக்கும் என்றும் பொறுப்புண்டு!
கொஞ்சம் தவறினாலும்  சேய்கள் மனம்நோகும்!
பின்னால் இடித்துரைப்பார்  பார்.

இரண்டு சிறகும் அசைந்தால் பறக்கும்
இயக்கத்தைப் போல இணையர் இருந்தால்
குடும்பப் பறவை உயர்ந்தே பறக்கும்!
இரண்டிலே ஒன்று இணங்க மறுத்தால்
இயக்கம் தடுமாறும்  இங்கு.


Post a Comment

Previous Post Next Post