Ticker

6/recent/ticker-posts

பாவப்பட்ட பூமி...!


பசுமையைப் போர்த்திய 
அழகான பூமி
பாவப்பட்ட மனிதர்களால்
அழுக்காகிப் போனது.

பசி என்றும்
பிணி என்றும்
மாறு வேடங்களில்
மனிதர்களைப் 
பழி வாங்குகிறது
பாவங்கள்.

காலநிலை
நீலவானத்தை
அடிக்கடி  
நிறம் மாற்றி விடுகிறது.

சூரியனைக் காணாத
பகல்களும்
சந்திரனைக் காணாத
இரவுகளும்
ஒப்பாரி வைத்து 
அழுகின்றன.

ஆகாயம் 
அசம்பாவிதம் செய்கிறது.
அழுக்கைச் சுமந்த 
மனிதர்களால்
அடிக்கடி 
அசிங்கப் படுகிறாள்
பூமித் தாய்.

தினமும் 
பாவத்தில் புரண்டு
இறை சோதனைகளோடு
மல்லுக் கட்டுகிறான் 
மனிதன்.

தகுதியற்றவர்களுக்கு
தன் சுதந்திரத்தை
தாரைவார்த்து விட்டு
தலை குணிந்து நிற்கிறான்
அப்பாவி வாக்காளன்.

கொடுத்த வாக்குறுதிகளை
புதுப்பித்துக் கொள்ள
அடுத்த தேர்தலுக்காகக்
காத்திருக்கிறான்
அரசியல்வாதி.

சாக்கடை என்று தெரிந்தும்
அதில் சந்தனத்தைத் தேடுகிறான்
அப்பாவித் தொண்டன்.

இருப்பவன்
இருப்பவனோடு
சேர்ந்து கொள்கிறான்.
இல்லாதவனை
எப்போதுமே மிதிக்கிறது
சமூகம்.

மாடிவீடுகளில்
அழுக்கு மனிதர்களையும்
குடிசைகளில்
குணமுள்ள மனிதர்களையும்
வாழ வைத்திருக்கிறது
காலம்.

ஏழை வீடுகள்
எப்போதும் இருளாகவே
இருக்கட்டும் என்று
வேறு கிரகத்துக்கு
இடம் மாறி விட்டது
விடியல்.

அடுப்பங் கரைகளில்
தலை விரித்தாடுகிறது
பட்டிணிப் பேய்.

எந்த ஒரு வீட்டையும்
விட்டு வைக்காமல்
அட்டகாசம் செய்கிறது
விலைவாசி.

திடீர் தாக்குதல் நடத்தி
சமையலறைகளில்
தீவிரவாதம் செய்கிறது 
கலப்படம் செய்யப்பட்ட 
எரிவாயு.

சில வீடுகளில் 
முன்கூட்டியே வந்து
உட்கார்ந்து கொண்டது
வறுமை.

சில வீடுகளில் 
திண்ணையில் படுத்திருக்கிறது
வறுமை.

பொதுவாகவே
எல்லா வீடுகளுக்கும்
அழையா விருந்தாளியாக
அடிக்கடி வந்து போவது
வறுமை மட்டுமே.

எத்தனை சோதனைகள் 
வந்தாலும்
"எதுவுமே எனக்கில்லை" என
இன்னும் அலட்சியமாகவே
வாழ்கிறான் மனிதன்.

தண்டிக்க நினைத்தால்
ஒரு நொடி போதும்
படைத்தவனுக்கு.

அவ்வப்போது தோன்றும்
இடியும் மின்னலும் 
தாக்குதல் நடத்தினாலே
சாம்பலாகிப் போவான்
மனிதன்.

பச்சைத் தாவரங்களும்
பாவமறியா விலங்குகளும்
அவற்றோடு
சில நல்ல மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருப்பதால்
மட்டுமே
இன்னும் அழியாமலிருக்கிறது 
அழகான இந்த பூமி.

Post a Comment

0 Comments