90 ராஜஸம் பயில்
நற்செயலைத் தேர்ந்தெடு! தேர்ந்தெடுக்கும் நற்செயலில்
விற்பன்ன ராவதற்கு நாளும் கவனமுடன்
முற்றும் நுணுக்கத்தைக் கற்றுக்கொள்! அத்துறையில்
அற்புதமாய் முன்னேற லாம்.
91 ரீதி தவறேல்
நேர்வழியா உன்வழி? சற்றும் கலங்காதே!
ஆர்த்தெழும் பேரலைகள்! ஆடிவரும் மாமலைகள்!
சூழ்நிலையைச் சந்தித்தே வெற்றிகொள்! மாறிவிடும்!
நேர்வழியே வெல்லும் நிமிர்ந்து.
92 ருசி பல வென்று உணர்
அய்ம்புலன்கள் தூண்டும் சுவைகளுக் கேற்றவண்ணம்
துள்ளி நடம்புரிந்தால் கோளாறு சூழ்ந்துவிடும்!
எல்லாம் அளவுடன் எல்லைக்குள் வென்றிருந்தால்
தொல்லை நெருங்கா துணர்.
93 ரூபம் செம்மை செய்
உனக்குள் இருக்கின்ற நற்பண்பை மேலும்
மணக்கவைக்க மேம்படுத்திச் செம்மைப் படுத்த
தினமும் முயற்சி எடுத்தால் உலகம்
குணக்குன்(று ) எனப்போற்றும் பார்.
94 ரேகையில் கனி கொள்
உள்ளங்கை கோடுகளும் மேடுகளும் வாழ்க்கையைத்
தெள்ளத் தெளிவாய்க் கணிக்கலாம்! மாந்தர்கள்
எல்லாம் அவைசெயல் என்றே முயற்சிக்குத்
தொல்லை கொடுத்தால் சினந்தே முறியடித்து
வெல்லவேண்டும் சூழலைத் தான்.
95 ரோதனம் தவிர்
வேதனை வேழங்கள் முட்டுகின்ற நேரத்தில்
சோதனை நாகங்கள் சீறுகின்ற வேளையில்
ஊடறுக்க எத்தனித்துப் பொங்கிவரும் கண்ணீரைச்
சூசகமாய் இங்கே தவிர்.
96 ரௌத்ரம் பழகு
எறும்பைத் தடுத்தால் எறும்பும் சினக்கும்!
பொறுமைக்கும் எல்லை இருக்கிறது! மீறி
நசுக்கிப் பிழிந்தால் சினந்தெழ வேண்டும்!
தடுப்பதற்கு கோபம் பழகு.
97 லவம் பல வெள்ளமாம்
குறுந்தொகையை நாள்தோறும் சேமித்து வைத்தால்
நெடுந்தொகை யாகப் பல்கிப் பெருகி
சிறுதுளி பெருவெள்ளம் போல் மாறி இங்கே
இடுக்கண் களையும் உணர்.
98 லாவகம் பயிற்சி செய்
செயலிலே ஈர்ப்புவரும்! அத்தகைய ஈர்ப்பு
பழக்கமாகும்! அந்தப் பழக்கம் பயிற்சிக்
களமாகித் தேர்ச்சிகொள்ள வைக்கும்! முழுமை
அரணாக மாறிநிற்கும் காத்து.
99 லீலை இவ்வுலகு
வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும்
சுற்றிச் சுழலும் விளையாட்டு மைதானக்
கட்டமைப்பு கொண்டதே இவ்வுலக வாழ்க்கையாம்!
சுற்றுகள் மாறிவரும் பார்.
(தொடரும்)
0 Comments