திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-15

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-15


குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

மாப்ள.. ஒரு அரசாங்கம் பொதுமக்களை அரட்டி உருட்டி பயங்காட்டி கொடுமையான ஆட்சி நடத்துதுன்னு வச்சுக்க... அந்த அரசாங்கம், சீக்கிரமாமே முடிஞ்சு போவும். இது உறுதி மாப்ள. 

குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

மருமவன... கூடவே இருந்து குழி பறிப்பவனுவொ நம்ம கிட்டையே இருப்பானுவொ. எப்படா காலை வாரலாம்னு நேரம் பாத்துக்கிட்டு இருப்பானுவொ. அப்படிப்பட்டவனுவொ கிட்டயும் நாம பொறுமை காட்டணும். இந்தப் பண்பு ரொம்ப ஒசந்தது  மருமவன. 

குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

உள் நாட்லயும் சரி, வெளிநாட்லயும் சரி... யார் யாருக்கு, யார் யாரால, எங்கெங்க, எப்பப்ப, என்னென்ன, எப்பிடில்லாம் நடந்துக்கிட்டு இருக்குங்கிறது, அரசாங்கத்துக்கு வெலாவாரியா முழுசா தெரிஞ்சு இருக்கணும். வேவு பாக்குற இந்த வேலை தான் அவொளோட முக்கியமான வேலைகள்ல ஒண்ணா இருக்கணும். 

குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

மாப்ள... உளவுத் துறையுல வேலை பாக்கவொ இருக்காவொள.. அவொ வந்து சொந்தக் காரங்க, சொக்காரங்க, வேணுங்கவங்க, வேண்டாதவங்க ன்னு எந்த பாகுபாடுங் காட்டாம, 
உண்மையான தகவல்களை திரட்டணும். அப்பதான் மாப்ள, அவொளை நேர்மையான உளவாளிகள்னு வெளிய சொல்ல முடியும். 

குறள் 592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

மன உறுதி இருக்குல்லா.. நமக்கு அது தாம் மாப்ள இருக்கதுலயே நெலையான சொத்து.. 
மத்த சொத்துல்லாம் எப்பவாது வரும்.. சொல்லாம கொள்ளாம பொயிரும். அதுகள்லாம்  நெலையான சொத்து கெடையாது மாப்ள.

குறள் 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

மாப்ள.. எதையும் எப்படியும், செஞ்சு முடிக்கணும்னு வெறித்தனமா வேலை பாக்கவங்க இருப்பாங்கல்லா... அவங்களைத் தேடிப் போய், அவங்ககிட்ட பெருமை, உயர்வு, செல்வம்லாம், தன்னாப்ல, சேந்துக்கிடும் மாப்ளை. 

குறள் 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 

மாப்ள... எதப்பத்தியாவது நெனைய்க்கன்னு வச்சுக்கோ. அதுல ரொம்ப ஒயர்வானதைத்தான் நெனைய்க்கணும். அப்பிடி நெனைய்க்கிறதுல ஒண்ணு ரெண்டு அப்பிடி இப்பிடின்னு நடக்காமப் போயிரலாம். அதுக்காக .. உயர்வா நெனைய்க்கும் மனசை மட்டும் எப்பவும் தளர விட்றக் கூடாது மாப்ள. 
(தொடரும்)




Post a Comment

Previous Post Next Post